பயோடெக் மற்றும் பயோ இன்ஜினியரிங் | Kalvimalar - News

பயோடெக் மற்றும் பயோ இன்ஜினியரிங் -17-06-2011

எழுத்தின் அளவு :

வளமான வேலைவாய்ப்புகளை வழங்கும், பயோடெக் மற்றும் பயோ இன்ஜினியரிங் என்ற தலைப்பில் சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் தங்கவேல் பேசியதாவது :  பயோடெக்னாலஜி என்பது தொழில்நுட்பத்தை கொண்டு விவசாயம், மருந்தியல், ஆராய்ச்சி உள்பட பல்வேறு துறைகளில் மக்கள் பயன்பெறும் வகையில், பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதே ஆகும். படிக்கும் காலத்தில் மிகவும் அக்கறையோடு செயல்பட்டால், வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ்சின் அறக்கட்டளை சார்பில், இந்தியாவில் பல கோடி ரூபாய் மதிப்பில் பயோடெக்னாலஜி துறை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.


நாட்டில் நாளுக்கு நாள், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, புதிய வகையான நோய் தாக்குதல்கள் வர துவங்கியுள்ளன. பயோடெக்னாலஜித்துறை உதவியால் மட்டுமே, இத்தகைய நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க முடியும். 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய, மருந்துகளை தான் தற்போது பல நோய்களுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம். அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு, மக்களுக்கு உதவும் வகையில் மிகவும் குறைந்த விலையில் மருந்துகளை கண்டுபிடிக்க பயோடெக்னாலஜி துறை உதவும்.


பயோடெக்னாலஜி துறையில், இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் மாணவ, மாணவியருக்கு துவக்கத்திலேயே 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பயோ டெக்னாலஜி துறையில் சேர விரும்பும் மாணவ,மாணவியர் தாங்கள் சேரவுள்ள கல்லூரிகளில், இத்துறைக்கேற்ப வசதிகள் உள்ளனவா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நண்பர்கள், உறவினர்கள் சொல்வதை கேட்டு கல்லூரியில் சேரக் கூடாது. தாங்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு சென்று பார்க்க வேண்டும். நோய்களே இவ்வுலகில் இல்லை என்ற நிலை ஏற்படும் வரை இத்துறை அழியாது.
மாணவ, மாணவியர் முதலில் தங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை களைய வேண்டும். இனி வரும் ஆண்டுகளில் பயோடெக்னாலஜி துறையின் உதவி இல்லாமல், மருத்துவத்துறை செயல்பட முடியாது என்ற நிலை ஏற்படும். அந்த அளவுக்கு இத்துறை தனித்தன்மையும், முக்கியத்துவமும் கொண்டுள்ளது.


இந்தியாவில் அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் எதிர்காலத்தில் நிலைத்து நிற்க முடியாது.


கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கினால் மட்டும் வேலைவாய்ப்பை பெற முடியாது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை பெற தகவல் பரிமாற்றத் திறன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் அனைத்து துறைகளுமே போட்டி நிறைந்து காணப்படுகிறது. பிளஸ் 2 முடித்து எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் உயர்கல்வியில் சேரும் முன் நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். ஆர்வத்துடன் படித்தால் வெற்றி நிச்சயம்.
இவ்வாறு, பேராசிரியர் தங்கவேல் பேசினார்.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us