இந்த ஆண்டு மருத்துவம், பொறியியல் அட்மிஷன் எப்படி? | Kalvimalar - News

இந்த ஆண்டு மருத்துவம், பொறியியல் அட்மிஷன் எப்படி?-02-07-2018

எழுத்தின் அளவு :

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதால், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கே எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், மருத்துவ படிப்புகளுக்கு மேலும் கடும் போட்டி நிலவும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் இருந்து, கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை 88 ஆயிரம் பேர் எழுதிய நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதினர். அதில், மருத்துவ கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மற்றும் தகுதியுள்ள 44 ஆயிரம் பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 33 ஆயிரம் பேர் மட்டுமே தரவரிசை பட்டியலில் இடம்பெற்றிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ‘சீட்’ எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இந்த படிப்புகளுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரம் அதிகரித்துள்ளதும், ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் கணிசமாக அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளதும், மருத்துவ படிப்பிற்கான போட்டியை கடுமையாக்கியுள்ளதை உணரலாம்.

கடந்த ஆண்டு, ‘நீட்’ தேர்வில் 450 மதிப்பெண்களுக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 428 ஆக இருந்தது. அது, இந்த ஆண்டு 521 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 826 லிருந்து, 1,279 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 200க்கும் மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 

கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு கட்டாயம் ஆகுமா? கட்டாயம் ஆகாதா? என்ற பெரும் சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நிலவியதால், தமிழக மாணவர்களால் சரியாக தேர்வை அணுக முடியவில்லை. இந்தாண்டு, ‘எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிக்க‘நீட்’ கட்டாயம் எழுத வேண்டும்’ என்று முழுமையாக, மாணவகள் உணர்ந்து, தேர்வு எழுதியதும் இதற்கு முக்கிய காரணம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதுதவிர, தமிழக மாணவர்கள் ‘நீட்’ தேர்வின் நுணுக்கங்களை புரிந்தும், முறையாக படித்தும் தேர்வு எழுதினர். மேலும், தமிழக அரசு, பிளஸ் 1 படிப்பிற்கு முக்கியத்துவம் அளித்ததும், பாடத்திட்டத்தை மாற்றியதும் கூட, குறிப்பிடத்தக்க காரணம், என்கின்றனர்.

இதுகுறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், “கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் 300 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றிருந்தவர்களின் எண்ணிக்கை 2,568 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 4,791 ஆக அதிகரித்துள்ளது. இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது மாணவர்களின் மதிப்பெண் சார்ந்த செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதை உணரமுடிகிறது. இதனால், இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 50 மதிப்பெண் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 

சுயநிதி கல்லூரிகளின் நிர்வாக இட ஒதுக்கீட்டிற்கு, பிற மாநில மாணவர்களும் விண்ணப்பித்திருப்பதால், சற்று அதிக போட்டி நிலவும். இதற்கு முக்கிய காரணம் பிற மாநிலத்தில், நிகர்நிலை பல்கலைக்கழக கல்விக் கட்டணத்தை விட, தமிழகத்தில் நிர்வாக இட ஒதுக்கீட்டில் கல்விக் கட்டணம் குறைவு என்பதே. அதேநேரம், சுயநிதி கல்லூரிகளின் நிர்வாக இடங்களில், பிரிவு வாரியான இட ஒதுக்கீடு கிடையாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்றார்.

கல்வி ஆலோசகர் கோவிந்தராஜ் கூறுகையில், “தமிழக மாணவர்கள் ‘நீட்’ தேர்வின் நுணுக்கங்களை புரிந்துகொண்டு, சிறப்பாக செயல்படுகின்றனர். இதேநிலை நீடித்தால் வரும் ஆண்டுகளில், தமிழகம் முதலிடத்தை பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த ஆண்டு மருத்துவ ‘சீட்’  கிடைக்காத மாணவர்கள் பலரும், ஓர் ஆண்டு பயிற்சி பெற்று மீண்டும் அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுத விரும்புவார்கள். மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மனம் தளராமல், முறையாக பயிற்சி பெற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் முயற்சி செய்வது சரியான முடிவே. அதனால், வரும் ஆண்டுகளில் மருத்துவ படிப்புகளுக்கான போட்டி மேலும் அதிகரிக்கவே செய்யும்” என்றார்.


எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு இந்தாண்டு தேவைப்படும்  குறைந்தபட்ச ‘நீட்’ மதிப்பெண் - ஓர் தோராய மதிப்பீடு

பிரிவுஅரசு ஒதுக்கீட்டு இடங்கள்நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 
ஒ.சி.,410 360
பி.சி.,360 315
பி.சி.,(எம்)  340315
எம்.பி.சி.,310275
எஸ்.சி.,260220


*குறிப்பு: மேற்குறிப்பிட்டுள்ள  குறைந்தபட்ச ‘நீட்’ மதிப்பெண் தோராய மதிப்பீடு மட்டுமே.


இன்ஜினியரிங் ‘கட்-ஆப்’ எப்படி?

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்த போதிலும், சான்றிதழ் சரிபார்த்தலுக்கு கணிசமான மாணவர்கள் வரவில்லை என்பதால், ‘கட்-ஆப்’ குறையவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

ஜெயப்பிரகாஜ் காந்தி கூறியதாவது: தற்போது வெளியான தரவரிசை பட்டியலை பார்க்கும் போது, ‘கட்-ஆப்’ மதிப்பெண் குறையும் என்பது போல் தோற்றம் அளித்தாலும், மிகப்பெரிய அளவில் குறையாது. இதற்கு முதல் காரணம், கடந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு வருகை தராதவர்களின் ரேங்கும் இத்துடன் இருப்பதே. 

இந்த ஆண்டு இன்ஜினியரிங் கலந்தாய்விற்கு அதிக விண்ணப்பங்கள் வந்த நிலையிலும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 49 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை. கடந்த ஆண்டு, 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள், 196.25 இன்ஜினியரிங் ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு வெறும் 2,200 மாணவர்கள் மட்டுமே 196.25 கட்-ஆப்பிற்கு மேல் உள்ளனர். எனினும், ‘கட்-ஆப்’ ஒரு மதிப்பெண் வரை மட்டுமே குறைய வாய்ப்புள்ளது. 

கடந்த ஆண்டு 190 மதிப்பெண்ணிற்கு மேல் 16 ஆயிரத்து 400 மாணவர்கள் இருந்தனர். இந்த ஆண்டு 9,500 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், கடந்த ஆண்டு 190 ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் பெற்ற கல்லூரிகளில், இந்த ஆண்டு ‘கட்-ஆப்’ மதிப்பெண் குறையும் என்பது நிச்சயம் என்றாலும், பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. இரண்டு மதிப்பெண்கள் குறைவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளது. 

எனினும், ‘கட்-ஆப்’ கீழே செல்ல செல்ல குறிப்பிட்ட அளவு மதிப்பெண் குறைய வாய்ப்புகள் அதிகம். கடந்த ஆண்டு 160 ‘கட்-ஆப்’ மதிப்பெண்களுக்கு மேல் 64 ஆயிரம் பேர் இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 44 ஆயிரம் பேர் தான் உள்ளனர். இதனால் குறைந்தது 100 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெரிதளவில் பாதிக்கப்படும். மேலும், கடந்த ஆண்டுகளின் ‘கட்-ஆப்’ மதிப்பெண்களை ஒரு வழிகட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


‘கல்லூரிக்கே முக்கியத்துவம்’

‘கல்விக் கட்டணம் மிகக் குறைவு என்பதால், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. அதற்கு அடுத்ததாக, அரசு ஒதுக்கீட்டின்கீழ் வரும் தனியார் கல்லூரி இடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். 

இன்ஜினியரிங் படிப்பைப்  பொறுத்தவரை, கல்லூரி தேர்வு மிக மிக முக்கியமான ஒன்று. ஏனெனில், கல்லூரியின் தரத்தைப் பொறுத்தே வேலை வாய்ப்பு எளிதாகிறது. எனவே, இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், சிறந்த கல்லூரிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதே நல்லது என்கின்றனர்’, கல்வியாளர்கள்!

Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us