குழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா? | Kalvimalar - News

குழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா?

எழுத்தின் அளவு :

குழந்தையின் எதிர்காலம் குறித்து ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு கனவு உண்டு. அது சிறப்பாக படிக்க வைக்க வேண்டும், நல்ல வேலையை பெற்றுத் தர வேண்டும், நல்ல வாழ்க்கைத் தரத்தை அளிக்க வேண்டும், வசதிகளை, வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.

இது போன்ற கனவுகளுக்கெல்லாம் மூல ஆதாரம், குழந்தை கற்க ஆரம்பிக்கும் பொழுது உருவாகிறது. குழந்தைகள் வளரும் காலத்தில் கற்றுக்கொள்ளும் திறனில், ஒவ்வொரு குழந்தைகளுக்கு இடையேயும் மாறுபாடு காணப்படுவது இயல்பே. ஒரு சில மாறுபாடுகள் சில காலங்களில் சரியாகிவிடும். ஆனால், ஒரு சில மாறுபாடுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவற்றை குழந்தைப் பருவத்திலேயே கவனித்து மேம்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் அக்குழந்தை சாதனைகளுக்கு சொந்தக்காரராவது எளிதாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட குறைகளுள் ஒன்று தான் மெதுவாகக் கற்றல் என்பது.

மெதுவாகக் கற்றல்

ஒரு குழந்தை மிகவும் மெதுவாகக் கற்கிறதா என்பதனை சற்று கூர்ந்து கவனித்தால் கண்டுபிடித்து விடலாம். மெதுவாகக் கற்கும் குழந்தைகள் ஒரு சாதாரண செயலை புரிந்துகொள்வதற்கு அதிக நேரத்தை எடுக்கும். மேலும் ஏதேனும் ஒன்றை புரிய வைப்பதற்கு மீண்டும், மீண்டும் அதிகமான முறை சொன்னால் தான் நினைவில் நிறுத்த முயற்சி செய்யும்.  இதனை சரி செய்வதற்கு நல்ல மனநல ஆலோசகரை கலந்து ஆலோசிப்பது சிறப்பான பயன் தரும். மன நல ஆலோசகர்கள் கூறும் அறிவுரைகளில் முக்கியமானதாக இருப்பது குறித்து காண்ம்போம்.

புரிந்துகொள்ளும் முறையை கண்டுபிடியுங்கள்

ஒவ்வொரு குழந்தையின் புரிந்துகொள்ளும் திறனும் வேறுபடும். வார்த்தைகளின் வழியாகக் கற்றுத் தரப்படும் கருத்துக்களை புரிந்து கொள்ளுதல், உடல் அசைவுகள் மூலமும், பாட்டுக்கள் வழியாகவும் கற்றுக் கொள்ளுதல், செயல் வழிக் கற்றல் முறை போன்ற முறைகளில் குழந்தையின் புரிந்து கொள்ளுதல் எந்த முறையில் அதிகமாக இருக்கிறதோ, அதனைப் பின்பற்றி குழந்தையின் கற்றல் திறனை ஊக்குவிக்க வேண்டும்.

தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்

ஒரு குழந்தைக்கு வரைவதில் அதிகம் விருப்பம் இருக்கலாம், ஒரு குழந்தைக்கு கணிதத்தில் விருப்பம் இருக்கலாம். அதற்காக இதே போன்று அனைத்து பாடத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என்பதனை புரிந்துகொள்ளுங்கள். எந்த பாடத்தில் குழந்தைக்கு அதிக விருப்பம் இருக்கிறதோ, அந்த பாடத்தில் மேலும் சிறந்து விளங்க ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும். சிறு சிறு சிறப்பான செயல்பாடுகளையும் பாராட்ட வேண்டும். அந்த பாராட்டுக்கள் மேலும் வளர்வதற்கு உற்சாகம் அளிக்கும்.

நினைவில் நிறுத்த துணை புரியுங்கள்

உங்கள் குழந்தை புரிந்து கொண்டதை மறந்துவிடலாம். அப்படி மறக்காமல் இருப்பதற்கு படங்கள், காணொளிகள் மூலம் விளக்கம் அளியுங்கள். அதே போன்று கற்றது குறித்த கேள்விகளை அடிக்கடி கேட்டு மீண்டும் நினைவில் கொண்டு வாருங்கள்.

மாறுபட்டவற்றை கற்றுக்கொடுங்கள்

நடைமுறை செயல்பாடுகள் ஒரே மாதிரி இருந்தால் கற்றுக்கொள்வதில்  முன்னேற்றம் இருக்காது. ஏனெனில் புதியவற்றை கற்றுக்கொடுக்கும் பொழுது, மூளை சுறுசுறுப்புடன் இயங்குகிறது. ஓவ்வொரு குழந்தையிடமும் ஏதேனும் ஒரு திறன் இருக்கிறது. அதனால் மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவழிப்பதும், அவர்களின் தேவைகளை சரியான முறையில் நிறைவேற்றுவதும் வாழ்வில் முன்னேற்றத்தை அளிக்கும். 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us