குழந்தை எழுதுவது ஒரு அற்புதம்! | Kalvimalar - News

குழந்தை எழுதுவது ஒரு அற்புதம்!அக்டோபர் 12,2011,10:09 IST

எழுத்தின் அளவு :

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது"

பிரான்சிஸ் பேகனின் ஒரு புகழ்வாய்ந்த பொன்மொழி இது.

எழுதுவதில் ஒரு மந்திரம் இருக்கிறது. ஒரு குழந்தை எழுத ஆரம்பிக்கையில், அதன் மூளையில் பலவிதமான துறுதுறுப்புகள் உண்டாகின்றன. இந்த துறுதுறுப்புகள் எழுத்து சிந்தனையால் ஏற்படுபவை. பின்னர், எழுதிய அந்த விஷயங்களை குழந்தையானது பேச முயல்கிறது மற்றும் முன்வருகிறது.

வரைதல் என்பதும் தகவல் தொடர்பின் ஒரு நிலை. தகவல்தொடர்பின் ஒரு அற்புத நிலையாக வரைதல் திகழ்கிறது. குழந்தைகளுக்கு இது ஒரு முக்கிய காலகட்டம். தன்னுடைய உணர்வுகளை எளிய முறையில் தெரிவிக்கும் வகை வரைதலாகும். எழுத்திற்கு முன்னர் வரைதலே, தகவல் தொடர்பாக இருந்தது. வரைதல் என்பது சிறந்த கலை என்றாலும், தகவல் தொடர்பு என்ற அளவில் இது மிகவும் இன்று ஒதுங்கியிருக்கிறது. ஏனெனில், இது ஒரு அறிவியலாக வளரவில்லை.

உங்கள் குழந்தையை வரைய ஊக்குவிக்கவும். தனது மனதில் இருப்பதை குழந்தை வரையப் பழகுவது நல்லது. பின்னர், சிறிது சிறிதாக அதை எழுதுவதற்குப் பழக்கலாம். அதிகமாகப் பேசும் குழந்தைக்கூட, எழுதும்போதுதான் திருப்தியாகவும், அமைதியாகவும் இருக்கும்.

குழந்தையின் எழுதும் திறனை மேம்படுத்தல்

எழுதுதல் செயல்பாடானது, உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சி உணர்வையும், திருப்தியையும் தருகிறது. எழுதும் செயல்பாட்டில் ஒரு குழந்தை தன்னியக்க ஆனந்த செயல்பாட்டில் செல்கிறது. எனவே ஒரு வளரும் மேதைக்கு எழுத்து என்பது முக்கியமானது.

பள்ளிக்கு ஒரு குழந்தையை அனுப்புகையில், ஆசிரியரால் ஒவ்வொரு குழந்தையின் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்கும் தனியான கவனத்தைத் தர முடிவதில்லை. ஆனால் வீட்டில் பெற்றோர்களால் அதை செய்ய முடியும். எழுதுதலானது, ஒரு குழந்தையின் சிந்தனையை தெளிவுபடுத்துகிறது. இதைத்தவிர, பிறருடன் ஒத்துப்போகும் திறன் மற்றும் அமைப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும், நல்ல எழுத்துப் பயிற்சி ஒரு சிறந்த தகவல் தொடர்பாளராகவும் குழந்தையை மேம்படுத்துகிறது.

ஊக்குவித்தல்

உங்கள் குழந்தைக்கு நல்ல எழுத்துப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக, வற்புறுத்தக்கூடாது மற்றும் அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது. இதனால் உங்கள் குழந்தைக்கு எழுவதின் மீதே வெறுப்பு ஏற்படக்கூடும். மாறாக, சிறு பரிசுப் பொருட்கள், பாராட்டு மற்றும் உற்சாகத்தைக் கொடுக்கலாம். எழுதுவதை ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்காக மாற்றலாம்.

குழந்தையிடம், கதைகள் மற்றும் கவிதைகளைப் படிக்கலாம். கவிதைகளின் ஓசை நடையும், இனிய இசையும் குழந்தையின் கற்பனைத் திறனை வளர்க்கும். குழந்தையுடன் வார்த்தை விளையாட்டுக்களையும் விளையாடலாம். மேலும், வார்த்தை விளையாட்டை குடும்ப விளையாட்டாகவும் விளையாடலாம். டிக்ஷனரி(Dictionary) உபயோகிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்கலாம்.

இதன்மூலம் குழந்தையின் வார்த்தை அறிவு வளர்ந்து அதன்மூலம் அதன் எழுத்து வளம் மேம்படும். ஒரு குழந்தை அறிவாளியாக வளரும் செயல்பாட்டில் வார்த்தை வளம் என்பதும் மிகவும் முக்கியம்.

