டெலிகாம் துறையில் தற்போதுள்ள வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும்? | Kalvimalar - News

டெலிகாம் துறையில் தற்போதுள்ள வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும்? ஜூன் 28,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திய டெலிகாம் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக கடந்த சில ஆண்டுகளாகக் காணப்படுவதை அறிவோம். விரைவில் இந்திய டெலிகாம் துறை உலகின் 2வது பெரிய டெலிகாம் துறையாக மாறிவிடும். ஒவ்வொரு மாதமும் நம் நாட்டில் புதிதாக 95 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கின்றனர்.

2014ம் ஆண்டில் இத் துறை தான் நமது ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு அதிக பங்களிக்கும் துறையாக மாறிவிடும். இயல்பாகவே இத் துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இத் துறையில் எண்ணற்ற இன்ஜினியர்களும் மேனேஜ்மென்ட் படித்தவர்களும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

டெலிகாம் இன்ஜினியரிங் என்பது எலக்ட்ரானிக் துறையிலிருந்து உருவாகிறது. இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகியவை இந்த பாடத்திட்டத்திலுள்ளன. டெலிகாம் சிஸ்டம்களை வடிவமைப்பது, நிறுவுவது, பராமரிப்பது ஆகிய முக்கியப் பணிகளை டெலிகாம் இன்ஜினியர் மேற்கொள்கிறார். அனுபவத்தைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் முதல் 7 லட்சம் வரை டெலிகாம் இன்ஜினியர்கள்
சம்பளம் பெறுகின்றனர்.

டெலிகாம் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வெறும் எம்.பி.ஏ., ஒன்றைப் பெறுவதைவிட இன்று டெலிகாம் எம்.பி.ஏ., படிப்பவர்களுக்கு இந்தத் துறையானது சிறப்பான வாய்ப்பைத் தருகிறது. இந்தியாவில் பல பல்கலைக்கழகங்கள் இன்று டெலிகாம் எம்.பி.ஏ., படிப்பைத்தருகின்றன. அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் படித்திருப்பவர்கள் இப் படிப்பில் முன்னுரிமை பெறுகின்றனர். சில கல்லூரிகள் பி.பி.ஏ., டெலிகாம் என்னும் படிப்பை கடந்த சில ஆண்டுகளில் அறிமுகப்படுத்தியுள்ளன.

சிஸ்டம்ஸ் டெவலப்பர் என்பது இத் துறையிலுள்ள மற்றுமொரு முக்கியப் பணியாகும். கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி.,யில் பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் இப் பணிக்குத் தகுதியானவர்கள். எனினும் குறைந்தது 2 ஆண்டுகள் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருப்பது முக்கியம். மொபைல் நிறுவனங்களும் டெலிகாம் நிறுவனங்களும் இப் பணிக்கு தொடர்ந்து ஆட்களை எடுத்துக் கொள்கின்றன.

டெலிகாம் இன்ஜினியரிங் முடித்திருப்பவர்கள் செல்லக்கூடிய மற்றுமொரு துறை டெலிகாம் அனலிஸ்ட். டெலிகாம் நிறுவனங்களின் கார்ப்பரேட் அலுவலகங்களில் இப் பணிகள் உள்ளன. மேனேஜரியல் திறன்களும் இப் பணிக்குச் செல்லவிரும்புவோருக்குத் தேவை. இத் துறையில் ஒருவர் சிறப்பான பணிக்குச் செல்ல துறை சார்ந்த திறன்கள் மிகவும் முக்கியம்.

மேலும் டெலிகாம் மார்க்கெட், சிஸ்டம்ஸ், பிராசஸ் போன்ற துறை தொடர்பான பிற பிரிவுகளிலும் நல்ல அனுபவத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். எப்போதும் மாறாத வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் டெலிகாம் துறையில் சேர விரும்புவோர் திட்டமிட்டு அதற்கேற்ற படிப்புகளைப் படித்து, சிறப்பாக திறன்களை வளர்த்துக் கொண்டால் நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us