2 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்த ஏஐசிடிஇயின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மேவளூர் குப்பத்தில் உள்ள ஸ்ரீபத்மாவதி பொறியியல் கல்லூரி மற்றும் இருங்காட்டுக் கோட்டையில் உள்ள வி.கே.கே. பொறியியல் கல்லூரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதைக் காரணமாகக் கூறி அவற்றைன் அங்கீகாரத்தை ஏஐசிடிஇ ரத்து செய்தது.
கல்லூரி நிர்வாகம் சார்பில் இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில், இரண்டு கல்லூரிகளிலும் பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால், முதலீடு செய்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, ஏஐசிடிஇ-யின் விதிமுறைகள் அனைத்தையும் இரு கல்லூரியும் நிறைவு செய்துள்ளனவா என்று ஆராய குழுக்களை அனுப்ப வேண்டும்.
குழு அளிக்கும் அறிக்கை திருப்தியாக இருந்தால், இக்கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை மீண்டும் வழங்குவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு 3 வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.