ஐ.டி. துறையை அசைக்க முடியாது | Kalvimalar - News

ஐ.டி. துறையை அசைக்க முடியாது-17-06-2011

எழுத்தின் அளவு :

"2011-2020ம் ஆண்டு வரை, ஐ.டி. துறையை அசைக்க முடியாது. ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன" என மதுரை வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர் ஏ. ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.


எஸ்.ஆர்.எம். மற்றும் தினமலர் இணைந்து வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான்று, அவர் பேசியதாவது: இந்தாண்டு மருத்துவம், பொறியியல் தொழிற்கல்விக்கான "கட் ஆப்" மதிப்பெண்களில், 0.5 மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. காரணம், தமிழகத்தில் உள்ள மிகச்சிறந்த 30 கல்லூரிகளில், ஒவ்வொரு கல்லூரியிலும் பல்வேறு பாடங்களின் கீழ் 300 இடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளன. 9000 இடங்கள் கூடுதலாக கிடைப்பதால், கட் ஆப் மதிப்பெண் குறையலாம். ஆனால் நுழைவுத் தேர்வு இல்லாததால், போட்டி அதிகமாக இருக்கும்.


1991 -2000 வரை கம்ப்யூட்டர் வளர்ச்சி, 2001-10 வரை ரோடு கட்டமைப்பு ஏற்பட்டது. 2011-2020 ம் ஆண்டு வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் (பவர்) துறைகளில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். முதுநிலை பொறியியல் படிப்பில் கம்ப்யூட்டர் மற்றும் ஆற்றல் சார்ந்த படிப்புகள் புதிதாக அறிமுகமாகியுள்ளன. இந்தியாவில் மிகச்சிறந்த ஐந்து ஐ.டி. நிறுவனங்கள் மூலம் சமீபத்தில் இரண்டு லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டனர்.


தற்போது பி.இ. ஏழாவது செமஸ்டரில் இருந்து வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு நடத்துவதால், இன்னமும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
 பி.இ., கம்ப்யூட்டர் அறிவியலுக்கும் (சி.எஸ்.), தகவல் தொழில்நுட்ப படிப்புக்கும் (ஐ.டி.) பெரிய வித்தியாசம் இல்லை. ஐ.டி. படிப்பில் நான்கு பாடங்கள் கம்ப்யூட்டர் படித்தால், கம்ப்யூட்டர் அறிவியலில் 40 பாடங்கள் படிக்க வேண்டும். எனவே வேலை கிடைப்பதும் எளிது.


கட் ஆப் 197க்கு மேல் இருந்தால் அண்ணா பல்கலை, தியாகராஜர் கல்லூரி உட்பட மிகச்சிறந்த ஐந்து கல்லூரிகளில் எந்த பாடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து பாடத்திற்கும் ஒரே விதமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 185 முதல் 195 மதிப்பெண் வரை எடுத்தவர்கள் கம்ப்யூட்டர் அறிவியல் அல்லது தகவல்தொழில்நுட்பத்தை தேர்வு செய்யலாம்.


இ.இ.இ. மற்றும் இ.சி.இ. படிக்க நினைத்தால், பி.இ. இரண்டாம் ஆண்டிலிருந்தே "கேட்" தேர்வுக்கு தயாராக வேண்டும். பி.இ. முதல் வகுப்புடன், "கேட்" தகுதி பெற்றால் இஸ்ரோ, பாபா அணுமின் நிலையங்களில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் உண்டு. "கேட்" தேர்வு இரண்டரை ஆண்டுகள் செல்லும். மெக்கானிக்கல், சிவில் படிப்பில் சேர்ந்தால் எம்.இ., படிக்க வேண்டும். "கேட்" தேர்வில் மெக்கட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் கிடையாது என்பதால், பி.இ.யில் இப்பாடங்களை தேர்வு செய்யும் போது யோசிக்க வேண்டும்.


ஓ.சி. பிரிவினர் 188க்கு மேலும், பி.சி. 185, எம்.பி.சி. 180 மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 160 மதிப்பெண்களுக்கு மேல் கட் ஆப் எடுத்திருந்தால், கண்டிப்பாக "கவுன்சிலிங்" மூலம் இடம் கிடைக்கும். எனவே அவசரப்பட்டு நிர்வாக ஒதுக்கீட்டில் சேர வேண்டியதில்லை. மருத்துவப் படிப்பில் 195.5 க்கு மேல் எடுத்தால் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். தற்போது "பார்மஸி டாக்டர்" என்ற ஆறாண்டு கால படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பி.எஸ்.ஜி., எஸ்.ஆர்.எம்., ராமச்சந்திரா, ஜெ.எஸ்.எஸ். மற்றும் ராமகிருஷ்ணாவில் இப்படிப்பு உள்ளது என்றார்.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us