இளைஞர்களிடம் ஐ.டி., மவுசு குறைகிறது? | Kalvimalar - News

இளைஞர்களிடம் ஐ.டி., மவுசு குறைகிறது?ஆகஸ்ட் 22,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

முன்பெல்லாம் இன்ஜினியரிங் மற்றும் நிர்வாகவியல் படிப்பு முடித்த இளைஞர்கள் ஐ.டி., துறையையே தங்கள் கனவுக் கோட்டையாக நினைத்து வந்தார்கள். ஆனால் சர்வ தேசப் பொருளாதார நெருக்கடி இந்த நிலையை மாற்றிவிட்டது.

நாள் தோறும் உற்பத்தி, வங்கித் துறைக்கு செல்ல ஆசைப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்து விட்டதால் ஐ.டி., நிறுவனங்களுக்கு திறன் பற்றாக்குறை ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. எனினும் இன்றும் +2 முடிக்கும் நமது மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இன்ஜினியரிங் படிப்பில், அதிலும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பதையே விரும்புகின்றனர். இவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்களது பெற்றோர் விரும்புகின்றனர்.

தங்களது பிள்ளைகளால் இந்தப் படிப்பை படிக்க முடியுமா, பிளஸ் 2ல் குறைவான மதிப்பெண் பெற்றிருப்பதால் இன்ஜினியரிங் படிப்பு கடினமாக இருக்காதா போன்ற எந்த யோசனையும் இல்லாமல் பிள்ளைகள் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்றே அவர்கள் நம்புகின்றனர். ஆனால் ஐ.டி., நிறுவனங்கள் எப்படி உள்ளன?

ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது, ஊதிய விகிதங்களை இறுக்கிப் பிடிப்பது போன்ற முயற்சிகளை ஐ.டி., நிறுவனங்கள் கடந்த சர்வ தேசப் பொருளாதார நெருக்கடி காலத்தில் கையாண்டன. ஆனால் இந்த நடவடிக்கைகள் இளைஞர்கள் மத்தியில் ஐ.டி., துறை குறித்த எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஐ.டி., துறை நிறுவனங்களின் ஊதியங்களுக்கு நிகராகத் தற்போது உற்பத்தி நிறுவனங்களும் இளைஞர்களுக்கு ஊதியங்களை வழங்கத் துவங்கிவிட்டன. உதாரணமாக இந்த நிறுவனங்கள் தற்போது திறன் வாய்ந்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை ஊதியங்களை வழங்கத் துவங்கியுள்ளன. இதனால் ஐ.டி., துறையைவிட உற்பத்தித் துறையின் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஐ.டி., துறையில் உள்ள அனுபவம் மிக்க ஊழியர்களில் 15 முதல் 20 சதவிகிதத்தினர் உற்பத்தி மற்றும் டெலிகாம் நிறுவனங்களை நோக்கி தாவத் துவங்கி விட்டனர். பணிப் பாதுகாப்பு, நல்ல ஊதிய விகிதம் போன்ற காரணங்களாலேயே ஐ.டி., துறைக்கு தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக பாங்குகளில் கிளார்க், பி.ஓ., போன்ற பணிகளில் சேர விரும்பி போட்டித் தேர்வு எழுதுபவர்களும் அதில் வெற்றி பெற்று பணியில் சேருபவர்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். இதனால் சாதாரண கலை மற்றும் அறிவியல் படிப்பு படிப்பவர்கள் கடும் போட்டியை சந்திக்கின்றனர்.

தற்போதைய விகிதத்தில் தொடக்கத்திலேயே ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் தரக்கூடிய பாங்க் கிளார்க் பணிகள் நிரந்தரமானவையாகவும் குறிப்பிட்ட கால நேரத்திற்கு மட்டுமே தினசரி பணியாற்றக்கூடியதாகவும் இருப்பதால் ஐ.டி., நிறுவனங்களுக்கு சிறந்த மாற்றாக பாங்க், குரூப் 2, குரூப் 4, போலீஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் ஏராளமான எண்ணிக்கையில் சேர்ந்து வருகின்றனர்.

ஐ.டி., துறையில் சேர விரும்பி படிப்பில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவது ஒரு புறம் என்றால் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு பிற துறைகளில் வேலை தேடி செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்பதே தற்போதைய நிலை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us