சென்னை அண்ணா பல்கலையில் ஆகஸ்ட் 16ம் தேதி நடந்த தொழிற்பிரிவு மாணவர்களுக்கான இறுதிகட்ட பொறியியல் கலந்தாய்வில் 3562 பேர் சேர்க்கை பெற்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 147 இடங்களையும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 3415 இடங்களையும் தேர்வு செய்துள்ளனர்.
சேர்க்கை பெற்ற 3562 பேரில் 3399 பேர் மாணவர்கள், 163 பேர் மாணவிகளாவர். 767 பேர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர். ஆட்டோமொபைல் பிரிவில் இருந்த 30 இடங்களும் நிரம்பிவிட்டன.
தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதியும் நடைபெறுகிறது. இன்றைய தினம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதால், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1168 இடங்களை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்ய இயலும்.
இன்றைய தினமே தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வு முடிவடைகிறது.
ஆகஸ்ட் 18ம் தேதி சிறப்புத் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.