பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை...... | Kalvimalar - News

பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை......-16-06-2011

எழுத்தின் அளவு :

தங்களின் பிள்ளைகள் பெரிய இன்ஜினீயராக ஆக வேண்டும் என்ற ஆசை, பிள்ளைகளை விட, ஏராளமான பெற்றோர்களுக்கு இருக்கும் காரணத்தால்தான், நாட்டில் எங்கு பார்த்தாலும் பொறியியல் கல்லூரியாக உள்ளன. நவீன மயமாகிவரும் உலகில், பொறியியல் படிப்பின் தேவை அதிகமாக உள்ளதால், அந்த படிப்பின் முக்கியத்துவமும் குறையவில்லை. தங்களின் குழந்தைகள் பொறியாளராக வேண்டும் என்று ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அதில், உங்கள் குழந்தைக்கு விருப்பம் உள்ளதா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொறியியல் துறை மீதே வெறுப்பு உள்ள ஒரு பிள்ளையிடம், நீ பொறியியல்தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது எந்த வகையிலும் சரியானதல்ல. உங்கள் குழந்தை ஆரம்பத்தில் இருந்தே எதில் ஆர்வம் கொண்டுள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப முடிவு செய்யவேண்டும்.

பொறியியல் துறையில் உங்களின் பிள்ளைக்கு விருப்பம் இருந்து, பொறியாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டால், பெற்றோராக, நீங்கள் எவ்வாறு நன்மை செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

* உங்களின் பிள்ளை, எந்த பிரிவில் படிக்க விரும்புகிறான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

* அந்த பிரிவுக்கான வேலை வாய்ப்புகளைப் பற்றி நீங்கள் முடிந்தளவு விசாரிக்க வேண்டும்.

* பொறியியல் படிப்பிற்கு ஆகும் செலவை உங்களால் சமாளிக்க முடியுமா என்பதை நன்கு யோசித்து அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஆசைப்பட்டு, சேர்த்துவிட்டு, பிறகு முடியாமல் சிரமப்பட்டு வருத்தப்படக் கூடாது. அதேசமயம், வங்கிகளில், பொறியியல் படிப்புகளுக்கென்று பரவலாக கல்விக் கடன்கள் கிடைக்கின்றன. எனவே அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.

* உங்களின் பிள்ளை எந்த பிரிவை விரும்புகிறதோ, அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். நீங்கள் நினைத்து வைத்த அல்லது உங்களுக்கு ஆசை உள்ள பிரிவை, பிள்ளையின் மீது திணிக்கக் கூடாது.

* எப்படியாவது பொறியியல் சேர்ந்துவிட வேண்டுமே என்று எண்ணி, ஏதாவது ஊர் பேர் தெரியாத கல்லூரியில், இடம் கிடைத்ததே என்று அவசரப்பட்டு சேர்த்து விட்டுவிடக்கூடாது. ஏனெனில், தமிழகத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான இடங்கள் காலியாக உள்ளன. எனவே பொறியியல் இடம் கிடைக்காதோ என்ற கவலை எப்போதுமே வேண்டாம்.

உங்கள் பிள்ளையின் மதிப்பெண்ணுக்கு ஏற்ற வகையில்(குறைவாக இருந்தாலும்கூட), தகுதியானவர்களிடம் விசாரித்து, ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும். அப்போதுதான் உங்களின் பணமும், காலமும் விரயமாகாது.

* பொருளாதார விஷயம் சிக்கலாக இருந்து, உங்களின் பிள்ளையும் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால், அரசு கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். ஏனெனில் அங்கே கட்டணம் குறைவு. அதற்கடுத்து, அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

* தனியார் கல்லூரிகளில் சேர்த்துவிட விரும்பினால், அக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் தகுதி மற்றும் தரம், கல்லூரி முதல்வர் எத்தனை ஆண்டுகளாக பொறுப்பில் இருக்கிறார்(அடிக்கடி முதல்வர் மாறினால் அங்கே எதுவும் சரியில்லை என்று அர்த்தம்), அக்கல்லூரிக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதை, அக்கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பன போன்ற பல அம்சங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

மேலும் சில தனியார் கல்லூரிகள், ஆங்கில மொழி பயிற்சி, மேற்படிப்பு பயிற்சி மற்றும் வேலைக்கு தயாராகும் பயிற்சி போன்றவற்றை வழங்குவதால், அதுபோன்ற கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் தரலாம்.

* நீங்கள் வசிக்கும் ஊரிலேயே இருக்கும் ஒரு கல்லூரியில் உங்களின் பிள்ளையை சேர்க்க நீங்கள் விரும்பியிருக்கலாம். ஆனால் கவுன்சிலிங்கில் அக்கல்லூரியில் இடம் கிடைக்காமல், பிள்ளையை வெளியூர் அனுப்ப வேண்டிய நிலை வரலாம். அப்போது மனம் உடைந்து கலங்காமல், பிள்ளைக்கு நம்பிக்கையூட்டி, தேவையான புத்திமதிகளை சொல்லி, தைரியமாக அனுப்பி வைக்க வேண்டும்.

வெளி சூழலில் பிள்ளைகள் பழகுவது, அவர்களின் விட்டுக்கொடுக்கும் திறனை வளர்ப்பதுடன், எதிர்கால வாழ்க்கைக்கும் நல்லது. அவர்களின் மீது சீரான கண்காணிப்பையும் தொடர வேண்டும்.

* உங்களின் பிள்ளை 12 ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் பொறியியல் சேர்ந்திருக்கலாம். எனவே, 4 வருட பொறியியல் படிப்பை எளிதாக சமாளித்து விடுவார், அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது. பள்ளிப் படிப்பை போன்றே இங்கும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும்.

இல்லையெனில் நிறைய பாடங்கள் அரியர் வைத்து, படிப்பே வீணாகிவிடும். எனவே தொடர்ந்து கண்காணித்து, சரியான அறிவுரைகள் கூற வேண்டும். உங்கள் பிள்ளையின் ஆசிரியர்களையும் சந்தித்து கலந்துரையாட வேண்டும்.

* நீங்கள் சேர்க்க விரும்பும் கல்லூரியின் புக்லெட் -ல் கொடுக்கப்பட்டுள்ள கட்டண விவரங்களை(கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், கல்லூரி பேருந்து கட்டணம் முதலியவை) தெளிவாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள தொகையையே கல்லூரியில் கேட்கிறார்களா? என்பதையும் சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்டுள்ளதைவிட அதிக தொகையை கல்லூரி நிர்வாகம் கேட்டால், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் புகார் செய்யலாம்.

* ஒரு குறிப்பிட்ட கல்லூரியை தேர்வுசெய்து விட்டால், குறிப்பிட்ட தேதிக்குள் அங்கே ஆஜராகிவிட வேண்டும். ஒருவேளை அதற்குள் பணம் புரட்ட முடியவில்லை எனில், அந்த கல்லூரிக்கு தொடர்பு கொண்டு அவகாசம் கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் அசால்ட்டாக இருந்தால், ஆரம்பத்திலேயே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு உங்கள் பிள்ளையின் படிப்பும், சூழலும் பாதிக்கப்படலாம்.

* கவுன்சிலிங் மாணவர் சேர்க்கை நடைமுறையில் என்னென்ன ஒதுக்கீட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர் பிள்ளைகளுக்கான ஒதுக்கீடு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு, ஜாதிவாரியான ஒதுக்கீடு போன்ற சிலவகை ஒதுக்கீடுகள் உள்ளன.

 

 

 

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us