"திட்டமிடலும், தேடலுமே வெற்றிக்கு வழி" | Kalvimalar - News

"திட்டமிடலும், தேடலுமே வெற்றிக்கு வழி"-18-10-2012

எழுத்தின் அளவு :

தினமலர் நடத்தும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பல ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

அருள்மொழி, தமிழ் (காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி): கேள்வித்தாளை வாங்கியதும், இரண்டு, மூன்று முறை நன்கு படிக்க வேண்டும். பகுதிக்கு தகுந்த முறையில் நேரத்தை பிரித்து அதற்குள் அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் எழுத வேண்டும். இதை இப்போதிருந்தே பழக்கிக் கொள்ள வேண்டும். ஒரு மதிப்பெண்கள் கேள்விகள் அனைத்தும் பாடப்புத்தகத்தில் இருந்து கேட்பதால், நீங்கள் ஒவ்வொரு பாடத்தையும் நன்கு படிக்க வேண்டும். அணி இலக்கணத்தில் "பா" வகைகள் அவசியம் எழுதவும். வார்த்தையின் முதல் எழுத்து ஒரே மாதிரி இருந்தால், அதற்கு "மோனை" என்றும், மாறி வந்தால் அதற்கு "எதுகை" என்றும் எழுத வேண்டும். பொதுக்கட்டுரை எழுதும்போது, முன்னுரை, பொருள், உள் தலைப்பு, முடிவுரை என வரிசைப்படுத்த வேண்டும். மொழி பெயர்ப்பும், பழமொழிக்கு ஏற்ப எழுத வேண்டும். கையெழுத்து தெளிவாகவும், எழுத்துப்பிழை இல்லாமல் எழுதினால், நீங்கள் தமிழிலும் 100 மதிப்பெண் பெறலாம்.

கவிதா, ஆங்கிலம் (அரசு மேல் நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம்): முறையாக சரியாக எழுதி பார்த்து படித்தால், ஆங்கில பாடத்தில் யாரும் "பெயில்" ஆக மாட்டீர்கள். உங்கள் புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களை படிக்க வேண்டும். பொருள் உணர்ந்து படித்தால் எளிதில் மனதில் நிற்கும். முதல் நான்கு பாடத்தில் உள்ள "பேராகிராப்" கேள்விகளையும், ஏழு பாடத்தில் உள்ள இரண்டு மதிப்பெண்கள் கேள்விகளையும் படித்தாலே போதும். இரண்டாம் தாளில் கேட்கப்படும் கதை வினாவுக்கு, "ரப் காபி", "பேர் காபி" என எழுத வேண்டும். அதில் "ரப் காபி"யை அடித்து விட வேண்டும், அப்போது தான் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

சங்கீதா, கணிதம் (அரசு உயர் நிலைப்பள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம்): தினமும் காலை 4.00 மணிக்கு எழுந்து, படித்தால் நன்கு மனதில் நிற்கும். இதை, தினமும் கடை பிடிக்க வேண்டும். கணக்கு என்றால் "கசக்கும்" "கஷ்டம்" என்று நினைக்கக் கூடாது. கணக்கில் எளிதில் மதிப்பெண் பெறும் "கிராப்", "ஜாமென்ட்ரி" ஆகியவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஜாமென்ட்ரிக்கு, மாதிரி வரைபடம் மிக அவசியம். மாணவர்கள் அனைத்து கணக்குகளையும், பழைய கேள்வித்தாளில் உள்ள கணக்குகளையும், பயிற்சி புத்தகத்தில் உள்ளவற்றையும் திரும்ப திரும்ப எழுதிப்பார்த்து, பயிற்சி பெற்றால், கணக்கில் சென்டம் பெறலாம். தேர்வு அறையில் அமர்ந்து கொண்டு யோசித்துக்கொண்டிருந்தால், நேரம்தான் வீணாகும்.

ரேவதி, அறிவியல் (அரசு மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம்): ரெக்கார்டு நோட்டில் அழகாக படம் வரைந்து எழுத வேண்டும். செய்முறைக்கு 25 மதிப்பெண், பாட கேள்விகளுக்கு 75 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்றால் போதும் என்று யாரும் நினைக்கக் கூடாது. பாடத்தில் உள்ள ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் கேள்விகளை படித்தால், தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். 100 மதிப்பெண் பெற "அட்டை டு அட்டை" படிக்க வேண்டும். 3, 4, 5, 7, 12, 15, 16 ஆகிய பாடங்களில் இருந்துதான் திரும்ப திரும்ப கேள்விகள் கேட்கப்படுகின்றன. "சாட்" முறை தயாரித்து எழுத வேண்டும். அறிவியலில் கணக்கு கேள்விகள் உள்ளது, அதில் 9, 10, 11, 15, 16 ஆகிய பாடத்தில் உள்ள கணக்குகளை எழுதி பயிற்சி பெற்றால், முழு மதிப்பெண் பெறலாம். விதிகளை பிழையின்றி எழுதவேண்டும். சில கேள்விகளுக்கு அவசியம் அட்டவணை போட வேண்டும். சரியான முயற்சியும், பயிற்சியும் இருந்தால், எளிதில் வெற்றி பெறலாம்.

