வங்கி போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு ஆங்கிலம் அவசியமா? ஏப்ரல் 15,2011,00:00 IST
பொதுவாகவே நமது இளைஞர்களுக்கு கல்வி மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வானாலும் சரி வேலைக்கான போட்டித் தேர்வானாலும் சரி தேர்வில் ஆங்கில பகுதி தான் கடினமாக உள்ளது.
போட்டித் தேர்வுகளை எழுதத் தொடங்குபவர் முதலில் ஆங்கிலத்தில் பயிற்சியை மேற்கொள்ளும் போது ஏற்கனவே படித்ததாகவே கேள்விகள் தோன்றும். என்றாலும் விடையை திருத்தும் போது பார்த்தால் இப்படியெல்லாம் கூட தவறுகள் வருமா, இப்படித்தான் குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டுமா என்றெல்லாம் நமக்கு வியப்பாகத் தெரியும்.
என்னதான் இதை தொடக்கத்தில் இருந்தே படித்தாலும் அது அன்னிய மொழி என்பது இந்த கால கட்டத்தில் தான் நமக்கு தெரிய வருகிறது. போட்டித் தேர்வில் இடம் பெறும் ஆங்கிலப் பகுதிக்கு தயாராவதற்கு நீங்கள் பள்ளியில் படித்தாற்போல ஆங்கில இலக்கணத்தைப் படிக்கக் கூடாது.
தினசரி புதிய ஆங்கில வார்த்தைகளை அறிவது, போட்டித் தேர்வு ஆங்கிலக் கேள்விகளுக்கு விடையளித்துப் பழகுவது, இலக்கணக் குறிப்புகளை டிப்ஸ்களாக அறிவது, ஆங்கில செய்தித் தாள் படிப்பது, ஆங்கிலத்தில் பேசிப் பழகுவது, புதிய இடியம் பிரேசஸ் அறிவது என இதற்காக நீங்கள் அன்றாடம் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக செலவழிக்கவேண்டும்.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரை நாம் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல பேசுவது, எழுதுவது, படிப்பது மற்றும் பயிற்சியை மேற்கொள்வது என பன்முக முயற்சிகள் அன்றாடம் தேவை. இதில் ஓரளவுக்கு நம்பிக்கை வருமளவுக்கு நீங்கள் 6 மாதங்களுக்குப் பின்புதான் உணர முடியும். இதற்கிடையில் நமக்கு ஆங்கிலம் வராது என தளர்ந்து விடக் கூடாது.
எந்த போட்டித் தேர்வுகளை எடுத்துக்கொண்டாலும் ஆங்கிலத்தைப் பொறுத்த வரை நீங்கள் பாஸ் செய்தால் போதும் என்று தான் இது வரை இருந்து வந்தது. இப்போது ஸ்டேட் பாங்க் பி.ஓ. போன்ற தேர்வுகளில் ஆங்கிலத்தில் எடுக்கும் மதிப்பெண்களும் உங்களின் வெற்றியை தீர்மானிக்கின்றன. ஆனால் பாஸ் செய்வதற்கே இவ்வளவு முயற்சிகளும் தேவை என்பதை நீங்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
ஆங்கிலத்தில் பயிற்சியை மேற்கொள்ள சிறந்த புத்தகங்களை கைடுகளாக புக்ஹைவ் பப்ளிகேஷன்ஸ், ரவிசோப்ரா, உப்கார் போன்றவை வெளியிட்டுள்ளன. மேலும் ஆர். எஸ். அகர்வால் எழுதிய பாங்க் கைடுகளும் இதற்கு உதவும். இது தவிர போட்டித் தேர்வுகளுக்கான மாதப் பத்திரிகைகளை கட்டாயம் வாங்கி அதைப் படித்து பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.