லட்சியம் உதயமான நாள்... ( பகுதி - 1 )

எழுத்தின் அளவு :

மாணவர் சமுதாயத்துக்கு வழிகாட்டும் டாக்டர் அப்துல் கலாமின் சிறப்புக் கட்டுரை இதோ...

கடந்த 1941ம் ஆண்டில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ராமேஸ்வரம் பஞ்சாயத்துப் போர்டு துவக்கப்பள்ளி அது. அந்த வகுப்பில் நடந்த நிகழ்ச்சிகள், கற்றுக் கொண்ட பாடங்கள் அவற்றை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் ஆகியன பிற்காலத்தில் என் வாழ்க்கையில் ஓர் அடிக்கல்லாக, ஆதாரமாக, மனதைவிட்டு நீங்காத ஒரு படிப்பினையாகவே பதிந்துவிட்டிருக்கிறது.

ஒரு மாணவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, பொதுவாக
அவனுக்கு பத்து வயது இருக்கும். கிராமச் சூழ்நிலை. ராமேஸ்வரம் ஒரு தீவு. அதோடு ஒரு புனித யாத்திரை தலம். அங்கேயுள்ள ராமநாத சுவாமி கோயில் மிகவும் புகழ்பெற்றது. அப்போது, இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.

நம் நாடு ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு வந்த சமயம். அந்த போர்க்காலத்தில் எங்குபார்த்தாலும் எதிலும் ஒரு பற்றாக்குறை. எல்லாவற்றுக்கும் ஒரு ரேஷன். அரிசி கிடைக்காது. எல்லோரும் கோதுமையைத்தான் சமைத்து சாப்பிட வேண்டும். அதுதான் உணவு. இந்த சமயத்திலும் பள்ளி சென்றால்... அடடா...! அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தமது கஷ்டங்களை சங்கடங்களை எல்லாம் மறந்துவிட்டு உணர்ச்சிகரமாக பாடம் நடத்தும் அழகு இருக்கிறதே... அதை விவரிக்க முடியாது. ஆசிரியர்கள் பாடங்களை அவ்வளவு அருமையாக நடத்துவார்கள்.

என்னுடைய ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் அவ்வளவு அழகாக பாடம் நடத்துவார். கசடற கற்பித்தல், எடுத்துக்காட்டாக வாழ்தல், பிறருடைய வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் ஆகிய மூன்று குறிக்கோள்களுடன்தான் சிவசுப்பிரமணிய அய்யர் பாடத்தை சொல்லிக் கொடுப்பார். நானும் ஆசிரியராக இருந்திருக்கிறேன். என்வாழ்க்கையிலும் இவை ஐக்கியமாகிவிட்டன.

பாடம் சொல்லிக் கொடுப்பதை ஒரு கடமையாக நினைக்காமல், தன் வாழ்க்கையின் ஒரு லட்சியமாகவே நினைப்பார். மாணவர்கள் கேள்விகள் கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொண்ட பின் மாணவர்கள் நன்றாக புரிந்து கொண்டார்களா என்பதை உணர்ந்து, கற்றுக் கொண்டுவிட்டார்கள் என்ற நிலைமையில்தான் அவர் அடுத்த பாடத்திற்கு போவார்.

நான் சிறுவனாக இருந்த அந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். அந்த ஆசிரியரின் பழக்க வழக்கங்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எங்களுக்கு ஓர் ஆசிரியராக மட்டுமல்லாமல் ஒரு வாழ்க்கை வழிகாட்டியாகவே வாழ்ந்து காட்டினார். நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுப்பதோடு அவற்றை நடைமுறையில் வாழ்ந்தும் காட்டினார்.

ஒவ்வொருவாரமும் திங்கள்கிழமை காலை எட்டு முதல் எட்டரை மணி வரை உலகின் சான்றோர்கள் என்ற பகுதியில் மகாத்மா காந்தி, ஆதிசங்கரர், இயேசு கிறிஸ்து, ஐன்ஸ்டீன், சர்.சி.வி.ராமன் ஆகியோரைப் பற்றியும் திருக்குரான், பகவத் கீதை பற்றியும் சொல்லிக் கொடுப்பார்.

ஒரு நாள் பறவைகள் எப்படி பறக்கின்றன என்று பிளாக்போர்டில் வரைந்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, புரிந்ததா என்று எங்களிடம் கேட்டார். வகுப்பில் ஒரே நிசப்தம். நான் மெதுவாக எழுந்து எனக்கு புரியவில்லை என்றேன். பிறகு உனக்கு புரிந்ததா உனக்கு புரிந்ததா என்று இங்குமங்குமாக கைகாட்டி மற்ற மாணவர்களை கேட்டார். 40 பேர் இருந்த வகுப்பில் பத்து பதினைந்து பேர் புரியவில்லை என்றார்கள்.