நாகராஜன், சமூக அறிவியல் (அரசு மேல்நிலைப் பள்ளி, காரமடை): சிந்திக்கும் ஆற்றல் மாணவர்கள் மத்தியில் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் தான், சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. சமூக அறிவியல் பாடத்தில் கதை எழுதினால் மதிப்பெண்கள் கிடைக்காது. அதனால் பாடத்தை நன்கு படித்து, கேள்விக்கு பதில் எழுத வேண்டும். முக்கிய வார்த்தைக்கு "அடிகோடு" போட வேண்டும். ஒவ்வொரு பாடத்தின் கடைசியில் உள்ள ஒரு, இரண்டு மதிப்பெண்களை நன்கு படித்து நினைவில் வைக்க வேண்டும். வேறுபடுத்துக என்ற கேள்வி புவியியலில் மட்டும் வரும். அட்டவணை படி பிரித்து எழுத வேண்டும். வரலாறு பாடத்தில் ஆண்டு முக்கியம் என்பதால், அதை சரியாக எழுத வேண்டும். அதற்கு பார்முலாவை படிப்பது போல், ஆண்டின் எண்களையும், அதன் முக்கியத்துவத்தையும் எழுதி, நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும். மேப்பில் இடத்தின் பெயர்களை குறிக்கும் போது, புள்ளி வைத்து பெயர் எழுத வேண்டும். நாட்டை குறிக்கும் போது பெயரை மட்டும் எழுதினால் போதும். அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதும் பழக்கத்தை, இப்போது இருந்தே பயிற்சி செய்ய வேண்டும்.

பத்தாம் வகுப்பு வாழ்க்கையின் அடித்தளம்.
"மாணவர்களுக்கு பத்தாம் வகுப்புதான் வாழ்க்கையின் அடித்தளமும், முதல்படியும் ஆகும். பெற்றோர், உங்களிடையே எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அதிகம் வைத்துள்ளதால், நீங்கள் நன்கு படிக்க வேண்டும்,&'&' என, சச்சிதானந்த ஜோதி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.

கார்த்திகேயன், தமிழ்: தமிழை பொறுத்தவரை கையெழுத்து அழகாகவும், தெளிவாகவும், இலக்கண பிழை, அடித்தல், திருத்தல் இல்லாமலும் இருக்க வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை இடம் விட்டு எழுதவும். முக்கிய வினாக்களுக்கு கருப்பு மையால் அடிக்கோடு போட வேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் வகையில் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு தினமும் தமிழ் பாடத்தை படிக்க வேண்டும். கதைகள் எழுதும்போது துணை தலைப்புகள் போடவும். இலக்கணத்தில் சந்திப்பிழை அதிகம் வருகிறது. உதாரணமாக, பள்ளிக்குச் சென்றான் என்று எழுதும்போது அவசியம் "ச்" என்ற எழுத்தை சேர்த்து எழுத வேண்டும். இதை எழுதாமல் விட்டால் அது சந்திப்பிழை என மதிப்பெண்கள் குறைந்து விடும். எந்த கேள்விக்கும் முழுமையான விடை எழுதவும்.

ஏ.கீதா, ஆங்கிலம்: ஆங்கில பாடத்தை சுமையாக நினைக்க கூடாது. ஆங்கிலம் வாழ்க்கைக்கு தேவையானது என்பதால், நன்கு புரிந்து படிக்கவும். எப்போதும் "சின்சியராகவும்", "சிஸ்டமேட்டிக்காவும்"படிக்க வேண்டும். "கீ" வார்த்தை விடைகளுக்கு அடிக்கோடு போடவும். மனப்பாட செய்யுள் எழுதும் போது, ஆசிரியர் பெயரும், தலைப்பும் குறிப்பிடவும். நேரத்தை சரியாக கணக்கிட்டு, கேட்ட கேள்விக்கு மட்டும் விடை எழுதவும். தவறான வார்த்தையை அழிக்க "பெலிக்கானை" பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக ரப்பரை பயன்படுத்த வேண்டும்.

