கும்மிடிப்பூண்டி ஆந்திர மாநிலத்திற்கு <உட்பட்ட தீவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தினமும் இரண்டு மணி நேர படகு சவாரி மூலம் தமிழக அரசு பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ கட்டுப்பாட்டில் உள்ள ராக்கெட் ஏவுதளமான சதிஷ் தவான் விண்வெளி மையத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது இருக்கம் தீவு. பரந்து விரிந்துள்ள பழவேற்காடு ஏரியின் மத்தியில் ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட அழகான தீவு கிராமம்.
11,659 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தீவில் 750க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட தீவாக இருந்தாலும் அவர்களின் தாய்மொழி தமிழாக உள்ளது. மீன்பிடி தொழிலை பிரதானமாக கொண்ட அவர்கள், தீவில் ஊற்றெடுக்கும் சுவையான குடிநீரைக் கொண்டு விவசாயமும் செய்து வருகின்றனர்.
கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் எந்த விதத்திலும் அவர்களை பாதிக்காதபடி பழவேற்காடு ஏரியின் அரவணைப்பில் வசித்து வருகின்றனர். மருத்துவம், வீட்டு உபயோக பொருட்கள், மீன்பிடி பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு படகில் பயணித்து கும்மிடிப்பூண்டி அருகே தமிழக எல்லைக்கு <உ<ட்பட்ட சுண்ணாம்புக்குளம், ஆரம்பாக்கம் பகுதிக்கு அவர்கள் வந்து செல்வது வழக்கம்.
அந்த தீவில் ஐந்தாம் வகுப்பு வரை கொண்ட இரண்டு துவக்க பள்ளிகள் உள்ளன. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 110 மாணவ, மாணவியர் உள்ளனர். அங்கிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள ஆந்திர மாநில உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்வது என்பது இயலாத ஒன்று. இதனால் பழவேற்காடு ஏரியில் தினமும் இரண்டு மணி நேர படகு சவாரி மூலம் தமிழக பகுதிக்கு உட்பட்ட சுண்ணாம்புக்குளம் மற்றும் ஆரம்பாக்கத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.
சுண்ணாம்புக்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 70 பேரும், ஆரம்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 40 பேரும் பயின்று வருகின்றனர். ஆந்திர அரசும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து தமிழகம் செல்லும் பள்ளி மாணவர்களுக்காக இரண்டு சிறப்பு படகுகள் இயக்கி வருகின்றனர்.
கட்டண சலுகையாக படகின் மாதாந்திர பராமரிப்பு செலவுகளை மட்டுமே பெற்றோரிடம் கட்டணம் பெறுகின்றனர். 100 பேர் செல்லக் கூடிய திறன் கொண்ட படகுகள் என்பதால் எந்தவித பயமுமின்றி மாணவ, மாணவியர் பயணித்து வருகின்றனர்.
போதிய பஸ் இல்லை, தாமதமாக வரும் பஸ், போக்குவரத்து நெரிசல் போன்ற எந்த சிக்கலும் இல்லாமல் அமைதியான நீர்வழி பயணத்தில் பள்ளி சென்று வருகின்றனர். திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர்கள் பழமொழி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த தமிழ் பேசும் மாணவ, மாணவியர் நீர் வழியாக பயணித்து தமிழகத்தில் கல்வி எனும் திரவியத்தை திரட்டி வருகின்றனர்.