சென்னை: பள்ளி வாகன கட்டண உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழக உள்துறைச் செயலரிடம் இன்று அளிக்க, தனியார் பள்ளி வாகனங்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னையில் மட்டும் 7,000 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள், அதற்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, தமிழக தனியார் பள்ளி வாகனங்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கூட்டம் நடக்கும் என, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, சென்னை கே.கே., நகரில் நேற்று மாலை 4 மணியளவில் நடக்கவிருந்த கூட்டத்தில் பங்கேற்க, வாகன உரிமையாளர்கள் மற்றும் பெற்றோர் திரளாக வந்தனர். குறிப்பாக தமிழக உள்துறைச் செயலர் ராஜகோபாலை சந்தித்து, தனியார் பள்ளி வாகன கட்டணம் உயர்வு, பள்ளி வாகனங்களுக்கான நெறிமுறைகளை ஒழுங்குபடுத்துவது உட்பட சில கோரிக்கைகளை மனுவாக அளிக்க முடிவு செய்தனர்.