வல்லரசாக்குவோம் இந்தியாவை... வாருங்கள் ! - ( பகுதி - 2 )

எழுத்தின் அளவு :

நாம் வாழும் இந்த சமூகத்தை அறிவு சார்ந்த சமுதாயமாக மாற்ற அனைவரும் எப்படி இணைந்து செயல்படுவது என்பதைப்பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நம்மிடம் உள்ள அறிவு வளத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம்தான் நம் தேசத்தின் வளத்தை பெருக்கிக் கொள்ள முடியும். இதன் வழியாக வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலாம், சிறப்பான கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற சமுதாயத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

விவசாயம், உற்பத்தி மற்றும் சேவை ஆகிய மூன்று துறைகளில் உள்ள நம் அறிவைப் பொறுத்தே ஒரு நாடு அறிவுசார்ந்த சமுதாயமாக மாறியிருக்கிறதா... இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயம், தொழிலை அடிப்படையாக கொண்ட சமுதாயமாக வளர்ந்து, பின்னர் தகவலை அடிப்படையாகக் கொண்ட சமுதாயமாக உயர்ந்துள்ளன. தகவலை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் 21ம் நூற்றாண்டில் அறிவை அடிப்படையாகக் கொண்ட நாடாக மாறிவருகின்றன.

இந்த வளர்ச்சியில் உள்ள வித்தியாசங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். விவசாய சமுதாயத்தில் மனித உழைப்பும், தொழில் சமுதாயத்தில் மூலதனம், பணியாளர் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகமும் முக்கியத்துவம் பெற்றன.

தகவலை அடிப்படையாக கொண்ட சமுதாயத்தில் நாட்டுக்குள் தகவல் தொடர்பு இணைப்பு மற்றும் பிறநாடுகளுடனான இணைப்பு ஆகியன இச்சேவைத்
துறையில் முக்கியத்துவம் பெற்றன. தகவல் அடிப்படையான சமுதாயத்தில் இந்தியா முக்கியத்துவம் பெற்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பான துறைகளில் சிறந்து விளங்கியதை நாம் அறிவோம். வளர்ந்து வரும் நாடுகள் அனைத்தும் ஏற்கனவே வளர்ந்துவிட்ட நாடுகளை பின் பற்றித்தான் வளர வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருக் கின்றன. அறிவை அடிப்படையாக கொண்ட சமுதாயமாக மாற வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் நம் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

அறிவுசார் சமுதாயம் என்பது என்ன என்பதைப் பற்றி நான் விரிவாக படித்தேன். அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி முடித் திருக்கும் நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதே அறிவுசார்ந்த சமுதாயம். இச்சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால், வெறுமனே பாடப்புத்தகத்தை சொல்லித் தருவதாக கல்வித் திட்டம் அமையாமல், கற்பனைத் திறனுடன் கூடிய, கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையிலும் சுயமாக பயின்று கொள்ளும் வகையிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

ஓரளவு திறன் கொண்ட, திறமையுள்ள பணியாளர்கள் என்று பிரிக்காமல் அறிவு சார்ந்த வகையில் அவர்கள் சுயசக்தி கொண்டவர்களாக மற்றும் புதிய தொழில் நுட்பங்களை ஏற்றுக் கொள்பவர்களாக உருவாக்க வேண்டும். சாப்ட்வேர்களால் வேலைகள் நிறைவேற்றப்படக்கூடியதாக இருக்க வேண்டும். வெறுமனே உத்தரவிடுதல் அடிப்படையில் நிறுவனங்களின் நிர்வாகம் அமையாமல், பிரதிநிதிகள் வழியிலான அதிகாரப் பகிர்வு முறையை கடைபிடிக்க வேண்டும். பொருளாதாரம் என்பது அறிவின் அடிப்படையில் அமைய வேண்டும்.

