அடுத்த ஆண்டு ஐ.ஐ.எம்., உள்ளிட்ட உயர் நிறுவனங்களில் சேர எம்.பி.ஏ., வுக்கான கேட் தேர்வு எழுத விரும்புகிறேன். அதற்கு நான் எப்படி தயார் செய்ய வேண்டும்? | Kalvimalar - News

அடுத்த ஆண்டு ஐ.ஐ.எம்., உள்ளிட்ட உயர் நிறுவனங்களில் சேர எம்.பி.ஏ., வுக்கான கேட் தேர்வு எழுத விரும்புகிறேன். அதற்கு நான் எப்படி தயார் செய்ய வேண்டும்?ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கேட் போன்ற தேர்வு எழுதவிரும்புவோர் இதற்காக பல மாதங்கள் தயாராக வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறீர்கள். இதை எழுதுவோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்தே வருகிறது. இந்த ஆண்டு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். ஏறத்தாழ 3 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதிலிருந்தே போட்டி எவ்வளவு கடுமையானது என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஐ.ஐ.எம்., தவிர 100 மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களும் கேட் ஸ்கோரை தங்களது சேர்க்கைக்காக பயன்படுத்துகின்றன.

கேட் மூலமாக நீங்கள் எம்.பி.ஏ.,வில் சேரும் டாப் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் மிகச் சிறப்பான வேலை வாய்ப்புகளை எப்போதும் தந்து வருவதால், கேட் தேர்வின் கேள்விகள் முற்றிலும் கணிக்க முடியாதவையாக இருக்கின்றன. ஆண்டு தோறும் புதிய முறையில் கேள்விகள் இடம் பெறுகின்றன. ஆனால் இந்த ஆண்டு கேள்விகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இந்த ஆண்டு கேள்விகளில் கணிதம் மிகக் கடினமாக உணரப்பட்டது. டேட்டா இன்டர்பிரடேஷன் பகுதியில் அதிக கணக்கீடுகள் தேவைப்பட்டன. வெர்பல் பகுதியில் கேள்விகள் யோசிக்க வைக்கும் விதத்தில் அமைந்தன.

தரப்படும் நேரத்திற்குள் எவ்வளவு அதிகமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ அதுவே அறிவுறுத்தப்பட்டது. ஒரு கேள்விக்கு பதிலளிக்க தரப்படும் 2 நிமிடத்திற்கும் சற்றே அதிகமான கால அவகாசம் போதுமானதாகவே கருதப்படுகிறது. ஆனால் பல மாதங்களுக்கு இதற்காக தயாராகியிருப்போருக்கு மட்டுமே இது சாத்தியமாக இருக்கிறது.

நல்ல பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து தொடர்ந்து தயாராகும் இளைஞர்களுக்கு கேட் தேர்வில் வெற்றி என்பது ஒன்றும் முடியாத இலக்கல்ல.

2008ம் ஆண்டு கேட் தேர்வில் பெரிய அளவில் மாறுதல் இருக்காது என்றே துறை ஆலோசகர்கள் கருதுகிறார்கள். ஜி.ஆர்.இ., ஜிமேட் போன்ற பன்னாட்டு தேர்வுகளின் தரத்தில் தான் கேட் தேர்வும் அமைந்திருக்கிறது என்பதால் கேள்விகளின் எண்ணிக்கை மாறும் வாய்ப்பு குறைவு என இவர்கள் கருதுகிறார்கள். ஆனால் விரிவாக விடையளிக்கும் பகுதி இடம் பெறலாம். இதற்கு பதிலான வேறொரு பகுதியும் கூட இடம் பெறலாம். எனவே இவற்றை மனதில் கொண்டு தயாராக முயலவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us