ரயில்வேயில் பணி புரிய வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறேன். இத்துறை பணி வாய்ப்புகள் என்னென்ன உள்ளன அதற்கு என்ன தகுதிகள் எனக் கூறலாமா? | Kalvimalar - News

ரயில்வேயில் பணி புரிய வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறேன். இத்துறை பணி வாய்ப்புகள் என்னென்ன உள்ளன அதற்கு என்ன தகுதிகள் எனக் கூறலாமா? டிசம்பர் 15,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

மத்தியஅரசு மாநில அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற எண்ணம் நமது இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேண்டுமானால் குறைந்து கொண்டே வரலாம். ஆனால் பி.ஏ.,/பி.எஸ்சி., /பி.காம்.,/இன்ஜினியரிங் டிப்ளமோ போன்ற எண்ணற்ற பிற படிப்புகளைப் படிப்பவருக்கு இன்னமும் கால் துட்டு என்றாலும் கவர்ன்மென்ட் துட்டு தான் பெரியதாக இருக்கிறது.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் பெரிய அளவில் அரசு வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. மேலும் புதிதாக ஊழியர்களை எடுத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது மாறி இப்போது புதிய வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதை காண்கிறோம். எண்ணற்ற வேலைகளை இந்திய ரயில்வே அறிவித்து வருகிறது.

ஆயிரக்கணக்கில் அறிவிக்கப்படும் இந்த வேலை வாய்ப்புகள் நமது இளைஞர்களுக்கான மிக மிக உன்னதமான செய்தியாக விளங்குகிறது. இந்திய ரயில்வேயின் வேலை வாய்ப்புகளைப் பற்றி நமது இளைஞர்கள் அறிந்து கொள்ள இதோ ஒரு சிறு அறிமுகம். இந்திய ரயில்வே பணிகளில் கிளாஸ் 1 மற்றும் கிளாஸ் 2 கெசடட் அதிகாரி நிலை பணிகள் உள்ளன.

கிளாஸ் 1 பணிகளுக்கு யு.பி.எஸ்.சி., தேர்வு மூலமாக திறன் வாய்ந்த நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆண்டு தோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக இது மேற்கொள்ளப்படுகிறது. இந்திய ரயில்வே டிராபிக் சர்வீஸ் மற்றும் இந்திய ரயில்வே அக்கவுண்ட்ஸ் சர்விஸ் பணிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு மூலமாக சேர்க்கை நடக்கிறது.

கிளாஸ் 2 பணிகள் கிளாஸ் 3 நிலையிலிருந்து பதவி உயர்வு பெறுவோரைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. கிளாஸ் 3ல் டெக்னிகல் மற்றும் டெக்னிகல் அல்லாத ஊழியர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் கலெக்டர், கார்டு,டிரைவர், ஒர்க்சாப் சார்ஜ்மேன், போர்மென் ஆகியவர்கள் இதில் தான் வருகின்றனர்.

கிளாஸ் 3 நிலை டெக்னிகல் பணிகளுக்கு இன்ஜினியரிங் டிப்ளமோ தகுதி பெற்றிருப்போர் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆர்.ஆர்.பி., எனப்படும் ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டுகள் இவர்களை பணிக்கு எடுத்துக் கொள்ள போட்டித் தேர்வுகளை நடத்துகின்றன.

டிராபிக் அப்ரென்டிஸ்/கமர்சியல் அப்ரென்டிஸ்/அசிஸ்டண்ட் ஸ்டேசன் மாஸ்டர்/டிரெய்னி கார்டு/குட்ஸ் கார்டு/என்கொயரி கம் ரிசர்வேசன் கிளார்க்/ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டண்ட் போன்ற பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்திருப்போர் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு பொதுவாக 18 முதல் 30 வயது வரம்பு இருக்கிறது. பிற நான்டெக்னிகல் பணிகளுக்கு 10ம் வகுப்பு தகுதி தான் தேவைப்படுகிறது.

அசிஸ்டண்ட் டிரைவர்/ஸ்கில்ட் பிட்டர்/அப்ரென்டிஸ் மெக்கானிக் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ/ஐ.டி.ஐ. தகுதிகள் தேவை. பொதுவாக ரயில்வேயின் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்கு 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை பயிற்சி செய்தால் போதும். பொது அறிவு, கணிதம், ரீசனிங் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. டெக்னிகல் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் கேள்விகள் கொண்ட தேர்வு நடத்தப்படும்.

வெவ்வேறு காலகட்டங்களில் தவறாது அறிவிக்கப்படும் ரயில்வே பணி வாய்ப்புகளில் உங்களது தகுதிக்கான பணி வாய்ப்பை அறிந்து விண்ணப்பிக்கவும். இலவச ரயில் பயணம், மிகச் சிறப்பான சம்பளம் ஆகியவற்றைத் தாண்டி இந்திய ரயில்வே என்பது உன்னதமான ஒரு சேவைத் துறை. எனவே உங்களது முயற்சியைத் தொடங்குங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us