தொழிற்படிப்பு ஒன்று படித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த வேலையும் பெற முடியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என்ன செய்யலாம் எனக் கூறுங்களேன். | Kalvimalar - News

தொழிற்படிப்பு ஒன்று படித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த வேலையும் பெற முடியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என்ன செய்யலாம் எனக் கூறுங்களேன்.நவம்பர் 11,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

சந்தேகமில்லாமல் உங்களது நிலையில் உள்ள யாருக்கும் மன அழுத்தம் தோன்றுவது இயல்பு தான். கடந்த 4 ஆண்டுகளாக மிகுந்த அக்கறையுடனும் சிரமத்துடனும் தான் நீங்களும் உங்கள் படிப்பை முடித்திருப்பீர்கள். உங்களது முயற்சிகளுக்கான பலன்களை நீங்கள் கட்டாயம் பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப்போது உங்களுக்குத் தேவை பொறுமையும் விடா முயற்சியும் தான்.

வேலை கிடைக்கவில்லை என சோர்வுறுவதோ வருத்தப்படுவதோ
உங்களை உங்களது இலக்குகளை நோக்கி எடுத்துச் செல்லப்போவதில்லை என்பதை கட்டாயம் நீங்கள் உணர வேண்டும்.

உங்களைப் பற்றிய சுய விமர்சனங்களையும் அலசல்களையும் முதலில் பாரபட்சமின்றி செய்து கொள்ளுங்கள். கேம்பஸ் இன்டர்வியூவிலேயே உங்களுக்கான வேலை கிடைக்காதது எதனால் என்பதை நன்றாக சுயமாக உற்றுப்பார்த்து அறிந்து கொள்வது முடியாத காரியமல்ல.

எதனால் கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளும் போது அவற்றை தவிர்ப்பது அல்லது சரி செய்து கொள்வதும் சாத்தியமானது தான் அல்லவா? தகவல் தொடர்புத் திறன், ஆங்கிலத் திறன், சுயநம்பிக்கையை இன்னமும் உயர்த்திக் கொள்வது என நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ளலாம். இதற்கான முயற்சிகளை உடனே தொடங்குவது தான் முக்கியம்.

இதற்கு மாறாக நீங்கள் படித்த கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ முறையில் ஆட்களை தேர்வு செய்ய போதிய நிறுவனங்கள் வரவில்லை என்றால் உங்களது சீனியர்கள் வேலைக்குச் சென்றிருக்கும் நிறுவனங்கள் எவை என அறிந்து அவற்றின் இன்டர்நெட் தளங்கள் மூலமாக விண்ணப்பிக்கத் தொடங்குங்கள்..

அல்லது நீங்கள் பணி புரிய வேண்டும் என விருப்பப்படும் நிறுவனங்களை பட்டியலிட்டு அவற்றுக்கு ஆன்லைனிலோ கடிதம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அந்த நிறுவனங்கள் எப்படிப்பட்ட நபர்களை பணிக்கு எடுத்துக் கொள்கின்றன என்பதை அறிந்து அந்த திறன்களில் நீங்கள் எதைப் பெற்றிருக்கிறீர்கள், இன்னமும் எவற்றில் கூடுதல் முயற்சிகள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப தயாராகலாம்.

அதில் இணைவதால் உங்களது லட்சியங்களை நிறைவேற்றும் சாத்தியம் எப்படி மற்றும் அந்த நிறுவனம் உங்களை பணிக்கு எடுத்துக் கொள்வதால் அது பெறவிருக்கும் பலன்கள் என்ன என்பதை தெளிவாக யோசியுங்கள். இது தான் ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்வதில் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்.

உங்களைப் போலவே அந்த நிறுவனத்தில் பணி புரிய விரும்பும் பிறரிடமிருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டக்கூடிய சிறப்பம்சங்கள் என்ன என்பதை நீங்கள் நேர்முகத் தேர்வுகளில் முன்னிறுத்துவது மிக முக்கியம் என்பதை உணருங்கள்.

நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் அனுப்பும் அல்லது இமெயில் செய்யும் உங்களது பயோடேட்டா தான் உங்களுக்கும் அந்த நிறுவனத்துக்குமான முதல் தகவல் பரிமாற்றமாக அமைகிறது. எனவே அந்த பயோடேட்டாவானது படிப்பவரைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.

அழகாகவும் எளிதாகவும் அது அமைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட வேலையை தேர்வு செய்வதன் நோக்கம், உங்களது திறன்கள்
வெளிப்படும் சிறப்புப் பணிப் பிரிவு, திறன்களுக்குச் சான்றான சாதனைகள் போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.

கலந்து கொண்டிருக்கும் பயிற்சி முகாம்கள், சிறப்புப் படிப்புகளில் திறன் போன்றவையும் அதில் இடம் பெறலாம். எந்த பயோடேட்டாவும் கவரிங் லெட்டர் எனப்படும் முகப்புக் கடிதத்துடன் அனுப்பப்பட வேண்டும். அதிலும் உங்களைப் பற்றிய தகவல்கள் சுருக்கமாக இடம் பெற வேண்டும்.

சில சமயம் பயோடேட்டாவுடனும் முகப்புக் கடிதத்துடனும் சில நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகளை நேரடியாக சந்திக்க வேண்டியிருக்கலாம். அந்த சந்திப்பில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் பணி புரிய விரும்புவதன் முக்கியக் காரணத்தை எளிதாக தெரியப்படுத்த வேண்டும்.

கேம்பஸ் இன்டர்வியூக்களில் தேர்வு செய்யப்படும் சிலர் அந்த வேலையில் கட்டாயமாக சேருவதில்லை. அந்த நிறுவனத்தோடு தொடர்ந்து தொடர்பு கொண்டு உங்களது பயோடேட்டா அவர்களைச் சென்றடையுமாறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டால் கட்டாயம் அதே நிறுவனத்திலேயே பணிபுரியும் வாய்ப்பு நீடிக்கும்.

இறுதியாண்டில் நுழையும் முன்போ அல்லது நுழையும் போதோ உங்களது வேலை பற்றிய சிந்தனை களும் முயற்சிகளும் தொடங்கப்பட வேண்டும்.
உங்களது முயற்சிகள் எதுவும் வீணாகாது என்பதை எப்போதும் நம்புங்கள். மனந்தளரமால் விடா முயற்சியை எடுக்கும் போது லட்சியத்தை எட்டும் பயணம் தொடங்கிவிட்டதை உணர முடியும். வெற்றி உங்களைத் தழுவ காத்திருக்கிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us