கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? | Kalvimalar - News

கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?-16-06-2011

எழுத்தின் அளவு :

மதிப்பெண் வந்தவுடன், எந்த கல்லூரியில் எந்த பிரிவை எடுக்கலாம் என்பதை,  கடந்த ஆண்டு, இதே கட்ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடத்தை வைத்து முடிவு  செய்யலாம். ஆனால், இது உத்தேசமானதுதான். சில நேரங்களில் கடந்த ஆண்டு அதே மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடம் இப்போது கிடைக்காமல் போகலாம்.  கிடைக்கவும் செய்யலாம்.

180 கட்ஆப் எடுத்த மாணவர் அண்ணாப் பல்கலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதே சமயத்தில் புதிய கல்லூரியில்தான் கிடைக்கும் என்பதில்லை. கடந்த முறை மாணவர்கள் பாடப்பிரிவுகளையும் கல்லூரிகளையும் தேர்வு செய்தது போல் இந்த ஆண்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, என்றாலும் கடந்த  ஆண்டுகளை ஒப்பிடும் போது பெரிய அளவில் மாற்றம் இல்லை. மதிப்பெண் வந்துவிட்டதால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் இணைந்து, 1015 கல்லூரிகளை தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். 180 கட்ஆப் எடுத்த மாணவர் 177 முதல் 183 வரை கட்ஆப்  வரை கிடைத்த கல்லூரியிலிருந்து தேர்வு செய்து கொள்வது நல்லது.

ஒவ்வொருவர் பார்வையிலும் கல்லூரியைப் பற்றிய மதிப்பீடு மாறுபடும். சில பெற்றோர்கள் கல்லூரியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தால்தான் படிப் பார்கள் என்று நினைப்பார்கள். சில மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான்  படிப்பார்கள் என்று நினைப்பார்கள். அதைப் பொறுத்துதான் அவர்கள் கல்லூரியைத்  தேர்வு செய்ய வேண்டும். வீட்டிலிருந்து சென்று படிக்க வேண்டுமா. விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

நான்கு ஆண்டுகள் அந்த கல்லூரியில்தான் இருக்க வேண்டும் என்பதால், இதையெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதையெல்லாம் அந்தந்த கல்லூ ரியில் படித்த மாணவர்களிடம் கேட்கலாம். இதையெல்லாம் விட முக்கியமாக வேலைவாய்ப்பு எப்படி, உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி என்ற விபரங்களையும் சேகரிக்க வேண்டும்.

இன்ஜினியரிங் கல்லூரியைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பு வசதியும், ஆசிரியர்களின் திறனும் மிக முக்கியம். லேபரேட்டரி வசதி எப்படி, பயிற்சி அளிக்கும் முறைகள் திருப்திதானா என்பதையும் பார்க்க வேண்டும். பாடம் தவிர்த்த பிற திறன் வளர்த்தலில் கல்லூரியின் செயல்பாடு ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்.

கல்லூரியில் சேர்வதற்கு முன், அந்த கல்லூரியைச்  பெற்றோருடன் சென்று பார்க்க  வேண்டும். அங்குள்ள மாணவர்களைப் பார்த்தும் கல்லூரியில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். அட்மிஷனுக்காக கல்லூரிக்கு செல்வதைவிட, விழிப்புணர்வு பெறுவதற்காகக் கல்லூரிக்கு செல்லலாம் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் தேர்வு செய்த 15 கல்லூரிகளில் 10 கல்லூரியை இறுதி செய்து விடுவோம்.

கவுன்சிலிங்கின் போது, அந்த கல்லூரிகளுக்குள், காலியாக உள்ள இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து தேர்வு செய்வது எளிதாக இருக்கும். சிலர் நல்ல கல்லூரியில் எந்த பிரிவு கிடைத்தாலும் படிக்கிறார்கள்.  சிலர் நல்ல பிரிவு எந்த கல்லூரியில் கிடைத்தாலும் படிக்கிறார்கள். இந்த இரண்டுமே சரியான முடிவுதான்.  அது அவர்களது விருப்பம்.

அப்படி அவர்கள் படித்து முடித்தால் கூட, கண்டிப்பாக அவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். பெற்றோர்களிடம் அனுபவமும் மாணவர்களிடம் புத்திசாலித்தனமும் இருக்கிறது. முடிவு இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்க  வேண்டும். யாருடைய கையிலும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மாணவர் பிடிவாதமாக இருந்தால் பெற்றோர்கள் மாணவர் சிந்திக்க அவகாசம் கொடுக்கலாம்.

இரு தரப்பிலும் மாற வேண்டியிருந்தால் மாறித்தான் ஆக வேண்டும். இரு தரப்பினரும் முடிவு எடுத்துவிட்டால், பின்னர், இப்படி முடிவு செய்திருக்கலாமே அப்படி  முடிவு செய்திருக்கலாமே என்று நினைக்கக்கூடாது. முடிவு எடுத்தபின் அதில் உறுதியாக இருக்க வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us