நீங்கள் பணிக்கு செல்லும் பெற்றோராக இருக்கலாம். இதனால் போதுமான நேரத்தை உங்கள் குழந்தையுடன் செலவழிக்க முடியாமல் இருக்கலாம். எனவே, உங்களின் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை பேசுவதற்கு சந்தர்ப்பம் வாய்க்காமல் போகலாம். இதுபோன்ற நேரங்களில் உங்கள் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை, எழுதுமாறு நீங்கள் கூறலாம். ஏனெனில், பல சமயங்களில் நேரடியாக பேசுவதைவிட, எழுதும்போது எண்ணங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படும். குழந்தையின் சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு இந்த எழுத்துப் பழக்கம் மிகவும் முக்கியமானது. அடிக்கடி எழுதுவதால் குழந்தையின் தகவல் தொடர்பு திறனோடு, சிந்தனைத் திறனும் வளர்ச்சியடைகிறது.

இடம், நேரம் முக்கியமல்ல

உங்கள் குழந்தை வரைவதற்கும், எழுதுவதற்கும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். அதேசமயம், அந்த இடத்தைவிட்டு வேறொரு இடத்தில் உங்களின் குழந்தை அமர்ந்து எழுதினாலோ அல்லது வரைந்தாலோ, குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு வற்புறுத்தக்கூடாது. அதற்காக கடிந்து கொள்ளவும் கூடாது. ஏனெனில் குழந்தைக்கு சுதந்திரம்தான் முக்கியமே தவிர இடமல்ல. அது ஒன்றும் பெரிய தவறுமல்ல.

மேலும், நீங்கள் உங்களின் குழந்தையிடம் சிறிய எழுத்துவேலை அல்லது வரையும் வேலையைக் கொடுத்திருந்தால் அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படி நெருக்கடி தரக்கூடாது. குழந்தைக்கு சிந்திப்பதற்கு நேரம் தேவை. ஒரு குழந்தை சிந்திப்பது என்பது நாம் சிந்திப்பது போன்றதல்ல. குழந்தை சிறிதுநேரம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் வேலையை செய்து கொண்டிருக்கலாம். அதன் மூளை தயாராக நேரம் தேவை. எனவே, குழந்தை சிந்திப்பதற்கு நல்ல சுதந்திரம் முக்கியம்.

முறையான அணுகுமுறை

ஒரு குழந்தையின் எழுத்து முயற்சியில் சிறுசிறு தவறுகள் ஏற்படுவது ஒரு தவிர்க்கவியலா அம்சம். ஆனால் ஒரு நல்ல பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தையின் கருத்துதான் முக்கியமே தவிர, அதிலிருக்கும் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை போன்றவைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இவை காலப்போக்கில் சரிசெய்யத்தக்கவை.

தனியுரிமை பாதுகாப்பு

உங்கள் குழந்தை ஒன்றை எழுதியிருந்தால் அதை திருத்தி எழுத வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் குழந்தையின் தனித்தன்மை சிந்தனை பாதிக்கப்படலாம். உங்கள் குழந்தை எழுதிய விஷயங்களுக்கு அது மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டும். குழந்தையின் தனித்தன்மையை சிதைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது.

விமர்சனம் தவிருங்கள்

ஒவ்வொரு மேதையுமே பாராட்டுதல்களிலிருந்து உருவாகிறார்கள் என்று ஒரு பொன்மொழி உண்டு. எனவே உங்கள் குழந்தையின் எழுத்திலுள்ள நேர்மறை விஷயங்களை எடுத்துக்கொண்டு அவர்களைப் பாராட்ட தவற வேண்டாம். நுட்பம், விரிவான விவரணங்கள், சிந்தனை மற்றும் கற்பனையைத் தூண்டும் விஷயங்கள் போன்ற அம்சங்கள்தான் எழுத்தில் இருப்பதுதான் ஒரு வளரும் மேதையின் அடையாளங்கள். எனவே, அதுபோன்ற அம்சங்களை அடையாளம் கண்டு நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

பின்பற்றுதல்

உங்கள் குழந்தையின் எழுத்தில், வேறு எவரின் தாக்கமாவது இருந்தால் அதைப்பற்றி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில், அது ஒரு ஆரம்ப படிநிலை. உலகில் பல பெரிய எழுத்தாளர்கள், இளமையில் வேறு யாரேனும் ஒரு இலக்கியவாதியால் கவரப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு பிறரின் பாதிப்பு உங்கள் குழந்தைக்கு இருந்தாலும், பின்னாளில் அது தனது தனித்தன்மையைப் பெறும்.

தகவல்தொடர்பை ஊக்குவித்தல்

உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு உங்களின் பிள்ளையை கடிதம் எழுதச் செய்யும் செயல்பாடு ஒரு முக்கிய அம்சமாகும். இதன்மூலம் சமூக தகவல்தொடர்புத் திறன் உங்கள் குழந்தைக்கு மேம்படும். மேலும், பண்டிகை மற்றும் விழா காலங்களில் வாழ்த்து அட்டைகளில் குழந்தையின் சொந்த வாசகங்களை எழுத வைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பலாம்.

