ஓதுவார் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

ஓதுவார் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

சேலம்: பழனி தண்டாயுதபாணி கோவில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்களில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சி நிலையங்களில், தற்போது மாணவர்களின் சேர்க்கை துவங்கியுள்ளது.

தமிழகத்தில் கோவில்களில் பரமாரிப்பு, நிர்வாக பணிகளை மேற்கொள்ள, தமிழக இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, பத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மண்டலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 70 ஓதுவார் பணியிடங்கள் காலியாக உள்ளன. கோவில்களின் ஓதுவார் பணியிடங்களுக்கான ஆட்களை விரைந்து நியமிக்க, தமிழகத்தில் இரண்டு ஓதுவார் பயிற்சி நிலையங்களை துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை துவக்கவில்லை. இதனால், பல ஆண்டுகளாக கோவில்களில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடங்களில் ஆட்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த பணியிடங்களில் ஓதுவார்களை விரைவில் நியமிக்க, மண்டல இணை கமிஷனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் செயல்படும் ஓதுவார் பயிற்சி நிலையங்களுக்கு, ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும், ஆறு முதல் பத்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப, மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு பயிற்சி நிலையங்களுக்கும், தலா 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஓதுவார் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், இந்து மதத்தை சார்ந்தவராகவும், குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், நடப்பாண்டு செப்., 1ல், 14 வயதை பூர்த்தி செய்தவராகவும் இருக்க வேண்டும். இத்தகுதிகளை கொண்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை, ‘இணை கமிஷனர் அல்லது செயல் அலுவலர், தண்டாயுதபாணி சுவாமி கோவில், பழனி - 624 601, திண்டுக்கல் மாவட்டம்’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி ஊக்கத்தொகை ஆகியன, இலவசமாக வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி நிலையத்தில் மூன்று ஆண்டு பயிற்சிக்கு பின், இவர்கள் தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஓதுவார் பணியிடங்களில் பணி அமர்த்தப்படுவர். முதல் நிலைக் கோவில்களின் ஓதுவார் பணியிடங்களுக்கு 5,200 முதல் 15,900 ரூபாய் வரையும், பிற கோவில்களில் 3,300 முதல் 9,900 ரூபாய் வரையும் சம்பளம்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us