வேலை வாசற் கதவை தட்டுமா? | Kalvimalar - News

வேலை வாசற் கதவை தட்டுமா?

எழுத்தின் அளவு :

70 சதவீதத்திற்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் ‘சிட்டி’யை விட்டு வெளியில் இருக்கின்றன. படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் ‘சிட்டி’யில் அமைந்துள்ளன. இந்த இடைவெளி கிராமப்புறங்களுக்கும், நகர்புறங்களுக்குமான வேலை வாய்ப்பில் வேறுபாட்டை உருவாக்குகிறது.

வாய்ப்புகளில் வேறுபாடு

தங்களுக்கான சிரமத்தை தவிர்க்க, நகரத்திற்குள் இருக்கும் கல்லூரிகளில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடத்தவே தொழில் நிறுவனங்கள் பெரிதும் விரும்புகின்றன.

இது ஒருபுறம் இருக்க, நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தேவைகள் குறித்து பெருநகரங்களில் உள்ள மாணவ, மாணவிகள் ஓரளவு அறிந்துவைத்துள்ளனர். அவர்களுக்கு வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

நிறுவனங்களும், ‘சிறு பகுதிகளில் நாங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் உள்ள ஆட்கள் கிடைக்கமாட்டார்கள்’ என்று எண்ணி, அப்பகுதிகளுக்கு சென்று ஆட்களை தேர்வு செய்ய தயங்குகின்றன. இந்நிலையைபோக்கி, அனைவருக்கும் போதுமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.

தேவை விழிப்புணர்வு 

நிறுவனங்கள், தங்களுக்கு தகுந்தாற்போல் ஆப்டிடியூட், டிராயிங், டிசைன், டெக்னிக்கல் போன்ற பல்வேறு தேர்வுகளை நடத்துகின்றன. இவற்றில் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து, ஊர் பாரபட்சமின்றி, அனைத்து மாணவர்களும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பெயர் பெற்ற பிரபல நிறுவனங்களை மட்டுமே பெரும்பாலான மாணவர்கள் அறிந்துவைத்துள்ளனர். பிரபல நிறுவனங்களைவிட சிறந்த வாய்ப்புகளை வழங்கும் எத்தனையோ நிறுவனங்கள் உள்ளன. அவற்றை இன்றைய மாணவர்கள் அறிவதில்லை; அறிய முயலுவதும் இல்லை. ஐ.டி., நிறுவனங்கள் மட்டுமல்ல, அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தும். ‘தங்களது படிப்பிற்கு எந்த நிறுவனங்களில் என்னென்ன வேலை செய்ய முடியும்’ என்பதை அறிந்துகொள்வது, அவசியமல்லவா!

உதாரணமாக, மெக்கானிக்கல் படித்த பெண்களை, டிசைனிங் வேலைக்கு சில நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. பொதுவாக வெகு குறைவான பெண்களே மெக்கானிக்கல் படிப்பை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில், ‘நீங்கள் படித்த துறையிலேயே உங்களுக்கு வேலை இருக்கிறது வாருங்கள்’ என்றால், ‘தற்போதுதான் பள்ளியில் ஆசிரியர் வேலையில் சேர்ந்தோம்; முன்பே சொல்லியிருக்கலாமே சார்...’ என்கின்றனர்.

நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தேவை குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தானே, இவ்வாறு வேறு வழியின்றி கிடைத்த வேலைக்கு செல்கின்றனர்?

‘இன்டர்வியூ’ தரும் அனுபவம்

மறுபுறம், எந்தவிதமான முன் தயாரிப்பும் இல்லாததால், பெரும்பாலனோர் ‘இன்டர்வியூ’ல் சோபிக்காமல் போகின்றனர். நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பே, அந்த நிறுவனத்தின் தன்மை குறித்தும், எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் குறித்தும் அறிந்துகொண்டோம் என்றால், வாழ்க்கையே மாறிவிடும்.

15 சதவீதம் வரையிலான பட்டதாரிகள் தான் போதிய வேலை வாய்ப்புத் திறன் பெற்றுள்ளதாக கூறுப்படுகிறது. ஆனால், எனது அனுபவத்தில் 35 சதவீதம் வரையிலான மாணவர்களுக்கு வேலைத் திறன் இருப்பதை உணர்கிறேன். இதற்கு முக்கிய காரணம், இன்டர்வியூ-ல் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் தான். வேலை வாய்ப்பு முகாம்களில் மாணவர்கள் ஓரிரு முறை பங்கேற்றாலே, நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

பேச்சுத்திறன்

கிராமப்புற மாணவர்களுக்கு போதிய ‘கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்’ இல்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், அத்தகைய மாணவர்களுக்கு டெக்னிக்கல் திறன் அதிகம் உள்ளது. ஐ.டி., நிறுவனங்களில் தான் பேச்சுத் திறன் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுத் திறனும் அவசியம் தான். ஆனால், ஐ.டி., நிறுவனங்களுக்கும் ‘டெக்னிக்கல்’ திறன் அவசியம் தானே!

இதில் உள்ள முக்கிய பிரச்னை என்னவென்றால், கல்லூரி பாடத்திட்டம் சி, சி++, ஜாவா போன்ற அடிப்படையோடு நின்றுவிடுகிறது. ஐ.டி., நிறுவனங்களும், அதன் தயாரிப்புகளும் டாட்நெட், பிஎச்பி, சிசார்ப் என வேறு விதத்தில் சென்றுகொண்டிருக்கிறது. சிறந்த வேலை கிடைக்க அடிப்படையோடு நின்றுவிடக்கூடாது.

உங்கள் துறை சார்ந்த நிறுவனங்களையும், அவற்றின் தேவையையும் அறிந்து, அதற்கேட்ப உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்; அதுவே நல்ல வேலை கிடைக்க வழி.

-இம்மானுவேல் ஜஸ்டஸ், சி.இ.ஒ., எம்ப்லாயபிலிட்டிபிரிட்ஜ்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us