மார்க்கெட்டிங் ரிசர்ச் எனப்படும் சந்தை ஆய்வுத் துறையில் நுழைய விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரலாமா? அக்டோபர் 05,2010,00:00 IST
சந்தை ஆய்வு என அழைக்கப்படும் மார்க்கெட் ரிசர்ச் மேனேஜ்மென்ட் பிரிவுகளில் ஒன்று. உலகமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டபின் இந்தத் துறைக்கான மவுசு கூடிக் கொண்டே வருகிறது. எனவே இதில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் நுகர்வோர் எந்த மாதிரியான பொருட்களை விரும்புகிறார்கள் என ஆய்வு செய்த பின் அதற்கேற்ப வடிவம், சுவை, மணம், பேக்கிங், எடை போன்றவற்றை முடிவு செய்கிறார்கள் என்பதை சந்தை ஆய்வு முடிவு செய்ய உதவுகிறது. இதன் மூலம் நுகர்வோரின் எண்ணப்படியே பொருட்களைத் தர முடிகிறது.
எப்படி வினியோகப்படுத்தலாம் போன்ற முக்கிய முடிவுகளையும் இது எடுக்க உதவுகிறது. உற்பத்தி மட்டும் என்றில்லாமல், கருத்துக் கணிப்பு என்ற
பெயரில் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படும் ஆய்வுகளும் இந்த வகையைச் சேர்ந்தவை தான். இது டிவி போன்ற மீடியாவுக்கும் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புகிறார்கள் என அறியவும் உதவுகிறது. ஆய்வுப் பணி, களப் பணி, ஆய்வு மற்றும் தொகுப்புப் பணி ஆகிய பணிகளை இதில் பொதுவாக மேற்கொள்கின்றனர்.
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், பிஜி டிப்ளமோ படித்திருப்போர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்கள். வாடிக்கையாளர்களிடம் எந்த மாதிரியான கேள்விகளைக் கொண்டு என்ன பதிலைப் பெற முடியும் என்பதில் இவர்கள் சிறப்புத் திறன் பெற்றவராக இருப்பது அவசியமாகிறது. இவர்கள் களப்பணியை பொதுவாக தனி மனித உறவுகளில் சிறப்பாக செயல்படக் கூடியவர்களைக் கொண்டு செய்து முடிக்கிறார்கள். இவர்கள் தான் சம்பந்தப்பட்ட பிரிவினரை சந்தித்து கேள்விகளைக் கேட்டு உண்மையான பதிலைப் பெறுபவர்கள். பட்டப்படிப்பு முடித்திருந்தால் இந்தப் பணிகளைச் செய்து தர முடியும்.
ஆய்வு மற்றும் தொகுப்புப் பணிகளை செய்பவர்கள் பெறப்படும் புள்ளி விபரங்களைக் கொண்டு ஆய்வு செய்து முடிவுகளை வரையறுத்துக் கொடுப்பவர்கள். சோஷியாலஜி, சைகாலஜி இவற்றில் பட்ட மேற்படிப்பு முடித்திருப்போர் இந்தப் பணிகளைச் செய்ய முடியும். இது போன்ற பணிகளை மேற்கொள்பவருக்கு மாதம் ரூ3000 முதல் ரூ10000 வரை அவரவர் திறனுக்கேற்ப தரப்படுகிறது. அதிக அளவில் தற்போது பிரபலமடைந்து வரும் இந்தத் துறையில் புதிதாக வேலை வாய்ப்புகள் பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது