சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியத் தொழில் துறை வேகமாக மீண்டு எழுச்சி பெற்று வருகிறது. இதனால் இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் சி.ஏ., முடித்தவர்களைப் பணியிலமர்த்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
கோர் காம்பீடன்ஸ் என அழைக்கப்படும், ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கத் தேவைப்படும் திறன் படைத்த சி.ஏ., படித்தவர்களே இந்த நிறுவனங்களுக்கு அத்தியாவசியத் தேவை என்று இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. எம்.பி.ஏ., படித்தவர்கள் சேல்ஸ், மார்க்கெட்டிங் மற்றும் சர்வதேச வணிகப் பணிகளுக்கே அதிகபட்சமாக பணியிலமர்த்தப்படும் இந்த நாட்களில் சி.ஏ., படித்தவர்களே இந்திய நிறுவனங்களுக்கான சிறந்த தலைவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.
ஸ்திரத்தன்மை, நிதி தொடர்புடைய அம்சங்களில் தெளிவு, மாற்றம் பெறும் வரிவிதிப்பு முறைகள் ஆகிய காரணங்களால் சி.ஏ., படித்தவர்களுக்கான மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கே.பி.எம்.ஜே., என்ற பிரசித்தி பெற்ற நிறுவனம் இந்த ஆண்டு 100 முதல் 150 சி.ஏ.,க்களைப் பணி நியமனம் செய்ய முடிவெடுத்துள்ளது. முது நிலை மேலாளர் பணிகளுக்கு சி.ஏ., படித்தவர்களே பொருத்தமாக இருப்பார்கள் என்று இந்த நிறுவனம் கருதுகிறது.
ஒரு புகழ்பெற்ற பிசினஸ் பள்ளியில் எம்.பி.ஏ., முடித்துப் பணியில் அமருபவருக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கும், நல்ல தரத்துடன் சி.ஏ., முடித்துப் பணியில் அமருபவருக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கும் இடையே கணிசமான வேறுபாடு உள்ளது. சற்றுக் குறைவான ஊதியத்தில் நிறைவான பங்களிப்பதில் சி.ஏ., முடித்தவர்கள் எம்.பி.ஏ., முடித்தவர்களை விஞ்சி நிற்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கருதுகிறது. ஒரே நிறுவனத்தில் நிலைத்திருந்து பணியாற்றுவது என்ற அம்சத்திலும் சி.ஏ., படித்தவர்கள் எம்.பி.ஏ.,வினரை விட முன் நிற்கிறார்கள்.
3 ஆண்டு காலம் ஆடிட்டர்களுடன் இணைந்து தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டுப் படிப்பதால் சி.ஏ., முடித்தவர்கள் பணியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே முழுமையான பங்களிப்பைத் தர முடிகிறது. 2 ஆண்டு மட்டுமே படிப்பை மேற்கொள்ளும் எம்.பி.ஏ.,வினருக்கு இந்தத் திறமைகள் குறைவுதான். எனவே சி.ஏ., முடித்தவர்கள் ஆடிட்டிங் மற்றும் நிதி நிர்வாகத்துடன் நிறுவன நிர்வாகத்தையும் திறம்படக் கையாளுவதாக சில நிறுவனங்கள் நம்புகின்றன.
ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையைப் பற்றி அறிய உரைகல்லாகக் கருதப்படும் பேலன்ஸ் ஷீட்டை அலசி ஆராய்வதிலும் சி.ஏ., முடித்தவர்களே சிறந்து விளங்குகிறார்கள். இதனால், நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் உடனடி முடிவுகளை சி.ஏ.,
படித்தவர்களே எடுக்க முடியும்.
இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில் பிரசித்தி பெற்ற ஏஞ்சல் புரோக்கிங் என்ற நிறுவனம் சி.ஏ., முடித்தவர்களைப் பணியிலமர்த்தும் விகிதத்தை 5லிருந்து 15 ஆக உயர்த்தியுள்ளது. சி.ஏ., படித்தவர்களைப் பணியிலமர்த்துவதை சிக்கனமான ஒன்றாக இந்த நிறுவனம் கருதுகிறது. சி.ஏ., முடித்துப் பணியில் சேரும் ஒருவருக்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை ஊதியம் வழங்கினால் போதும் என்ற நிலையில் எம்.பி.ஏ., முடித்தவருக்கு ஆண்டுக்கு 4 முதல் 6 லட்சம் வரை ஊதியம் வழங்க வேண்டியிருப்பதை இந்த நிறுவனம் இதற்குக் காரணமாகக் கூறியுள்ளது.
ஒரு நிறுவனத்தின் பேக்ஆபிஸ் பணிகளில் அமர சி.ஏ., முடித்தவர்களே பொருத்தமாயிருப்பதாகவும், எம்.பி.ஏ., முடித்தவர்கள் பிரண்ட்ஆபிஸ் எனப்படும் வாடிக்கையாளர் தொடர்புடைய பணிகளுக்கே பொருத்தமாயிருக்கிறார்கள் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
தற்போது அக்கவுண்டிங் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், வரி விதிப்பு முறைகளில் உள்ள மாற்றங்களும் நிறுவனங்கள் சி.ஏ., முடித்தவர்களையே அதிகம் நாடும் நிலையை உருவாக்கி வருகின்றன.
குறிப்பாக, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள ஜி.எஸ்.டி., மற்றும் ஐ.எப்.ஆர்.எஸ்., போன்ற புதிய அக்கவுண்டிங் தத்துவங்களை எம்.பி.ஏ., முடித்தவர்கள் அவர்களின் பாடப்புலத்தில் படித்திருப்பதில்லை என்பதால் சி.ஏ., முடித்தவர்களுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறாக, பல்வேறு காரணங்களால், மாறி வரும் இன்றைய தொழிலரங்கில் சி.ஏ., முடித்தவர்கள் எம்.பி.ஏ., முடித்தவர்களுக்கு மாற்றாக மாறிவருவதாகவே கருதப்படுகிறது.