போட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல விரும்புவோருக்கான ஆங்கிலத் திறன்களை எப்படி வளர்த்துக் கொள்ளலாம்? இவை வேலை பெற அவசியம் தேவையா? | Kalvimalar - News

போட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல விரும்புவோருக்கான ஆங்கிலத் திறன்களை எப்படி வளர்த்துக் கொள்ளலாம்? இவை வேலை பெற அவசியம் தேவையா? ஜனவரி 19,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

பாங்குகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசுத் துறை பிரிவுகள் என அத்தனை விதமான அரசுப் பணிகளுக்கும் போட்டித் தேர்வுகள் தான் ஆதாரம். உலகமயமாக்கலால் விரிவடைந்து வரும் தனியார் துறை வாய்ப்புகளைத் தாண்டி அரசுப் பணிகள் தான் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

அதுவும் கடந்த சில ஆண்டுகளாக பாங்க் வேலைகளுக்காக வரும் இன்ஜினியரிங் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிலையான வேலை மற்றும் உறுதியான சம்பளம் என அரசுப் பணிவாய்ப்புகள் நம்மை கவருவதில் ஆச்சரியமில்லை. பட்டப்படிப்பு முடித்து அடுத்ததாக பட்ட மேற்படிப்புக்குச் செல்லும் இளைஞர்களுக்கு கவலையில்லை.

அடுத்த 2 ஆண்டுகளில் இவர்கள் தங்களது பாடத் திறனையும் பிற திறன்களையும் வளர்த்துக் கொண்டால் அதை முடிக்கும் போது நல்ல வேலையைப் பெற முடியும். பட்டப்படிப்பு முடித்து அடுத்ததாக வேலை ஒன்றைப் பெற காத்திருக்கும் இளைஞர்கள் ஏராளம். எதற்காக பட்டப்படிப்பு படித்தோம் என்பது தெரியாமலே முடித்து விட்டு என்ன வேலைக்கு நாம் தகுதியானவர் என்பதையே அறியாதவர் தான் அதிகமாக உள்ளனர்.

படிக்கும் காலத்தில் கூடுதல் திறன்களையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. பட்டப்படிப்பு முடித்த கையோடு தங்களது தகுதிக்கும் திறனுக்கும் ஏற்ற வாய்ப்புகளைப் பெற முனைவதானது உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.

பட்டப்படிப்பு முடிக்கும் இளைஞர்களை தற்போது பல தனியார் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக உடனடி வாய்ப்புகளுக்கு தேர்வு செய்து கொள்கின்றன. பி.எஸ்சி., அல்லது பி.காம்., மாணவர்கள் தற்போது இப்படி உடனடி வாய்ப்புகளைப் பெறுகின்றனர். பொருளாதாரம், வரலாறு போன்றவற்றில் பட்டப்படிப்பு முடிப்பவர்கள் போட்டித் தேர்வுகளையும் தனியார் வாய்ப்புகளையும் நம்பித் தான் இருக்க வேண்டியிருக்கிறது.

பட்டப்படிப்பு முடிக்கும் முன்பே போட்டித் தேர்வுகளை அறிவது அவசியமாகிறது. படிப்பு முடிந்த கையோடு இதற்காக தயாராவது பெரும் முனைப்போடு தொடங்கப்படவேண்டும். ஆங்கிலம், ரீசனிங், கணிதம், பொது அறிவு, பிற ஆப்டிடியூட் தேர்வு முறைகள் ஆகியவை போட்டித் தேர்வுகளில் இருப்பதால் அடிப்படை வழிகாட்டிப் புத்தகங்களோடு இவற்றை ஆரம்பிக்க வேண்டும். போட்டித் தேர்வுகளின் பாடத் திட்டத்தை அறிந்து ஒவ்வொன்றிலும் தனித்தனியாக பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

ஆங்கிலம் வேப்பங்காயாகக் ககும் பாடமாகவே போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை உள்ளது. போட்டித் தேர்வுகளை எழுதத் தொடங்குபவர் முதலில் ஆங்கிலத்தில் பயிற்சியை மேற்கொள்ளும் போது படித்ததாகவே கேள்விகள் தோன்றும். என்றாலும் விடையை திருத்தும் போது பார்த்தால் இப்படியெல்லாம் தவறுகள் வருமா, இப்படித்தான் குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டுமா என்றெல்லாம் நமக்கு வியப்பாகத் தெரியும்.

என்னதான் இதை தொடக்கத்தில் இருந்தே படித்தாலும் அது அன்னிய மொழி என்பது இந்த கால கட்டத்தில் தான் நமக்கு தெரிய வருகிறது. போட்டித் தேர்வில் இடம் பெறும் ஆங்கில பகுதிக்கு தயாராவதற்கு நீங்கள் பள்ளியில் படித்தாற்போல ஆங்கில இலக்கணத்தைப் படிக்கக் கூடாது.

தினசரி புதிய ஆங்கில வார்த்தைகள் அறிவது, போட்டித் தேர்வு ஆங்கில கேள்விகளுக்கு விடையளித்துப் பழகுவது, இலக்கணக் குறிப்புகளை டிப்ஸ்களாக அறிவது, ஆங்கில செய்தித் தாள் படிப்பது, ஆங்கிலத்தில் பேசிப் பழகுவது, புதிய இடியம் பிரேசஸ் அறிவது என இதற்காக நீங்கள் அன்றாடம் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக செலவழிக்கவேண்டும்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை நாம் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல பேசுவது, எழுதுவது, படிப்பது மற்றும் பயிற்சியை மேற்கொள்வது என பன்முக முயற்சிகள் அன்றாடம் தேவை. இதில் ஓரளவுக்கு நம்பிக்கை வருமளவுக்கு நீங்கள் 6 மாதங்களுக்குப் பின்புதான் உணர முடியும்.

இதற்கிடையில் நமக்கு ஆங்கிலம் வராது என தளர்ந்து விடக் கூடாது. எந்த போட்டித் தேர்வுகளை எடுத்துக்கொண்டாலும் ஆங்கிலத்தைப் பொறுத்த வரை நீங்கள் பாஸ் செய்தால் போதும். ஆனால் பாஸ் செய்வதற்கே இவ்வளவு முயற்சிகளும் தேவை என்பதை நீங்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஆங்கிலத்தைப் போலவே பிற திறன்களையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு பகுதியில் தகுதி பெறாமல் பிற பகுதிகளில் மட்டும் தகுதி பெற்றால் கூட பணி வாய்ப்பைப் பெற முடியாது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us