கவுன்சிலிங் எப்படி நடைபெறும் - கடைசிகட்ட நடைமுறைகள் | Kalvimalar - News

கவுன்சிலிங் எப்படி நடைபெறும் - கடைசிகட்ட நடைமுறைகள்-16-07-2014

எழுத்தின் அளவு :

அழைப்புக் கடிதம் பெற்று, தங்களுக்கான குறிப்பிட்ட நாளில், அண்ணா பல்கலைக்கழகம் சென்ற பின்னர், கவுன்சிலிங் எவ்வாறு நடைபெறுகிறுது என்பது குறித்த வழிகாட்டுதலே இந்தக் கட்டுரை.

* தங்களின் அழைப்புக் கடிதத்தை(Call letter) சமர்ப்பித்த பின்னர், கவுன்சிலிங் கட்டணம் ரூ.5000 ஐ, வங்கி கவுன்டரில் செலுத்தி, அதற்கான வங்கி ரசீது அல்லது சலானை பெற வேண்டும். தங்களுக்கான கவுன்சிலிங் தொடங்குவதற்கு சுமார் 2 மணி நேரங்கள் முன்னதாகவே பணத்தை செலுத்தி விடுவது நல்லது.

அதன்மூலம், கடைசி நேர நெரிசல், பதற்றம் மற்றும் டென்சனை தவிர்க்கலாம். பணத்தைப் பெற்றுக்கொண்டு வங்கி அளிக்கும் சலான், குறிப்பிட்ட கவுன்சிலிங் செஷனில், சம்பந்தப்பட்ட மாணவரின் ரேங்கிங் மற்றும் இதர விபரங்களைக் கொண்டிருக்கும்.

* கவுன்சிலிங்கில், ஒரு நபருக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில், அவருடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். அப்போது வங்கி சலானையும் வைத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விளக்கமளிக்கும் ஹாலில் நுழைந்தவுடன், மாணவரின் வருகை பதியப்படும்.

அதன்பிறகு, கொண்டு வந்திருக்கும் சான்றிதழ்களை எவ்வாறு வரிசைப்படுத்தி, சரிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் பின்பற்ற வேண்டிய இதர விதிமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றி ஒரு சுருக்கமான வழிகாட்டுதல் தரப்படும்.

* அதனையடுத்து, ஒருவரின் அசல் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் சரிபார்க்கப்படும். ஒருவரின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் அசலாக இல்லை அல்லது ஏதேனும் முறைகேடுகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும். வெற்றிகரமாக சரிபார்ப்பை முடித்த மாணவர், கவுன்சிலிங் ஹாலுக்குள் அனுமதிக்கப்படுவார்.

* கவுன்சிலிங் நிறைவுக்கு முன்னதாக, செஷன்(session) ரேங்க் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். காலியாக இருக்கும் இருக்கைகளில், தாங்கள் விரும்பும் இருக்கையில் மாணவர் அமரலாம்.

ஒருவர் தனக்கான 3 விருப்பங்களை(options) கொண்டிருக்க அனுமதி உண்டு. Session ரேங்க் அடிப்படையில், விருப்பங்கள் உறுதி செய்யப்படும். ஒரு மாணவர், கல்லூரி அல்லது பாடப்பிரிவு என்ற வகையில், குறைந்தபட்சம், 5 முதல் 10 விருப்பங்கள் வரை ஆராய கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

ஒரு மாணவர், குறிப்பிட்ட கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவை தேர்வுசெய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து வந்திருக்கலாம். ஆனால், அவர் நினைத்த கல்லூரியோ அல்லது பாடப்பிரிவோ, அவரை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களால் ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்டு, இடம் இல்லாமல் போகலாம்.

எனவே, ஒவ்வொரு கவுன்சிலிங் session முடிந்த பின்னரும், TNEA வலைதளத்தில் இடப்படும் விபரங்களைப் படித்து, தெளிவடைந்து கொள்ள வேண்டும்.

தனக்கான குறிப்பிட்ட கவுன்சிலிங் நாளில் மற்றும் செஷனில், தனது விருப்ப பாடப்பிரிவோ அல்லது கல்லூரியோ ஒரு மாணவருக்கு கிடைக்கவில்லை எனில், TNEA வெளியிடும் விபரங்களைப் பார்த்து, அதனடிப்படையில் தனது விருப்பங்களை மறு வரையறை செய்துகொண்டு, தனக்கான விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.

* தனக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வுசெய்த பின்னர், கொடுக்கப்படும் ஒதுக்கீட்டு கடிதத்தை(Allotment letter), குறிப்பிடப்பட்ட கடைசித்தேதி முடியும் முன்னர், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று கொடுத்து, சேர்க்கை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தரமான கல்லூரி

ஒரு கல்லூரி தரமானதா என்பதை மிகச் சரியாக கணிக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அந்த கல்லூரிக்கே நேரில் சென்று, அங்கேயுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை ஆராய்ந்து, அங்கே படித்துக்கொண்டிருக்கும் சில மாணவர்களிடம் பேசி, அக்கல்லூரியில் படித்துமுடித்த சில முன்னாள் மாணவர்களிடம் பேசி, அங்கே வளாக நேர்காணலுக்கு வரும் நிறுவனங்கள் பற்றி அவர்களிடம் கேட்டு, அதன்பிறகே சரியான முடிவுக்கு வர வேண்டும்.

வெறுமனே, ஒரு கல்லூரியின் இணையதளத்தைப் பார்த்தோ அல்லது அந்த கல்லூரியின் நிர்வாகம் சொல்வதை வைத்தோ, மீடியாக்களில் வரும் விளம்பரங்களை வைத்தோ, எதையும் நம்புவது சரியல்ல.

முன்னரே முடிவு செய்தல்

எந்தக் கல்லூரி மற்றும் எந்தப் பாடப்பிரிவு என்பதை முன்கூட்டியே முடிவு செய்துதான் அண்ணா பல்கலைக்குள் நுழைய வேண்டும். அங்கே சென்ற பிறகு, யாரோ, எதையோ சொல்கிறார்கள் என்று கேட்டு முடிவுசெய்தல் கூடாது.

ஒரேயொரு கல்லூரி மற்றும் பாடப்பிரிவை மட்டுமே மனதில் வைத்துக்கொள்ளாமல், குறைந்தபட்சம் 10 கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளையாவது, வரிசைப்படுத்தி வைத்துக்கொண்டு, நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளில், நமக்கான விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும்.

கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் வரிசைப்படுத்தும்போது, நமது மதிப்பெண் எவ்வளவு என்பதை மனதில் வைத்தே முடிவுசெய்ய வேண்டும். குறைந்த மதிப்பெண்களை வைத்துக்கொண்டு, முன்னணி கல்லூரிகளை பட்டியலிட்டு வைத்துக்கொள்வது கூடாது. ஏனெனில், நமது பட்டியலில் ஒன்றுகூட கிடைக்காமல் போகலாம்.

Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us