சென்னை: ஜூலை 7ம் தேதி முதல் நடந்து வரும் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில், நேற்று வரை, 64 ஆயிரத்து 317 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள நாட்களில், 1.10 லட்சம் இடங்களும் நிரம்ப வாய்ப்பில்லை என்பதால் 60 ஆயிரம் முதல், 70 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 7 முதல் 11ம் தேதி வரை, தொழிற்கல்வி பிரிவு மாணவருக்கான கலந்தாய்வும்; 12ம் தேதி, மாற்றுத்திறனாளி மாணவருக்கான கலந்தாய்வும் நடந்தது. 13ம் தேதி முதல், பொது கலந்தாய்வு நடந்து வருகிறது. மொத்தத்தில், நேற்று முன்தினத்துடன், 27 நாட்கள் நடந்த கலந்தாய்வில், 64,317 இடங்கள் நிரம்பின. நாள் ஒன்றுக்கு, 2,382 இடங்கள் என்ற வீதத்தில், இடங்கள் நிரம்பி உள்ளன.
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில், 4ம் தேதி நிலவரப்படி, 6,374 இடங்கள் நிரம்பின. இன்னும், 1,202 இடங்கள் காலியாக உள்ளன. அரசு, அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில், 4,891 இடங்கள் நிரம்பிய நிலையில், இன்னும் 18 இடங்கள் மட்டுமே மிச்சம் உள்ளன. தனியார் கல்லூரிகளில், அரசு கலந்தாய்வு ஒதுக்கீட்டின் கீழ், 53 ஆயிரத்து 52 இடங்கள் நிரம்பிய நிலையில், 1,10,346 இடங்கள் காலியாக உள்ளன.
பொறியியல் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களை, கல்லூரிகளின் பெயர்கள் பெருமளவிற்கு குழப்புகிறது. ஒரே பெயரில், பல கல்லூரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. பொறியியல் கல்லூரி, பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரி நிறுவனம் என, பல வகையான பெயர்களில், ஒரு வார்த்தையை மட்டும் மாற்றி விடுகின்றனர். இது, மாணவர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
கல்லூரியை தேர்வு செய்வதற்கு முன், கல்லூரியின் பெயரை மிகத் தெளிவாக படித்துப் பார்த்து, அது எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பதை, மாணவர் அறிந்து கொள்ள வேண்டும். பிரபலமான பழைய கல்லூரியின் பெயரை நினைவூட்டுவது போல், புதிய கல்லூரி ஆரம்பித்திருப்பர்.
புதிய கல்லூரியில், உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் இருக்காது; தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் இருக்க மாட்டார்கள்; வேலை வாய்ப்பு முகாம்களும் நடக்காது. எனவே, மாணவர்கள் விழிப்புடன் செயல்பட்டு, கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கல்லூரிக்கும், நான்கு இலக்க எண்கள் தரப்பட்டுள்ளன. இந்த எண்களை வைத்து, கல்லூரியை அடையாளம் காணலாம். பெயரை வைத்து தேர்வு செய்தால், தரம் குறைந்த கல்லூரிகளில் சேர வேண்டிய நிலை ஏற்படும்.
நான் +2வில் 96.5 கட்ஆப் எடுததுளளேன் எனக்கு அரசு பொறியியல் தமிழ் பிரிவில் இடம் கிடைக்குமா
|
by J.jayasanthoshkumar,India 2012-08-05 19:21:30 19:21:30 IST |