தாய்மொழி உயிர்; பிறமொழி கருவி | Kalvimalar - News

தாய்மொழி உயிர்; பிறமொழி கருவி-12-03-2013

எழுத்தின் அளவு :

தினமலரின் கல்விமலருக்கு ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தலைவர் தங்கவேலு அளித்த சிறப்புப் பேட்டி:

ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, அவர்களுக்கு எழுத்தர்கள் தேவை இருந்தது. அதற்கு ‘மெக்கலே&' கல்வி முறை வழிவகுத்தது. அதே நடைமுறைதான் தற்போதும் மறைமுகமாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. உலகில் அனைவரும் தங்களது தாய்மொழியிலேயே சிந்திக்கின்றனர். தங்களது தாய்மொழியில் தான் எதையும் சரியாக புரிந்துகொள்ள முடியும்; சிந்திக்கவும் முடியும். சீனா, ஜப்பான், தைவான், கொரியா, ஜெர்மனி போன்ற நாட்டினர் தங்களது தாய்மொழியில் தொழில்நுட்பம் உட்பட அனைத்து துறைகளிலும் கல்வி கற்கின்றனர். அதனால் தான், அவர்களால் எந்த செயலிலும் சிறந்துவிளங்கவும், பிற நாடுகளுக்கு முன்னோடியாகவும் திகழ முடிகிறது.

இந்தியாவில் பொதுவாக தங்களது பிள்ளைகள் தாய்மொழியில் கல்வி கற்க பெற்றோர் விரும்புவதில்லை. ஆங்கிலத்தில் பேசினால்தான் மகிழ்ச்சியடைகின்றனர். இயந்திரம், தொழில்நுட்பம் என பலவற்றை நாம் மேலைநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறோம். நாம் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, பயன்படுத்தும் தொழில்நுட்பம் போன்றவை அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதே. தற்போது சிந்தனையையும் அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்யத் துவங்கிவிட்டோம். இந்தநிலை நீடிக்கும்பட்சத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் தாய்மொழியை மறந்து அனைவரும் ஆங்கிலத்திலேயே கல்வி கற்கும் நிலை வரலாம். அதற்குபிறகும், சீனா, ஜப்பான் நாடுகளைப்போல், சுயமாக சிந்தித்து புதியவற்றை கண்டுபிடிக்க முடியாததற்கான காரணத்தை ஆராயந்து பார்ப்பர். அதன்பிறகு உண்மையை உணர்ந்து, நாம் மீண்டும் தாய்மொழியில் அனைத்தும் கற்க முயற்சித்தாலும் அது சாத்தியமாகுமா?

பிறமொழிகளை கற்பதில் தவறில்லை. முடிந்தவரை பிற மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தாய்மொழியை மறந்துவிடக்கூடாது. நாம் பிற மொழியில் அனைத்தையும் படித்தாலும், தாய்மொழியில் தான் சிந்தனை சீராகும். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் தாய்மொழி என்பது உயிர், பிறமொழிகள் வெறும் கருவி. இன்றைய பள்ளிகளில், இளம் தலைமுறையினர் பாடங்களை புரிந்து படிப்பதற்குப் பதிலாக மதிப்பெண் பெறுவதை மட்டுமே மையமாக வைத்துள்ளனர்.  மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் புரிதலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பாடத்திட்டம் அவசியம். கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கேள்வி கேட்க பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. கற்பிப்பதை மட்டும் கற்கும் நிலையில் அதிக மதிப்பெண் பெற முடியும். ஆனால் சுய சிந்தனை என்பது கேள்விக்குறியே?

குழுவாக செயல்படுதல், கலந்துரையாடுதல், பிறரிடம் பழகும் தன்மை அனைத்தும் முன்பு இதே சமுதாயத்தில் இயற்கையாக அமைந்திருந்தது. தற்போது இவற்றை ‘சாப்ட் ஸ்கில்ஸ்&' என்ற பெயரில் பணம் கொடுத்து கற்கும் நிலையில் உள்ளோம். வரும்காலத்தில் குழந்தைகளுக்கு நடக்கவும் கட்டணம் பெற்று கற்றுக்கொடுக்கும் நிறுவனங்கள் துவக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இத்தகைய நிலைகள் மாற உடனடி தீர்வு காண்பதென்பது அரிது. இதில் கல்வி நிறுவனங்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. புத்தகங்களில் உள்ள பாடங்களை மட்டும் கற்பிக்காமல், வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்பிக்கும் பொறுப்பை கல்வி நிறுவனங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். வேலைக்கு தகுதியான ஒரு கருவியைப்போல் மாணவர்களை உருவாக்காமால் தன்னம்பிக்கை, சுய சிந்தனை நிறைந்த உயிராக, இளம் தலைமுறையினரை கல்வி நிறுவனங்களில் இருந்து அனுப்ப வேண்டும். இதில் ஆசிரியர்களுக்கு அதிக பொறுப்பு உண்டு.

அடிப்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்து புதிய கண்டுபிடிப்பு தளத்தை ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளுடனான தொடர்பை கல்வி நிறுவனங்கள் விரிவுபடுத்த வேண்டும். ஆசிரியர்கள், மனசாட்சிப்படி பணிபுரிய வேண்டும். தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் தங்களது திறன்களை ஆசிரியர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு தங்கவேலு தெரிவித்தார்.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us