மேலும், பேனா நண்பர்கள் கலாச்சாரத்தையும் உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் உங்களின் குழந்தைக்கு ஒரு புதிய உலகம் திறக்கப்படும்.

கேட்பவற்றை எழுத வைத்தல்

உங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பாடல் மிகவும் பிடித்தால்(ஆபாசமில்லாத பாடல்கள்) அந்த பாடலை டேப்-ரெக்கார்டர் போன்றவற்றில் கேட்க வைத்து, அந்த வரிகளை அப்படியே பேப்பரில் எழுத வைக்கலாம். இதுமட்டுமின்றி, கவிதைகள் மற்றும் செய்யுள்கள் போன்றவைகளை, புத்தகத்தில் படித்தாலும், அவற்றை தனியாக பேப்பரில் எழுத வைக்கலாம். சிறந்த எழுத்துப் பயிற்சியானது, உங்கள் குழந்தையின் கைத்திறனை மட்டுமின்றி, மூளைத்திறனையும் அதிகரிக்கின்றது.

பட்டியலிடும் பழக்கம்

அதிகமான பாடங்கள் படிக்க வேண்டியிருந்தாலும் சரி, வீட்டில் ஏதேனும் வேலை செய்ய வேண்டியிருந்தாலும் சரி, புத்தகங்களை அடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அதிகமானப் பொருட்களை வாங்க கடைக்கு சென்றாலும் சரி, இதுபோன்ற பல விஷயங்களுக்கு பட்டியலிட்டு வேலை செய்ய உங்கள் குழந்தையைப் பழக்கவும். ஏனெனில் இந்தப் பட்டியலிடும் பழக்கமானது, ஒரு அமைப்பு ரீதியான திறனை வளர்ப்பதோடு, எதையும் மறக்காமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் ஒரு வேலையை எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்ற ஒரு வரைவு திட்டத்தையும் வழங்குகிறது.

சஞ்சிகைகள்(Journals)

சஞ்சிகைகள் படிக்கும் பழக்கம் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த முறையாகும். சிறு பிள்ளைகளைப் பொறுத்தவரை, முக்கியமாக 2 வகை சஞ்சிகைகள் இதற்கு பொருத்தமானவை. செய்தி சஞ்சிகைகள் மற்றும் சுற்றுலா சஞ்சிகைகள். செய்தி சஞ்சிகைகள் விரிவான சமூக அறிவை வளர்ப்பவை. சுற்றுலா சஞ்சிகைகள் உலகத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து, அதன்மூலம் விஷயங்களை எளிதில் கற்று, எழுதத் தூண்டுபவை. எனவே, சஞ்சிகைகளை உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, அதன்மூலம் அவர்களின் உலகை பரந்துபடச் செய்யுங்கள்.

நாம் பெரியளவில் திட்டமிட்டு செயல்பட்டு, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி நம் குழந்தைக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எல்லா பெற்றோர்களாலும் அது முடியாது. எல்லா குழந்தைகளுக்கு அதை வழங்க வேண்டிய அவசியமுமில்லை. மேலே சொன்ன அம்சங்களில் சிலவற்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே போதும். குழந்தையின் உள்ளார்ந்த திறன்கள் நன்கு மேம்படும். இன்றைய தகவல்தொடர்பு யுகத்தில் இதுபோன்ற எழுத்துப் பயிற்சிகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்களின் கடமையை மறந்துவிடலாகாது.

Advertisement

வாசகர் கருத்து

எழுதுவது என்கிற செயல் அரிதாகி வரும் இந்த சமயத்தில், உண்மையில் இது போன்ற கட்டுரைகள் தேவைதான். இதனை அளித்த தினமலருக்கு நன்றி . இது போன்ற எழுதுவதின் சிறப்பை உணர்த்தும் கட்டுரைகளை அடிக்கடி பிரசுரிக்கவும். நன்றி .
by A Murali,India    2011-10-13 11:02:17 11:02:17 IST
தொடர்ச்சியாக எழுதுங்கள்... நன்றி...
by கமல் செல்வராஜூ ,India    2011-10-13 10:16:31 10:16:31 IST
பிற மொழியினர் போன்று தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியில் எழுதக் கற்றுக் கொடுப்பதே இதில் குறிப்பிட்டுள்ள சிறப்புகளைத் தரும். கட்டுரையாளருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
by Ilakkuvanar Thiruvalluvan,India    2011-10-13 05:15:15 05:15:15 IST
good
by mmasal,India    2011-10-12 13:24:50 13:24:50 IST
payanulla karthukkal. kaditham ezthum thinam enru oru naal kondadalam.
by uma,India    2011-10-12 12:11:30 12:11:30 IST
அருமையான கறுத்து தொகுப்பு. இது பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோகளுக்கும் உதவும் ஆனால் இதை அவர்கள் உணர்வார்கள?
by லக்ஷ்மிகாந்தன்,India    2011-10-12 11:54:14 11:54:14 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us