2011ல் எரிசக்தி துறைக்கு நல்ல வாய்ப்பு | Kalvimalar - News

2011ல் எரிசக்தி துறைக்கு நல்ல வாய்ப்பு -17-06-2011

எழுத்தின் அளவு :

2011ல் எரிசக்தி துறைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. உலகில், நியூக்ளியர், பயோமாஸ், சோலார், வின்ட் எனர்ஜி என பல துறை வளர்ச்சி முக்கியமானதாக உள்ளது, என திருப்பூரில் நேற்று நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.


அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்து பெற்றோர் முடிவு செய்யாதீர்; மாணவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ, அந்த படிப்பை தேர்வு செய்யுங்கள். இதை படியுங்கள் என பெற்றோர், மாணவர்களை கட்டாயப்படுத்தாதீர். அதேபோல் மாணவர்களும், தினமும் நடக்கும் நிகழ்வுகளை செய்தித்தாள் மூலம் எந்த துறையில் வேலைவாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து அத்துறை குறித்தான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.


எந்த துறையில் படித்தாலும், சிறப்பாக படித்தால் வெற்றி வாய்ப்பு உறுதி. என்ன படிக்கிறோம் என்பதை விட, எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பதும் முக்கியம். கட்டடம் மட்டுமே உள்ளது கல்லூரி அல்ல. நல்ல கட்டமைப்பு, நிர்வாகம், பாடத்திட்டம், சர்வதேச அளவிலான நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவது என அனைத்தையும் விசாரித்து, கல்லூரியை தேர்வு செய்யுங்கள்.


ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியை தேர்வு செய்வதை விட, சிறந்த கல்லூரி எது என்பதை தேர்வு செய்யுங்கள். தற்போது, பெரும்பாலும் எந்த துறையில் படித்த மாணவர்களும் ஐ.டி., துறைக்கு பணிக்கு செல்கின்றனர். அதேபோல், பாடப்பிரிவுகளிலும் பெரிய வித்தியாசங்கள் இல்லாத நிலையில், பல கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஐ.ஐ.டி., அண்ணா பல்கலை உள்ளிட்ட 30 சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைத்தால், எந்த துறையிலும் படிக்கலாம்.


இரண்டாம் தர, மூன்றாம் தர கல்லூரிகளில் படிக்கும்போது, ஆய்வு செய்து துறையை தேர்வு செய்யுங்கள். கடந்த ஆண்டுகளில் 1980 முதல் 1990 வரை, ஆட்டோ மொபைல் துறைக்கு அதிக வாய்ப்பு இருந்தது. 1991-2000 வரை, கம்ப்யூட்டர் துறைக்கு வாய்ப்பு இருந்தது. 2001-10 வரை, தொலை தொடர்பு துறை (கம்யூனிகேசன்) துறைக்கு வாய்ப்பு இருந்தது. 2011ல் எரிசக்தி துறைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. உலகில், நியூக்ளியர், பயோமாஸ், சோலார், வின்ட் எனர்ஜி என பல துறை வளர்ச்சி முக்கியமானதாக உள்ளது.


அடுத்து, சிவில் (கட்டுமானம்) துறைக்கு உலக அளவில் நல்ல தேவை உள்ளது. இன்றைய நிலையில், ஐ.டி., - எரிசக்தி - இன்சூரன்ஸ், வங்கி துறை நல்ல வளர்ச்சியடையும் என்றார்.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us