"பி.இ., கவுன்சிலிங் முடிவில், 44 ஆயிரத்து 139 இடங்கள் காலியாக உள்ளன. முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு, நாளை முதல் கவுன்சிலிங் துவங்குகிறது" என, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைப் பிரிவு செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு நடத்தப்பட்ட உடனடித் தேர்வின் முடிவுகள், கடந்த மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்டன. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.இ., துணை கவுன்சிலிங்கில் பங்கேற்க, கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை, சென்னை அண்ணா பல்கலையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
பி.இ., துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த, அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு, கடந்த 12ம் தேதி கவுன்சிலிங் நடந்தது. பிளஸ் 2 வில் தொழில் பிரிவு பயின்று, துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்
களுக்கு, சென்னை அண்ணா பல்கலையில் நேற்று கவுன்சிலிங் நடந்தது.
இதுகுறித்து, ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது: பி.இ., துணை கவுன்சிலிங்கில் பங்கேற்க, தொழில் பிரிவு மாணவர்கள், 190 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், தகுதியுடைய 187 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 76 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்று, தகுதியின் அடிப்படையில், அவர்களுக்கான கல்லூரிகளைத் தேர்வு செய்தனர்.
நேற்றுடன் பி.இ., படிப்பிற்கான கவுன்சிலிங் நிறைவடைகிறது. வரும் 20ம் தேதி முதல் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. இவ்வாறு, ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
பி.இ. கவுன்சிலிங்கில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மொத்தம் 1,47,564 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் அறிவியல், அறிவியல் துணை கவுன்சிலிங், தொழில், தொழில் துணை கவுன்சிலிங் ஆகியவற்றின் மூலம் 1,10,166 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதும் 44, 139 இடங்கள் காலியாக உள்ளன.