நேர்காணலில் நடுங்க வேண்டாம்! | Kalvimalar - News

நேர்காணலில் நடுங்க வேண்டாம்!

எழுத்தின் அளவு :

யாராக இருந்தாலும் நேர்காணல் என்றால் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கத்தான் செய்கின்றன.

‘இன்டர்வியூவுக்கு நல்ல பேண்ட், ஷர்ட், டை, ஷூ போட்டுக்கிட்டு போகணும். நிறைய தயார்படுத்திக்கணும். கேள்வி கேட்டால் பட் பட்டுன்னு பதில் சொல்லனும்’ என அறிவுரை சொல்லியே இளையதலைமுறையை பயந்தாங்கொள்ளிகள் ஆக்கிவிட்டோம். சில நுட்பமான உண்மைகளை உணர்ந்து கொண்டால், நேர்காணலில் பயப்பட தேவையில்லை.

ஒரு நேர்காணலுக்கு எப்படி தயார்படுத்திக் கொள்வது? 27 வயதில் நேர்காணலுக்கு போகிறீர்கள் எனில், உங்களுடைய 27 ஆண்டு வாழ்க்கைதான் நேர்காணலுக்கான ஆயத்தம். நேர்காணலுக்கு என தனியாக படிக்க வேண்டாம். எந்த நிறுவனத்துக்கு செல்கிறீர்களே அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

‘இன்டர்வியூவுக்கு எப்படி போனாலும் ஒரு வழி பண்ணிருவாங்க’ என்று சில அனுபவசாலிகள் வயிற்றைக் கலக்கலாம்.

காலையில் எழுந்து பற்பசையை பிதுக்கும் போது தீர்ந்து போயிருக்கிறது. முதல்நாள் வாங்க வேண்டும் என நினைத்து மறந்துவிட்டீர்கள். அதை கஷ்டப்பட்டு பிதுக்கி உள்ளே ஒட்டியிருப்பதை எடுத்து, அன்றைய பொழுதை ஓட்டிவிடுவீர்கள். அடுத்தநாள் புதிய பற்பசை வாங்கி விட்டீர்கள். அதை எப்படி எடுப்பீர்கள்? மிக மென்மையாக, குழாயின் ஓரத்தில் ஒரு ‘அமுக்’ அவ்வளவுதான்.

இதையேதான் நேர்காணலில் செய்கிறார்கள். ஒருவர் நடை, உடை, பாவனைகளால் வெத்துவேட்டு என காட்டிக் கொண்டால், காலியான பற்பசையை பிதுக்குவது போல் அழுத்தம் தருவார்கள். திறமை எங்காவது ஒட்டிக் கொண்டிருக்கிறதா என வெளிய கொண்டுவர பாடுபடுவார்கள். அதேசமயம் சான்றிதழ், பேசும் பாணி, புலமை, நடை, உடை, பாவனைகளில் தகுதிகள் நிறைந்தவர் என தெரிந்தால், மென்மையாக பேசி உள்ளே இழுக்க பார்ப்பார்கள்.

நேர்காணலுக்கு சரியான ஆடையை அணிந்து செல்வதைவிட, சரியான மனநிலையை அணிந்து செல்ல வேண்டியது மிக முக்கியம். ‘எப்படியாவது இந்த வேலையை கொடுத்திருங்கய்யா’ என சிலர் கண்ணீர் உகுப்பார்கள். சுயமரியாதையை அடகு வைப்பவர்களை எந்த நிறுவனமும் சீண்டாது.

சிலர் ‘என்னை எடுக்காவிட்டால் கம்பெனிக்குத்தான் நஷ்டம்’ என சவால் விடுவார்கள். அவர்களையும் நிறுவனங்கள் ஒதுக்கிவிடும்.

அது சரி, எந்த மனநிலையுடன் செல்ல வேண்டும்? முதலில் நம்பிக்கை இருக்க வேண்டும். உங்களுக்கு எப்படி வேலை தேவைப்படுகிறதோ, அதைப்போல் நிறுவனத்துக்கு வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நல்ல வேலையில் அமர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டுமே என பொறுப்பு இருக்க வேண்டும்.

தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். சம்பந்தம் பேச வந்தவர்களிடம் எப்படி பேசுவீர்கள்? என் தங்கையை போல் பெண்ணை உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது என அகங்காரமாக பேசினால் சம்பந்தம் முறிந்துவிடும்.

அதேசமயம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கெஞ்சினால், ‘பெண்ணுக்கு ஏதோ குறை இருக்கிறது’ என போய்விடுவார்கள். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட மனநிலையில் பேசுவீர்கள் அல்லவா? அதே போல்தான் நேர்காணலையும் எதிர்கொள்ள வேண்டும்.

‘நீ என் பொதுமேலாளர் பதவிக்கு உலை வைக்கலாம். அதனால் உன்னை வேலைக்கு எடுக்க பயமாக இருக்கிறது’ விற்பனை பிரதிநிதிகளுக்கான நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்வி இது.

‘சேச்சே அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்’ என மழுப்பலான பதில் சொன்னவர்களை கழித்துவிட்டார்கள்.

ஒரு இளைஞனின் பதில் வித்தியாசமாக இருந்தது. ‘ஆமாம், உங்கள் பதவிக்கு விரைவில் வந்துவிடுவேன், அதற்குள் நிறுவனம் வளர்ந்து, நீங்கள் நிர்வாக இயக்குனர் ஆகியிருப்பீர்கள்’ என பதிலளித்தான்.

அவனுக்குத்தான் வேலையை கொடுத்தார்கள் என சொல்லவும் வேண்டுமா?

- வரலொட்டி ரெங்கசாமி

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us