புதிதாக தங்களது பட்டப்படிப்புகளை முடிப்பவருக்குமான பணி வாய்ப்புகள் இருக்குமிடம் கால் சென்டர்கள் தான். இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபின் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது பல பணிகளை அவுட்சோர்சிங் செய்து இந்தியாவில் கடை விரித்துள்ளன. தொழில் நுட்ப பயன்பாட்டை அதிக அளவில் உபயோகிக்கும் கால் சென்டர்கள் இன்றைய கலாசாரத்தின் ஒரு அடையாளம் கூட. இந்தியாவில் 1998ல் கால் சென்டர்கள் நிறுவப்பட துவங்கின. சிறப்பான தகவல் வசதி, இன்டர்நெட் போன்ற மேம்பட்ட பயன்பாடு ஆகியவற்றை இவற்றில் காணலாம். வங்கி, கேடலாக் விற்பனை, பயன்பாடுகள், உற்பத்தி, செக்யூரிடி, வாடிக்கையாளர் சேவை, உணவுச் சேவை, ஏர்லைன்/ஓட்டல் ரிசர் வேஷன் போன்ற துறைகளில் கால் சென்டர்கள் துவக்கத்தில் பயன்பட்டாலும் தற்போது இவை பயன்படுத்தப்படாத துறையோ பிரிவோ இல்லை என்றே கூறலாம். துவக்கத்தில் வாய்ஸ்பேஸ்ட் கால் சென்டர் கள் மட்டுமே இருந்தன. வாடிக்கையாளர் சேவைக்கான பல வடிவங்களை இன்று அணிந்திருக்கின்றன. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கால் சென்டர்கள் இன்று அதிகமாக செயல்படுகின்றன. ஆங்கிலமும் கம்ப்யூட்டர் திறனும் அதிகம் இருக்கும் இந்தியாவுக்கேற்ற துறை இது தான். ஓரளவு நல்ல சம்பளத்தைத் தரக்கூடிய துறையாக இது விளங்குவதால் நமது இளைஞர்கள் இவற்றில் பணி புரிய ஆர்வம் காட்டுகின்றனர்.