அவர் ஒரு நல்ல ஆசிரியர். மாணவர்கள் புரியவில்லை என்றால் கோபப்படமாட்டார். சரி மாலையில் உங்களையெல்லாம் கடற்கரைக்கு அழைத்துப் போய் நடைமுறை வாழ்க்கை மூலம் பறவைகள் எப்படி பறக்கின்றன என்று சொல்லிக் கொடுப்பேன் என்றார். அன்று மாலை நாங்கள் எல்லோரும் கடற்கரைக்குப் போனோம்.

அலை ஓங்காரம் செய்கின்ற கடல். பளீரென்ற வெள்ளை மணல்வெளி. கூட்டம் கூட்டமாக அங்கும் இங்கும் பறவைகள் வந்து உட்கார்வதும் குப்பென்று உந்தி பறப்பதுமாக இருந்தன. எங்கள் ஆசிரியர் பறவைகளின் வால்ப்புறத்தை பார்க்க சொன்னார். வாலும் இறக்கையையும் எப்படி ஒருங்கிணைத்து தாம் விரும்பியவாறு, பறக்க வேண்டிய திசையில் பறக்கின்றன என்று கவனிக்க சொன்னார். அந்த பறவைகளின் மேலெழும் சக்தி, மிதவை சக்தி, புவியீர்ப்பு சக்தியை சமாளிக்க முற்படுவது இவற்றையெல்லாம் விளக்கினார்.

இந்த பறவைகளின் இன்ஜின் எங்கே என்று எங்களைக் கேட்டார். அதன் உயிர்தான் அதன் இன்ஜின் என்று விவரித்தார். இந்த பறவை பாடம் கற்கும்போதே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டேன். என்னவானாலும்
பறவைபோல் பறக்க வைக்கிற விமானவியல் படிப்பு சம்பந்தமாக வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தணியாத ஆவல் கொண்டேன்.

நான் என் ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யரை கேட்டேன். ‘சார், ப்ளீஸ் சொல்லுங்க சார். விமானவியல் சம்பந்தமாக எப்படிப் படிப்பது’ என்று ஆர்வமாக கேட்டேன். அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி., இன்டர்மீடியட் படித்து எப்படி விமானவியல் படிக்கலாம் என்று எனக்கு அவர் வழிகாட்டினார். என் வாழ்க்கையின் திசை காட்டியை, வழிகாட்டியை, இலக்கை நான் அன்று கண்டுகொண்டேன். நான் ராக்கெட் இன்ஜினியராக மாறி இன்று உங்களிடம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறேன்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது, அன்று சிவசுப்பிரமணிய அய்யர் பறவைகள் பாடம் நடத்திய அன்றுதான் என் வாழ்க்கையின் லட்சியம் உதயமான நாள் என்று எனக்கு தோன்றுகிறது.

மீண்டும் சந்திப்போம்... உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !
-டாக்டர் அப்துல் கலாம்


------------------


வாரம்தோறும் டாக்டர் அப்துல் கலாம் தொடர்ந்து எழுதுகிறார்.அடுத்த வாரம்...

வல்லரசாக்குவோம் இந்தியாவை

வாருங்கள்!


(உலகில் வாழும் அறிவு ஜீவிகளில் ஒருவர் அப்துல் கலாம். தேசபக்தர், ஆசிரியர், கவிஞர், இசை ஆர்வலர், விஞ்ஞானி, தலைவர் என்று பன்முகம் கொண்டவர். இந்திய ஜனாதிபதிகளிலேயே வகித்த பதவிக்கு மிகப்பெரிய கவுரவத்தையும் பெருமையையும் சேர்த்தவர். மக்கள் ஜனாதிபதி என்று மகுடம் சூட்டப்பட்டவர். 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் எனும் அவரது கனவை இளைஞர்களின் மாணவர்களின் கனவாக மாற வேண்டும் என்பதில் தற்போது துடிப்பாக உள்ளவர். குழந்தைகளிடம் அன்று அன்பு காட்டிய நேரு மாமாவைப் போல்... இன்று மாணவர்களின் முன்மாதிரியாக அன்புக்குரியவராக திகழ்கிறார். அவருடைய கட்டுரை மாணவர் சமுதாயத்துக்கு வழிகாட்டியாக அமையும்.)
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us