ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் துறை படிப்புகளைப் பற்றியும் அதன் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும். | Kalvimalar - News

ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் துறை படிப்புகளைப் பற்றியும் அதன் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும். செப்டம்பர் 13,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஒன்றை இருக்கக்கூடிய வசதிகளோடும் மனித வளத்தோடும் திறம்பட நிர்வகிக்கும்போது அதை சிறப்பான மேலாண்மை என கூறுகிறார்கள். அனைத்துத் துறைகளிலும் இதை நாம் பொருத்திப் பார்க்க முடியும். இதில் மருத்துவமனைகளும் அடங்குமல்லவா? ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் என்பது இன்று வேகமாக வளர்ந்து வரும் முக்கியத் துறையாக விளங்குகிறது.

எனினும் தேவையின் தன்மை, 24 மணி நேரமும் தேவைப்படும் சேவைத் தன்மை, இதில் உள்ள ரிஸ்க்குகள், சட்ட ரீதியிலான அம்சங்கள் மற்றும் தனிமனித நெறிகள் ஆகிய காரணங்களால் ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் என்பது இன்று சவால்களை சந்திக்க உதவும் கல்விப் பிரிவாக உருவெடுத்துள்ளது.

ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் துறையில் திட்டமிடல், முறைப்படுத்துதல், பணி சேர்ப்பு, ஒருங்கிணைப்பு, சேவையை தரப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை அடிப்படை அம்சங்களாக விளங்குகின்றன. இதனால் செலவு குறைவான மற்றும் மிக மேம்பட்ட தரத்திலான சேவையை நோயாளிகள் பெற முடிகிறது.

உடல்நல பிரச்னைகள்,உடல்நலத் தேவைகள், சேவையைத் தரும் முறைகள், உடல்நலம் குறித்த சட்டங்கள், இருக்கக்கூடிய அடிப்படை கட்டுமான வசதிகளை அதிக திறம்பட பயன்படுத்துவது ஆகியவற்றில் ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி தரப்படுகிறது.
ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் படிப்பவர்கள் பொதுவாக பெரிய பெரிய மருத்துவமனைகளில் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.கையில் எந்த கத்தியும் இன்றி, நோயாளியின் உயிரை காக்கும் பொறுப்பு இவர்களிடம் வருகிறது.

பெரிய பெரிய மருத்துவமனைகள் தவிர, கிளினிக்குகள், போதை மருந்து அடிமை மீட்பு மையங்கள், கேன்சர் போன்ற தீவிர நோய்களைப்
பெற்றவருக்கு சிறப்புச் சேவை தரும் ஹாஸ்பிசஸ் மையங்கள் ஆகியவற்றில் இவர்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது. பெரிய ஆஸ்பத்திரிகளில் இப் படிப்பு முடித்துப் பணியில் இருப்பவர்கள் பல பிரிவுகளில் பலர் இருக்கலாம்.

பொதுவாக அவர்கள் பணியாற்றும் மருத்துவமனைகளை திறம்பட செயல்படச் செய்வதும் நோயாளிகளுக்கு போதிய மேம்பட்ட சேவையைத் தருவதும் இவர்களின் பணி நோக்கமாக இருப்பதால், மருத்துவமனைகளின் அனைத்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் ஆகியோரின் ஆதரவு மிக மிக இன்றியமையாததாக இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

பொதுவாக 24 மணி நேரமும் மருத்துவ மனைகள் இயங்குவதால் இவர்கள் ஓய்வு நேரத்தில் கூட அழைக்கப்படலாம். சர்ச்சைகள் எழும் போது இவர்களின் பணி மிக முக்கியமானதாகிறது. இந்த காரணங்களால் இவர்களின் பணியானது சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. இந்தப் பணியை திறம்பட மேற்கொள்வதில் இவர்கள் தொடர்ந்து அறிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. மருத்துவ நவீன முன்னேற்றங்கள், நோய் கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சையில் மிக நுட்பமான கருவிகளின் வருகை, டேட்டா புராசசிங் தொழில்நுட்பம், அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றை இவர்கள் எப்போதும் அறிந்து கொண்டே இருக்க வேண்டும்.

நோயாளிகளின் இருதயம் செயல்படவும் ரத்தம் ஓடிடவும் டாக்டர்கள் போராட வேண்டியிருந்தால், மருத்துமனைகளை தொடர்ந்து செயல்படச் செய்யவும் அவை ஆரோக்கியமாக இயங்கவும் எப்போதும் முனைவது ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் நிர்வாகிகள் தான். இன்று இத் துறையில் எண்ணற்ற படிப்புகள் பல நிறுவனங்களால் தரப்படுகின்றன. பொதுவாக இத் துறையில் பட்டமேற்படிப்புகளே தரப்படுகின்றன.

ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டு வரை இப்படிப்புகள் தரப்படுகின்றன. பொதுவாக மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இத் துறையினருக்கான தேவை மிக அதிகமாகவே இருக்கிறது. இதைப் படித்தவருக்கு, கார்ப்பரேட் மற்றும் பொதுத் துறை மருத்துவமனைகள், பன்னாட்டு மற்றும் தேசிய உடல்நல மேம்பாட்டு நிறுவனங்கள், உடல்நல வெப்போர்ட்டல்கள், நர்சிங் ஹோம்கள், மனவள மேம்பாட்டு மையங்கள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் சப்ளை ஏஜன்சிக்கள் ஆகியவற்றில் இன்று எண்ணற்ற காலியிடங்கள் உள்ளன. பப்ளிக் ரிலேஷன்ஸ் எனப்படும் இத் துறையில் ஒரு நிறுவனத்தைப் பற்றிய அபிப்ராயத்தை நல்லவிதமாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது இதன் பணியாகும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us