எம்.பி.ஏ.,வின் எதிர்காலம் எப்படி? | Kalvimalar - News

எம்.பி.ஏ.,வின் எதிர்காலம் எப்படி? ஜூலை 21,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக நம் இளைஞர்களை கவனித்தால் அவர்கள் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு அல்லது பட்டப்படிப்பு முடித்து எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்ற இரண்டே குறிக்கோள்களைக் கொண்டவர் களாகவே பெரும்பாலானோர் இருப்பதைக் காண்கிறோம்.

இன்ஜினியரிங்கும் எம்.பி.ஏ.,வும் எதிர்காலத்தில் வளமான வேலை வாய்ப்பைத் தரும் என்று அவர்கள் மட்டுமல்ல, அவர்களது பெற்றோரும் நம்புகின்றனர். இதனால் தான் பிளஸ் 2ல் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கும் தங்களது குழந்தைகளைக் கூட இன்ஜினியரிங் படிக்க வைக்கவேண்டும் என்று பொதுவாக பெற்றோர் விரும்புகின்றனர். சுமாராகப் படிக்கக் கூடிய இது போன்ற மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சரியாகப் படிக்காமல் தங்களது எதிர்காலத்தையே கெடுத்துக் கொள்வதையும் காண்கிறோம்.

இது போலவே தான் எம்.பி.ஏ., படிப்பும் நம்மில் பெரும்பாலானோரால் தவறாகப் பார்க்கப்படுகிறது. இதனால் தான் நமது பெருவாரியான கலைக் கல்லூரிகள் எம்.பி.ஏ., படிப்பை துவங்கி பணம் செய்யும் வித்தையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளன. ஆனால் எம்.பி.ஏ., படிப்பானது அவ்வளவு உறுதியான வேலை வாய்ப்பைத் தரக் கூடிய படிப்புதானா?

சிறப்பான எம்.பி.ஏ., படிப்பை முடிக்கும் ஒருவர் திறன்கள், சிறப்பான தொடர்பு மற்றும் நிறுவன பின்னணியைப் பெற்றால் அவருக்கு நிச்சயம் மிக நல்ல எதிர்காலம் இருப்பது உண்மை தான். ஆனால் அரைகுறை சம்பளத்திற்கு ஆட்களைப் பிடித்து வந்து எதையும் முறையில்லாமல் நடத்தும் கல்லூரிகளால் தான் இன்று எம்.பி.ஏ., தனது மதிப்பை இழந்துள்ளது.

4 வார்த்தைகள் பேசக் கூடிய தகவல் தொடர்புத் திறன் இல்லாதவர்களால் மாணவர்களுக்கு தகவல் தொடர்புத் திறனை எப்படிக் கற்றுத் தர முடியும்? இது தான் பெரும்பாலான கல்லூரிகளின் நிலைமை. தமிழ்நாட்டிலேயே சுமார் 800க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் எம்.பி.ஏ.,அல்லது மேனேஜ்மென்ட் படிப்பை நடத்துகின்றன. எம்.பி.ஏ., படிப்பில் சேரும் பலரும் வெறும் பட்டத்திற்காகத் தான் சேருகிறார்களே தவிர அந்தப் படிப்பின் தன்மையை அறிய முற்படுவதே இல்லை.

எம்.பி.ஏ., படிப்பானது எதைக் கற்றுத் தருகிறது?
திறன்கள்:
பொருளாதாரம், நிதி, மார்க்கெட்டிங், மேனேஜ்மென்ட், அக்கவுண்டிங் போன்ற பாடத்திறன்களையும், மென்திறன்கள் (ஸாப்ட் ஸ்கில்), குழுவாக செயல்படும் திறன், தகவல் தொடர்புத் திறன் மற்றும் நெறிமுறைகள் போன்ற புலம் சாரா சிறப்புத் திறன்களையும் எம்.பி.ஏ., படிப்பானது தனது பாடத்திட்டத்தில் கொண்டிருப்பதுடன் கற்றுத் தரவும் வேண்டும்.

நெட்வொர்க்: நல்ல எம்.பி.ஏ., படிப்பானது வணிகத் துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதுடன், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோருடன் தொடர்ந்த உறவை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இது கல்லூரி நிர்வாகத்தின் கையில் தான் உள்ளது.

பிராண்ட்: ஒரு சிறந்த பொருளுக்கான அடையாளமாக அதன் பிராண்ட் பெயர் தான் இருக்கிறது என்பதை அறிவோம். இது போலவே நல்ல எம்.பி.ஏ., படிப்பு என்பது நல்ல பிராண்ட் மதிப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

தற்போதைய இந்தியாவில் எம்.பி.ஏ.,எங்கிருக்கிறது?
நம் பொருளாதாரம் வெகு வேகமாக கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. இதனால் வணிகம் பெருகுவதுடன் சிறப்பான மேனேஜ்மென்ட் திறனாளிகளுக்கான தேவையும் அதிகமாகவே உள்ளது. ஆனால் சிறப்பான திறன்களைப் பெற்றிருக்கும் மற்றும் போதிய பயிற்சியையும் பெற்றிருக்கும் மேனேஜ்மென்ட் திறனாளிகள் போதிய அளவில் கிடைப்பதில்லை என்பதே உண்மை. ஆனால் எம்.பி.ஏ., படிப்பை நடத்தும் பெரும்பாலான நமது கல்லூரிகளால் இது போன்ற திறனாளிகளை உருவாக்க முடியவில்லை என்பதும் உண்மை தான்.

எனவே நம் மாநிலத்தின் பல இடங்களில் உள்ள எம்.பி.ஏ., கல்வி நிறுவனங்கள் சரியான ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதுடன் எம்.பி.ஏ., படிப்பின் தாத்பர்யத்தை அறியாதவையாகவே உள்ளன. எனவே எம்.பி.ஏ., படித்தால் நிச்சயம் வளமான எதிர்காலம் உண்டு என்று மொட்டையாக நம்பாமல் நீங்கள் படிக்கும் கல்வி நிறுவனம் மற்றும் படிக்கும் விதம் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ள முனையுங்கள். இல்லாத போது எம்.பி.ஏ., என்னும் தகுதியே உங்களை பாடாய் படுத்திவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us