தொடக்கக் கல்வி முதலே சிறப்புத் திறன் பயிற்றுவிக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகளுக்கு குறிப்பிட்ட பணிகளை செய்து முடிக்கும் திறன் கொண்டவர்களின் தேவையைவிட அதற்கு தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருக்கிறது. நம்முடைய கல்வித் திட்டத்தின் வாயிலாக படித்து முடித்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் தகுதி வாய்ந்தவர் தேவையின் இடைவெளி அதிகமாகவே இருக்கிறது.

நாஸ்காம், மக்கின்ஸி உள்ளிட்ட நிறுவனங்களின் அறிக்கையின் படி, தகவல் தொடர்பு நிறுவனங்கள், அதை சார்ந்த நிறுவனங்கள், பி.பி.ஓ., நிறுவனங்
களுக்கு 90 லட்சம் நேரடி வேலைகள் 2010ம் ஆண்டு உருவாக இருக்கின்றன. கட்டுமானம், சில்லறை விற்பனை மற்றும் போக்குவரத்து ஆகிய துறை
களில் 60 லட்சம் வேலைகள் உருவாக இருக்கின்றன. 5 லட்சம் நர்ஸ்களின் தேவையும் உள்ளது. தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் நர்ஸ்களே உருவாகி வருகின்றனர். 2012ம் ஆண்டில் நர்ஸ்களின் தேவை 10 லட்சமாக இருக்கப் போகிறது.

இன்னும் 5 ஆண்டுகளுக்குள், பல்வேறு தொழில்களில் திறன் கொண்ட, 20 லட்சம் சிறுதொழில் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். திறமையான ஊழியர்கள் தேவைக்கும் தற்போது அதற்கு தயாராக உள்ளோர் எண்ணிக் கைக்கும் உள்ள இடைவெளியை குறைக்க மேற்கூறிய மூன்று துறைகளான விவசாயம், தொழில் மற்றும் சேவைத்துறைகளுக்கும் கல்வித் திட்டத்துக்கும் ஒரு இணைப்பு பாலம் தேவை. கல்விநிறுவனங்களிலிருந்து வெளியேறும் மாணவர்கள் இந்த உலகத்தில் உண்மை சூழ்நிலையை சமாளிக்க குறிப்பிட்ட தகுதிகள் தேவைப் படுகின்றன. தொடக்கக் கல்வியிலிருந்தே இந்த தகுதிகள் புகட்டப்பட வேண்டும்.

மனதுக்குள் கேள்விகேட்கும் ஆய்வுத்தன்மை, உயர் தொழில் நுட்பத்தை கையாளும் திறன், தொழில்முனையும் தலைமை மற்றும் ஊக்குவிக்கும் தலைமைப் பண்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவே நாம் நம் தேசத்தை சிறந்த முறையில் கட்டமைக்க முடியும். வல்லரசாக்க முடியும்.

=======


திருக்குறளுக்கு அப்துல்கலாம் தெளிவுரை :

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு

நாம் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இருக்குமிடத்திற்கு தகுந்தாற் போல ஏதேதோ பேசிக்கொண்டே இருக்கிறோம். அத்தகைய ஒவ்வொரு பேச்சிலும் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை எண்ணிப்பார்த்தால் அது பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும். பேசும் சொற்கள் கூர்மையான ஊசியைப் போல குத்தும். கத்தியைப் போல அறுக்கும். நெருப்பைப் போல சுடும் தன்மையானவை.

வார்த்தைகளை ஒருமுறை உச்சரித்தபின் திரும்பப் பெற முடியாது. பல உண்மைகளைச் சொல்லும் போது கூட, சில தவறான வார்த்தைகளால் வாழ்க்கை துன்பமயமாகிவிடும். ஆகவே நல்வாழ்வு வாழ நாக்கை எச்சரிக்கையாக கையாள வேண்டும்.

======

லட்சிய சிகரம் - கலாம் கவிதை :

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது லட்சிய சிகரம், என் இறைவா?
நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்
எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?
நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டிருக்கிறேன்
எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?
இறைவா, நூறு கோடி மக்கள்
லட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும்,
இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்புரிவாயாக...

=======

- மீண்டும் சந்திப்போம்...


உங்கள் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!


= டாக்டர் அப்துல் கலாம்
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us