எந்த கல்லூரி மற்றும் பாடத்தை தேர்வு செய்வது: | Kalvimalar - News

எந்த கல்லூரி மற்றும் பாடத்தை தேர்வு செய்வது:-17-06-2011

எழுத்தின் அளவு :

எப்படியாவது, பணம் கொடுத்தாவது, ஏதேனும் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்று நினைப்பது தவறு. ஏனெனில் பொறியியல் படிக்க ஆசைப்படும் அனைவருக்குமே கட்டாயம் இடம் உண்டு. அந்தளவிற்கு தமிழ்நாட்டில் கல்லூரிகள் உள்ளன. நல்ல கல்லூரி என்று பார்த்தால், சென்னை அண்ணா பல்கலையில் படிக்க முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

பிறகு மற்ற அரசு கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் தரலாம். அரசு கல்லூரிகளில் கட்டணம் குறைவு என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும். பின்னர் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் தரலாம்.

அடுத்ததாக, சுயநிதி கல்லூரிகளுக்கு வர வேண்டும். அத்தகைய கல்லூரிகளைப் பொறுத்தவரை, உள்கட்டமைப்பு, ஆசிரியர் தகுதி மற்றும் அனுபவம், வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களை யோசித்து முடிவுசெய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற கல்லூரிகளில் சில, ஆங்கில மொழி பயிற்சி, மேற்படிப்பு பயிற்சி மற்றும் வேலைக்கு தயாராகும் பயிற்சி போன்ற விஷயங்களை வழங்கும். எனவே இந்த அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு நல்ல கல்லூரி கிடைத்து, விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் வேலைவாய்ப்பு நிச்சயம். அதேசமயத்தில், கல்லூரி மட்டுமே உங்களின் வாய்ப்பை உறுதிசெய்து விடாது. நன்றாக படிப்பது உங்களின் கையில்தான் உள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் கல்லூரிகள்தான் சிறந்தது என்றில்லை. வெளியூர்களில் பல சிறப்பான கல்லூரிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் பிள்ளைகள் வாழ்வில் பக்குவப்பட, அவர்களை விடுதியில் சேர்க்கவும் பெற்றோர் முன்னுரிமை தரலாம்.

உகந்த படிப்பு எது: முதலில் பொறியியல் படிப்பு ஒத்துவருமா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் பள்ளி படிப்பிற்கும், பொறியியல் படிப்பிற்கும் சில வித்தியாசங்கள் உண்டு.

ஆரம்ப காலங்களில், சிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் போன்ற துறைகள்தான் இருந்தன. அதேசமயம் இன்று ஏராளமான துறைகள் வந்துவிட்டன. மேலும் தனித்தனியாக இருந்த பல துறைகள் இணைந்து இன்று ஒன்றாகிவிட்டன.(எ.கா  மெக்கானிக்கல்+எலக்ட்ரானிக்ஸ் = மெக்கட்ரானிக்ஸ். பயாலஜி+டெக்னாலஜி=பயோடெக்னாலஜி).

அன்று பெண்களுக்கான பொறியியல் பிரிவுகள் குறைவு. இன்று அதிகம். மேலும் நாம் படிக்காத பல பாடங்களைப் பற்றி தெரிந்து கொள்வதும் நல்லது. ஏனெனில், பின்னாளில் அதுதொடர்பான பணியும் கிடைக்கலாம். கல்லூரி மற்றும் படிப்பை தேர்ந்தெடுப்பதில், பெற்றோர் தவிர வெளியாட்கள் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.

பொறியியல் கல்லூரிகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் 486 சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், 17 உறுப்பு பொறியியல் கல்லூரிகளும், 6 அரசு பொறியியல் கல்லூரிகளும், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் இருக்கின்றன.

பள்ளி நிலையில் அடிப்படை அறிவியல் உண்டு. அந்த அறிவியலின் பயன்பாடுதான் பொறியியல், அந்த பொறியியலின் பயன்பாடு தொழில்நுட்பம். மொத்தம் 41 தொழில்நுட்ப படிப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us