ரீடெயில் துறை வாய்ப்புகள் பற்றி கூறவும். | Kalvimalar - News

ரீடெயில் துறை வாய்ப்புகள் பற்றி கூறவும். டிசம்பர் 12,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

தற்போது செய்திகளில் அதிகம் இடம் பெறுவது இந்தத் துறை தான். இதில் நேரடி அன்னிய முதலீட்டை அதிகரிக்க நடப்பு பார்லிமென்ட் குளிர்காலத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

ரீடெயில் துறை என்பது நமது அந்த கால பலசரக்குக் கடை போன்ற சமாச்சாரம் தான். இந்த காலத்துக்கேற்ப கடைகள் நவீனமாகவும் வசதியுடையதாகவும் இவை மாறியிருக்கின்றன. இதற்கான முதலீடு என்பது முன் போல அல்லாமல் இப்போது பெரிய அளவில் தேவைப்படுகிறது.

அதாவது சில ஆயிரங்கள் இருந்தால் போதும் என்பது மாறி பல லட்சங்களோ அல்லது கோடிகளோ தேவைப்படும் துறையாக இது மாறியிருக்கிறது. இன்றைய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமுதாய கலாசார மாறுதல்களுக்கேற்ப இன்று சமையல் எண்ணெய் வாங்கும் கடையிலேயே மொபைலுக்கு ரீசார்ஜ் போட முடிகிறது. காய் வாங்கும் கடையிலேயே கார் கூட வாங்க முடிகிறது.

இதில் இந்திய அளவிலும் உலக அளவிலும் இயங்கும் மிகப் பெரிய நிறுவனங்கள் கால் பதித்திருக்கின்றன. ரிலையன்ஸ், வால்மார்ட் போன்றவை தான் இவை. இதைப் பற்றி எழும் சர்ச்சைகளைத் தாண்டி சாதாரண பொது மக்களுக்கு இது பலன் தருகிறதா இல்லையா என்பதே இப்போது முக்கியம். ரீடெயில் துறையில் 2 முக்கிய பணிகள் நடைபெறுகின்றன.

ஒன்று கொள்முதல் பணிகள். அதாவது பெரிய ரீடெயில் நிறுவனங்களின் விற்பனைக்கு தேவைப்படும் பொருட்களை மொத்தமாக வாங்குவது. இப்படி வாங்கப்படும் பொருட்களை விற்பனை செய்வது மற்றொரு பணி. இவ்விரண்டு பணிகளுக்குமே அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். இன்று ரீடெயில் துறையில் பணி புரிய விரும்புவோர் அதிகமாக இருக்கின்றனர்.

அடிமட்டத்தில் விற்பனையாளராக பணி புரிய சிறப்புத் தகுதி எதுவும் தேவையில்லை என்றாலும், அடுத்தடுத்த உயர்ந்த பணிகளைப் பெற்றிட ரீடெயில் சிறப்புப் படிப்புகளைப் படிப்பது மிக அவசியம். இப்போது பல நிறுவனங்கள் இந்த படிப்புகளை தர தொடங்கியிருக்கின்றன.

சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாது, மதுரை போன்ற 2ம் நிலை நகரங்களில் கூட ரீடெயில் படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஹைபர்மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், ஹோல்சேல் சூப்பர் பஜார் என ரீடெயிலின் பல நிலை விற்பனை மையங்களிலும் சிறப்பான பணி வாய்ப்புகள் இருப்பதால் இதில் பட்டப்படிப்போ டிப்ளமோவோ சான்றிதழோ எதைப் படித்தாலும் நல்ல எதிர்காலம் உண்டு.

பிக் பஜார், ஜே.சி. பென்னி, டெஸ்கோ, ஷாப்பர்ஸ் ஸ்டாப், ரிலையன்ஸ், ஐ.டி.சி. என நம் ஊர்களிலேயே இப்போது வெகு சாதாரணமாக ரீடெயில் கடைகளை பார்க்க முடிகிறது. எனவே ரீடெயில் துறை எதிர்காலத்துக்கான சிறப்புத் துறை என்பதில் சந்தேகமில்லை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us