’ராகிங்’; இன்ஜி., கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை! | Kalvimalar - News

’ராகிங்’; இன்ஜி., கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை!-26-08-2016

எழுத்தின் அளவு :

ராகிங்கை தடுக்காவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்லுாரி, பல்கலைகளில், &'ராகிங்&'கை தடுக்க, உச்ச நீதிமன்றம், வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது; அதன்படி, ஒவ்வொரு கல்லுாரி மற்றும் பல்கலையிலும், ராகிங் தடுப்பு குழு, விசாரணை கமிட்டி போன்றவை அமைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

  • ராகிங் தடுக்க, தனி கமிட்டி அமைக்க வேண்டும்; ராகிங் புகார்களை விசாரிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும்; ராகிங் தடுப்பு பறக்கும் படையும் அமைக்க வேண்டும்
  • மாணவர் சேர்க்கையின் போது, &'ராகிங்கில் ஈடுபட மாட்டேன்&' என, கல்லுாரியிலும், விடுதியிலும் உறுதிமொழி எழுதி வாங்க வேண்டும்; விடுதிகளில், தனியாக ராகிங் தடுப்பு வார்டன் நியமிக்கப்பட வேண்டும்
  • புதிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர, உரிய நிபுணர்களை நியமிக்க வேண்டும்
  • ராகிங் என்ற கிரிமினல் குற்றத்தை விளக்கி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை, மாணவர்கள் கூடும் இடங்களில் வைக்க வேண்டும்.
  • இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ராகிங் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க தவறினாலோ, விதிகளை பின்பற்ற தவறினாலோ, சம்பந்தப்பட்ட கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதலாண்டு மாணவர்களுக்கு தனி விடுதி: 

கல்லுாரி மற்றும் பல்கலைகளில் ராகிங் தடுப்புக்கான மாநில கண்காணிப்பு கமிட்டியின் கூட்டம், கவர்னர் ரோசய்யா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பேசும்போது, தமிழகம், ராகிங் இல்லாத மாநிலமாக தொடர, அரசுத்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்என்றார்.

ராகிங் தொடர்பாக மாணவர்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும். ராகிங்கில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கினால் மற்றவர்கள் அதில் ஈடுபட மாட்டார்கள்,என, கவர்னர் ரோசய்யா தெரிவித்தார்.

உள்துறை செயலர் அபூர்வ வர்மா கூறுகையில், ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கு தரவரிசை நிர்ணயிக்கலாம். வெளிமாநில மாணவர்களுக்கு தனியாக, மாணவர் விவகார கமிட்டி அமைக்கலாம்என்றார்.

ராகிங்கை தடுக்க, புதிய மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களை மட்டும் தனி விடுதியில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கலாம்என, போலீஸ் டி.ஜி.பி., அசோக்குமார் கருத்து தெரிவித்தார்.

தமிழகத்தில் குறைவு: 

கடந்த, நான்கு ஆண்டுகளில், நாடு முழுவதும், 1,804 ராகிங் புகார்கள் பதிவாகி உள்ளன. இதில், உத்தர பிரதேசத்தில், அதிகபட்சமாக, 258 புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, மத்திய பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்களில், அதிக புகார்கள் வந்துள்ளன. 

சிக்கிம், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், கோவா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் குறைந்த அளவுக்கு புகார்கள் வந்துள்ளன. தமிழகத்தில், நான்கு ஆண்டுகளில், 104 ராகிங் புகார்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும், 15 புகார்கள் வந்துள்ளதாக, மத்திய மனிதவள அமைச்சக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

நடப்பது எப்படி?

இன்ஜினியரிங், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லுாரியிலும், விடுதியிலும், சீனியர் மாணவர்கள், ராகிங் செய்கின்றனர். பெரும்பாலும் மருத்துவ கல்லுாரிகளில், அதிக அளவில் ராகிங் நடக்கிறது. 

விடுதிகளில், இரவு நேரங்களில் மாணவர்களை அறைக்கு வெளியே நிற்க வைப்பது; அரைக்கால் சட்டை தவிர, மற்ற ஆடைகளை களைந்து, மற்ற மாணவர்கள் முன்னிலையில் நிற்க சொல்வது; சீனியர் மாணவர்களுக்கு மது, சிகரெட் வாங்கி வர செய்வது; மது பழக்கம் இல்லாத மாணவர்களை, மது அருந்த கட்டாயப்படுத்துவது என, பல வகையில் துன்புறுத்தப்படுகின்றனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us