சசிக்குமார், இயற்பியல்: ஒவ்வொரு பாடத்திலும், ஒரு மதிப்பெண் கேள்விகளை நன்கு படிக்க வேண்டும். புளூ பிரிண்டில் கொடுத்துள்ளபடி, கேள்விகளை தேர்வு செய்து படிக்கவும். விதிகள், கணக்கீடு, படம் வரைதல் ஆகியவை தேவையான கேள்விகளுக்கு அவசியம் எழுத வேண்டும்.

கீதா, வேதியியல்: மாணவ, மாணவியருக்கு, வாழ்க்கையின் அடித்தளமாக இருப்பது பத்தாம் வகுப்புதான். பெற்றோர் உங்கள் மீது, அதிக நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வைத்துள்ளனர். உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி இதுவென்பதால், முக்கியத்துவம் கொடுத்து, நல்ல முறையில் படிப்பது அவசியம். வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, சரியான விடையை எழுத வேண்டும். கீ விடைகளுக்கு அடிக்கோடிட்டு தனியாக தெரியும்படி காட்ட வேண்டும். எழுதும் விடைகள் தெளிவாகவும், அடித்தல் திருத்தல் இன்றியும் இருப்பது முக்கியம். ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை தரவாக படிப்பது அவசியம்.

சுமதி, கணிதம்: கணக்கு பாடத்தை கஷ்டம் என்று நினைக்காமல், இயல்பாக படிக்க வேண்டும். அதற்காக அஜாக்ரதையாக இருக்காமல், கணக்குகளை தினமும் எழுதி பார்த்து பயிற்சி பெறவேண்டும். எளிதில் முழு மதிப்பெண் கிடைக்கும் ஜாமென்ட்ரி, கிராப் உள்ளிட்டவற்றை தரவாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். கணக்கில் பார்முலாக்களை, அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும்; நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கணக்கின் விடையை, பாக்ஸ் அமைத்து அதில் குறிப்பிட்டால், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் எளிதில் விடையை கண்டறிவார்; திருத்தும் நேரமும் குறையும். விடை எழுதும் போது எண்களை தெளிவாக எழுதுவது அவசியம்; அடித்தலோ, எண்ணுக்குமேல் மீண்டும் எழுதுவதோ கூடாது.

சுந்தரமகாலிங்கம், வரலாறு: ஒவ்வொரு வினாக்கும் ஏற்ப நேரத்தை ஒதுக்கி விடை எழுதுவதை கற்றுக்கொண்டால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க முடியும். இதற்கு ஆரம்பம் முதலே முறையாக பயிற்சி பெறுவது அவசியம். பெரிய வினாக்களுக்கு விடை அளிக்கும்போது, உள் தலைப்பிட்டு எழுதுவது அவசியம். இவ்வாறான வினாக்களுக்கு வெறும் கதைகளை எழுதி நேரத்தை வீணாக்காமல், கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு ஏற்ப பதில் அளித்தால் போதுமானது. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை நன்கு மனப்பாடம் செய்து, அவை அனைத்துக்கும் விடை அளிப்பது முக்கியம்.

முருகேசன், புவியியல்: புவியியல் பாடத்தில், ஒரு பக்க விடைக்கான வினாக்களுக்கு, பாயின்ட் பாயின்ட்டாக பதில் அளிப்பது அவசியம்; உள் தலைப்புகளுக்கு அடிக்கோடிடுவது மிக மிக முக்கியம். "மேப்"பை குறிக்கும்போது, கலர் கொடுத்து குறித்தால், முழு மதிப்பெண் பெறலாம். குறியீடுகளை தவறாமல் எழுதவேண்டும். ஒவ்வொரு விடைக்கும், அந்த விடைக்கான வினா எண்ணை சரியாக குறிப்பிட வேண்டும். வேறுபாடு குறித்த வினாக்களுக்கு, உதாரணங்கள் எழுதுவது அவசியம்.

சங்கீதா, தாவரவியல்: பாடங்களை தேர்வு செய்து படிப்பதால், டென்ஷன் இன்றி, தேர்வை எதிர்கொள்ளலாம். இந்த பாடத்தில், இரண்டு மதிப்பெண் வினாக்கள் அதிகம் கேட்கப்படுவதால், அவற்றை அதிகம் படிக்க வேண்டும். எந்த ஒரு வினாவையும் கஷ்டம் என்று எண்ணி விட்டு விடக்கூடாது. படிக்க படிக்க அனைத்தும் எளிதுதான் என்பதை உணர்ந்து, தொடர்ந்து படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதிக்க வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us