தகவல் தொழில்நுட்பத்துறையின் தற்போதைய போக்கு என்ற தலைப்பில் டி.சி.எஸ்., நிறுவனத்தின் துணைத்தலைவர் ஹேமாகோபாலன் பேசியதாவது:
உங்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எந்தப்படிப்பைத் தேர்வு செய்கிறோம்; படித்து முடித்த பின், எந்த நிறுவனத்தில், என்னவாகப் போகிறோம் என்பதை தீர்மானியுங்கள். அதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஐ.டி என்றால், இண்டியன் டேலன்ட் என்றுதான் இப்போது அர்த்தம். எல்லாத்துறைகளிலும் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் ஒரு சார்புத்துறை, அறியவில் சார்ந்த படிப்பு முடித்தவர்கள் உள்ளே வரலாம். நடப்பாண்டில் 2.5 லட்சம் மென்பொருள் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.
உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வதுடன், நிறுவனம் என்ன எதிர்பார்க்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். துறைசார்ந்த அறிவில், தீட்சண்யத்துடன் இருக்க வேண்டும். வேலை கிடைத்தவுடன் படிப்பதை நிறுத்தி விடக்கூடாது; தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வளர்ச்சி இருக்காது.
நிறுவனத்துடன் எப்படி இணைந்து கொள்கிறீர்கள்; நெகிழ்வுத்தன்மை, குழுவாக சேர்ந்து பணியாற்றுதல், மாறுபட்ட கலாசார அறிவு போன்றவற்றை நிறுவனம் உங்களிடம் எதிர்பார்க்கும்.
தகவல் தொழில்நுட்பத்துறை ஒரு அட்சயபாத்திரம். ஆனால், தகுதிப்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே கேட்டதெல்லாம் கிடைக்கும். நாட்டின் ஜி.டி.பி.யில் மாற்றம் கொண்டு வரும் அளவுக்கு தகவல் தொழில்நுட்பத்துறைக்கு சக்தி உள்ளது. எந்தக் கல்லூரியில் படிக்கிறீர்கள் என்பதும் முக்கியம். போதிய உள்கட்டமைப்பு வசதி உள்ள கல்லூரியைத் தேர்வு செய்யுங்கள் என்று ஹேமாகோபாலன் பேசினார்.