வெடினரி சயின்ஸ் எனப்படும் கால்நடை அறிவியல் படிப்பு இன்றும் சிறப்பான வாய்ப்புகளைத் தரக்கூடியதா? இதைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

வெடினரி சயின்ஸ் எனப்படும் கால்நடை அறிவியல் படிப்பு இன்றும் சிறப்பான வாய்ப்புகளைத் தரக்கூடியதா? இதைப் பற்றிக் கூறவும். ஜனவரி 04,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

மனிதர்கள் வாழ்க்கை முறை பலவிதமாக மாறிக் கொண்டே இருந்தாலும், அன்று முதல் இன்று வரை மனிதர்களுடன் பிராணிகளுக்கு உண்டான தொடர்புகளும் சார்ந்திருத்தலும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை, கிளி, புறா போன்ற செல்லப் பிராணிகளுடன் நமது உணவுத் தேவைகளுக்காக வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களும் நம்மோடு வளர்கின்றன. குறிப்பாக மேல் தட்டு மக்களிடையே செல்லப்பிராணிகளை வளர்ப்பது ஒரு கவுரவ அம்சமாகவே இருந்து வருகிறது.

விலங்குகள் கடவுளால் மனிதருக்குத் தரப்பட்ட பரிசுகள் என்று கூறப்படுகிறது. இவை இல்லாவிட்டால் உலகமே அழிவை நோக்கிச் சென்றுவிடும் என்றும் கருதப்படுகிறது. எனவே இந்த விலங்குகளை வளர்ப்பது, பாதுகாப்பது, நோய்களிலிருந்து காப்பாற்றுவது போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நோயுற்ற விலங்குகளை காப்பது நோயுற்ற மனிதரை பாதுகாப்பதை விட கடினமானது. ஏனெனில் மனிதர்களைப் போல விலங்குகளால் தங்களது பிரச்னைகளை சொல்ல முடிவதில்லை. இவ்வாறு சிறு பிராணிகளையும், மிருகங்கள், விலங்குகள், வளர்ப்புப் பிராணிகள் ஆகிய அனைத்தைப் பற்றியும் படிப்பதே வெடினரி சயின்ஸ் எனப்படுகிறது. இவற்றை மருத்துவத்தால் பராமரிப்பவர்கள் வெடினரி டாக்டர் எனப்படும் கால்நடை மருத்துவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். 

ஒருவர் கால்நடை மருத்துவராக பி.வி.எஸ்சி. அல்லது ஏ.எச். படிப்பில் ஒன்றை படிக்க வேண்டும். 5 ஆண்டு படிக்க வேண்டிய இப்படிப்புகளில் கடைசி பருவத் தேர்வில் கட்டாய இன்டர்ன்ஷிப்பும் உள்ளது. 5 ஆண்டுகளில் விலங்குகளின் உடலியல், உணவு, அறுவை சிகிச்சையில் அவற்றுக்கு பிரசவம் பார்ப்பது என விலங்குகள் தொடர்பான பல அம்சங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இந்த பட்டப் படிப்பை முடித்த பின்பு சிறப்புத் தகுதி பெற விரும்புவோர் இதில் எம்.வி.எஸ்சி. என்னும் பட்ட மேற்படிப்பைப் படிக்கலாம்.

பி.வி.எஸ்சி. படிக்க எம்.எச்.டி.செட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் வெற்ற பெற்றால் தேசிய அளவிலான சிறப்புப் பல்கலைக்கழகங்களில் அந்தப் படிப்பை படிக்கலாம். மும்பையிலுள்ள டைரக்டரேட் ஆப் மெடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் 0என்னும் அமைப்பு இதை நடத்துகிறது.

பொதுவாக இவற்றுக்கான சேர்க்கை ஆகஸ்ட்செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. தமிழ்நாட்டில் பல கல்வி நிறுவனங்கள் இதை நடத்துகின்றன. முன்பு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. இப்போது கவுன்சிலிங் மூலமாக இதில் சேரலாம். 

இதில் பட்டப்படிப்பை முடித்தவுடனேயே மருத்துவராக பயிற்சியையும் பின்பு பணியையும் தொடங்கலாம். எனினும் ஒரு பாலிடெக்னிக்கிலோ அல்லது ஒரு மருத்துவமனையின் கால்நடை மருத்துவப் பிரிவிலோ சேருவது பணியை சுலபமாக்கும். வெடினரி டாக்டர்களாக பயிற்சியை தொடங்குவது சிறிய பிராணிகள் தொடர்புடையதாகவோ அல்லது பெரிய பிராணிகள் தொடர்புடையதாகவோ 2 பிரிவுகளாக இருக்கிறது. இங்கு பணி புரிந்து கொண்டே மேற்கொண்டு ஆய்வுப் படிப்பைத் தொடரலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us