சென்னை: பொறியியல் சேர்க்கையில், தொழிற்கல்வி பிரிவு மாணவருக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வில், 1,389 மாணவர் சேர்ந்தனர்; 1,600 இடங்கள் நிரம்பவில்லை.
தொழிற்கல்வி பிரிவு மாணவருக்கு, ஜூலை 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை, முதல் கட்ட கலந்தாய்வு நடந்தது. அதற்கு, 3,258 மாணவர் அழைக்கப்பட்டதில், 2,932 பேர் சேர்ந்தனர். 89 பேர் வரவில்லை; கலந்தாய்விற்கு வந்து, 9 பேர், "சீட்&' எடுக்கவில்லை.
இரண்டாவது கட்ட கலந்தாய்வு, 19, 20ம் தேதிகளில் நடந்தன. நேற்று முன்தினம், 1,252 பேர் அழைக்கப்பட்டதில், 402 பேர் வரவில்லை. 802 பேர், சேர்க்கை உத்தரவுகளை பெற்றனர். கலந்தாய்வுக்கு வந்தவர்களில், 48 பேர், "சீட்&' எடுக்கவில்லை.
இரண்டாவது நாளான நேற்று, 1,115 பேர் அழைக்கப்பட்டனர். 440 பேர் வரவில்லை. 587 பேர், சேர்க்கை உத்தரவுகளை பெற்றனர். கலந்தாய்வுக்கு வந்தவர்களில், 88 பேர், "சீட்&' எடுக்காமல் திரும்பிச் சென்றனர். ஒட்டுமொத்தமாக, 7 நாட்கள் நடந்த கலந்தாய்வில் 4,321 பேர், பொறியியலில் சேர்ந்தனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில், தொழிற்கல்வி மாணவருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின.
தனியார் கல்லூரி ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும், 1,600 இடங்கள் நிரம்பவில்லை. பிளஸ் 2 மறுகூட்டல், மறு மதிப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பித்த மாணவருக்கான கலந்தாய்வு, இன்று நடக்கிறது.