பொறியியல் கவுன்சிலிங் - முந்துபவை எவை? பிந்துபவை எவை? | Kalvimalar - News

பொறியியல் கவுன்சிலிங் - முந்துபவை எவை? பிந்துபவை எவை?-03-08-2012

எழுத்தின் அளவு :

இந்த கல்வியாண்டில் புதிதாக துவங்கப்பட்ட பொறியியல் பாடப் பிரிவுகளான இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் அன்ட் மேனேஜ்மென்ட், மெடீரியல் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி மற்றும் கடந்தாண்டு துவங்கப்பட்ட மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அன்ட் ஆட்டோமேஷன் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் பேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில், இதுவரை ஒரு மாணவர்கூட சேரவில்லை என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம்!

பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி, 20 நாட்கள் ஆகிவிட்டப் பிறகும் கூட அந்த படிப்புகள் மாணவர்களின் கவனத்தை ஏன் ஈர்க்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து கல்வி ஆலோசகர் மூர்த்தி செல்வகுமரன் கூறுவதாவது: புதிய படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரியாததும், அந்தப் படிப்புகள் சுயநிதி கல்லூரிகளால் வழங்கப்படுவதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

பொதுக் கலந்தாய்வின் 19ம் நாள் நிலவரம் வரை, 2க்கும் குறைவான மாணவர்களே, மெடிகல் எலக்ட்ரானிக்ஸ், மெடீரியல் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங், பாலிமர் டெக்னாலஜி, ரோபோடிக்ஸ் அன்ட் ஆட்டோமேஷன் மற்றும் டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி போன்ற வேறுபட்ட துறைகளை தேர்வு செய்துள்ளனர்.

அனைத்து கவுன்சிலிங் ஒதுக்கீட்டு இடங்களும், இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங், பிரின்டிங் டெக்னாலஜி, ரப்பர் அன்ட் பிளாஸ்டிக் டெக்னாலஜி, லெதர் டெக்னாலஜி, கெமிக்கல் அன்ட் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங், அப்பேரல் டெக்னாலஜி, செராமிக் டெக்னாலஜி, அக்ரிகல்சர் அன்ட் இரிகேஷன் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவுகளில் நிரம்பியுள்ளன. பொதுவாக, அரசு பொறியியல் கல்லூரிகளால் வழங்கப்படும் பாடப்பிரிவுகளில் சேர்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.

சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவைப் பொறுத்தவரை, இதர முக்கியப் பிரிவுகளான மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் மற்றும் எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றோடு ஒட்டுமொத்தமாக ஒப்பிடுகையில், 24% மாணவர்களே சிவில் பிரிவில் இதுநாள் வரை சேர்ந்துள்ளனர்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், சிவில் பிரிவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகளவிலான உள்கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையிலும், இந்தாண்டு, மாணவர் சேர்க்கையில், இப்பிரிவில், கூடுதலாக 3000 இடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையிலும், மாணவர்களிடையே இப்பிரிவு மீதான ஆர்வம் அதிகரிக்காதது ஏன் என்று புரியவில்லை!

அதேசமயத்தில், ப்ரொடக்ஷன் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பயோடெக்னாலஜி போன்ற பாடப்பிரிவுகள், அதிகளவில் மாணவர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன. மேலும், மெக்கானிக்கல் பிரிவும் மாணவர்களை கவர்ந்திழுப்பதாக உள்ளது. ஏறக்குறைய 6000 இடங்கள் இப்பிரிவில் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இப்பிரிவில் கடந்த வருடம் 24531 என்ற அளவில் இருந்த மொத்த இடமானது, இந்த வருடம் 30940 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் இதேநாளில், இப்பிரிவில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, இந்த வருடம் 1000 அதிகரித்துள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவைப் பொறுத்தவரை, இந்த வருடம் 4000 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடப்பிரிவே, மாணவர்களை ஈர்ப்பதில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us