மனித வளத் துறையில் எம்.பி.ஏ., படித்து வருகிறேன். இதன் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா? | Kalvimalar - News

மனித வளத் துறையில் எம்.பி.ஏ., படித்து வருகிறேன். இதன் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா? ஏப்ரல் 26,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

வளர்ந்து வரும் தொழில் துறையில் மனித வள நிர்வாகம் என்பது வெற்றிக்கு வித்திடும் முக்கிய அம்சமாக இருக்கிறது. முன்பெல்லாம் மனித வளத் துறை என்பது ஊதிய வரிசை மற்றும் பணியாட்களின் பயன்களை பிரித்துக் கொடுக்கும் துறை என்ற குறுகிய வரையறைக்கு உட்பட்டு இருந்தது. போட்டிகள் அதிகரித்து நிறுவனங்களின் ஒவ்வொரு முடிவும் வெற்றியை தீர்மானிக்கும் விதமாக மாறிய பின், மனித வளத் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

மனித வளத்தை முறையாக கையாளுவதன் மூலமாக ஊழியர்களின் திறனை கணிசமாக அதிகரிக்க முடிவதோடு நிறுவனத்தையே வெற்றிகரமாக செயல்பட வைக்க முடியும் என்று அனுபவ பூர்வமாக உணரப்பட்டது. தற்போது மனித வளத் துறை நிர்வாகத்தில் ஊழியர்களின் தேவையை உணர்ந்து நிறைவேற்றுவது, ஊழியர்நிர்வாக உறவு மேம்பாடு, திறன் மேம்படுத்துதல் போன்ற கூடுதல் பணிகள் சேர்ந்துள்ளன.

இதனால் நிறுவனங்களில் இதற்கான பிரத்யேகமான துறை உருவானதுடன் ஊழியர்கள், தாங்களும் வளர்ச்சி பெற்று, நிறுவனத்தையும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வழிமுறைகள் ஆராயப்படுகின்றன. பணியாளர் நிர்வாகம் என்பத பொதுவாக தொழில் உறவுகள் மற்றும் மனித வள மேம்பாடு/நிர்வாகம் என்னும் இரு பிரிவுகளாக இருக்கிறது.

உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர் சட்டம், தொழிற்சங்கம் போன்ற அம்சங்களை கவனித்துக் கொள்ளும் விதத்தில் ஐ.ஆர். பிரிவும் சேவை நிறுவனங்களில் எச்.ஆர்.எம். துறையும் இருக்கின்றன. இத் துறையே ஊழியர் நியமனம் மற்றும் பெர்பார்மன்ஸ் அப்ரைசல் (செயல் மதிப்பீடு) போன்ற பணிகளைச் செய்கிறது.

இன்றையப் பணிச் சூழலில் எச்.ஆர். துறையின் பங்கு மிக மிக முக்கியமாகியுள்ளது. போட்டிச் சூழலுக்கேற்ப ஊழியர்களுக்கு தொடர் பயிற்சிகளை அளிப்பது, ஊழியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, பணியிடத்தில் வசதிகளைக் கொடுப்பது, சமூகப் பணிகளைச் செய்வது போன்ற பணிகளை எச்.ஆர். மேலாளர்கள் செய்கிறார்கள்.

இந்த செயல்களின் அடிநாதமாக நிறுவன மேம்பாடும் தனி மனித உற்பத்தி விகிதத்தை அதிகரிப்பதுமே இருக்கிறது. வேலைக்கேற்ற ஊதியங்களை தருவதும் இப் பிரிவின் வேலையாகவே இருக்கிறது. பெரிய நிறுவனங்களில் முழு அளவிலான எச்.ஆர்.பிரிவு செயல்படுகிறது. இதற்கு ஒரு இயக்குனரும் இருக்கிறார். இவருக்கு உதவி புரியும் வகையில் பல்வேறு மேலாளர்கள் பணியின் தன்மைக்கேற்ப சிறிய குழுவாக இருக்கிறார்கள்.

இவர்கள் பணி நியமனம், பயிற்சி போன்ற சிறு சிறு பிரிவுகளில் மேலாளராகப் பணி புரிகிறார்கள். தொழில் முறை மற்றும் தொழிலரங்க உளவியலாளர்களும் இந்த குழுக்களின் ஒரு அங்கமாக பணி புரிகிறார்கள். சிறிய நிறுவனங்களில் ஒரே அதிகாரியே இந்தப் பணிகளை கூடுதலாக செய்கிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us