சமஸ்கிருதம், வேதத்தில் புதைந்துள்ள அறிவுப் பொக்கிஷம்

எழுத்தின் அளவு :

நமது பாரம்பரிய சொத்தான சமஸ்கிருதம் வழக்கிலிருந்து மறைந்துவிட்டாலும் அதில் மறையாமல் புதைந்துள்ள அறிவியல் உண்மைகளை தேடி கண்டறிய வேண்டும் என்கிறார் டாக்டர் அப்துல் கலாம்.சமஸ்கிருதம் பழமையான மொழி மட்டுமல்ல... இம்மொழியில் மட்டுமே உள்ள இலக்கியங்களை ஆவணப்படுத்தி முறைப்படுத்தினால் நமக்கு அரிய தகவல்கள் கிடைக்கும் என்று கூறும் கலாமின் கருத்துக்கள் இங்கே...தொடக்கப் பள்ளியிலும் செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் இரண்டு உயர்ந்த ஆசிரியர்களை நான் கண்டிருக்கிறேன். எனது தொடக்கப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் ஒரு சமஸ்கிருத அறிஞர். ஒவ்வொரு நாளும் அவர் மூன்று முறை சந்தியாவந்தனம் செய்வார். பாகவதம் படிப்பார். எனக்கு காம்ப்ளக்ஸ் எண்களின் கோட்பாடுகளை கற்றுக் கொடுத்த தோதாத்ரி அய்யங்காரும் ஒரு சமஸ்கிருத அறிஞரே.இந்த இரு ஆசிரியர்களுக்கும் அடிப்படை கணிதமும் அறிவியலும்தான். ஆனால் அவர்களது வாழ்க்கையை செதுக்கியது சமஸ்கிருத புலமை. இயற்கை, விவசாயம் உட்பட பல விஷயங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சி செய்துவரும் கர்நாடகத்தில் உள்ள மேல்கோடே சமஸ்கிருத அகடமியை சேர்ந்த டாக்டர் லட்சுமி தாத்தாச்சாரையும் சமீபத்தில் சந்தித்து சமஸ்கிருதம் பற்றி அறிந்திருக்கிறேன்.


நான் சமஸ்கிருத நிபுணர் அல்ல. ஆனால் என் நண்பர்களில் பலர் சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர்கள். நமது பண்டைய சமஸ்கிருத நூல்களில் உள்ள அறிவுச் செல்வங்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதில் பல நாடுகள் முனைந்திருக்கின்றன. வேதங்களைப் பற்றிய ஆராய்ச்சி அவசியம்.குறிப்பாக மருத்துவம், விமான அறிவியல், அடிப்படை பொருட்கள் பற்றிய அறிவியல் மற்றும் தொடர்புள்ள துறைகள் பற்றி அதர்வண வேதத்தில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. சமஸ்கிருதம் சரளமாக பயன்படுத்தப்படும் இன்னொரு துறை குறியீட்டு இயல் (கிரிப்டாலஜி). இப்படி பல செல்வங்கள் அடங்கியது சமஸ்கிருதம்.


நாட்டின் பல பகுதிகளில் சிதறிக்கிடக்கும் சமஸ்கிருத இலக்கியங்களை கண்டறிந்து, அவற்றை ஆவணப்படுத்தி, பாதுகாக்க வேண்டும். இந்த நூல்களை ஒலி, ஒளி ஊடகங்களில் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு டிஜிட்டல் நூலகம் போன்று உருவாக்கினால், பல தலைமுறைகளுக்கும் நீண்ட காலங்களுக்கும் இந்த செல்வத்தை பாதுகாக்கலாம்.


வால்மீகி, வியாசர், காளிதாசர், பாணினி போன்ற பேரறிஞர்கள், கவிஞர்கள் இதிகாசங்களை உருவாக்கியவர்கள். இவர்களது வாழ்க்கை வரலாறுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும். இளைய அறிஞர்களுக்காக இந்திய அரசு வழங்கும் மகரிஷி பாதராயண் சம்மான் மற்றும் சமஸ்கிருதத்தில் மதிப்பு சான்றிதழ் பெற்ற சில அறிஞர்களை வித்யாபீடம் அழைத்து அவர்கள் மாணவர்களோடு தங்கி கலந்துரையாடுமாறு செய்ய வேண்டும். இது மாணவர்கள் சமஸ்கிருதத்திலும் வேதத்திலும் புலமையை வளர்த்துக் கொள்ள துணை புரியும்.


வேதங்கள் எவ்வாறு நம் மனம், நினைவுகள், புத்தி இவற்றுக்கு ஊட்டமளிக்கிறது, என்பதையும் விளக்கும் சென்னை ஓஜஸ் அறக்கட்டளை நிறுவனர் தத்வமஸி இசைத்த மந்திரங்கள்:


மந்திரம் 1: ஓ சூரியதேவனே! எனது நேர்முகமாய் உணரும் திறனை வளர்ப்பாய்.
வேதக் கல்வியை சந்ததியினருக்காக நிலைநிறுத்த துணை புரிவாய்!


மந்திரம் 2: நிலை நிறுத்தும் சக்தியையும் (மேதா தேவி) உள்வாங்கும் சக்தியையும் (மனீஷா தேவி) எனது மனதினுள் வீற்றிருக்குமாறு அழைக்கிறேன்.
நிகழ்பவை பற்றிய ஞானத்தை முழுமையாக உணரவும், கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் ஞானத்தை விரித்துரைக்கவும் அவர்கள் அருள் புரியட்டும்.


மேதா மற்றும் மனீஷா ஆகிய சக்திகளிடம் வேண்டுதல் இது. அவை வேண்டுபவரிடம் ஒன்று கூடி வந்து, நிகழ்காலம் பற்றிய ஞானத்தை கடந்த காலம் எதிர்காலம் இவற்றோடு தொடர்புபடுத்தி அறிய துணைபுரிய வேண்டும்.


நினைவில் நிறுத்திக் கொள்ளும் சக்தி நடந்ததையும் நடப்பதையும் புரிந்து கொள்ள செய்கிறது. உள்வாங்கும் சக்தி இந்த அனுபவங்களிலிருந்து எதிர்காலத்துக்கான பாடங்களை கற்கத் தூண்டுகிறது. சமஸ்கிருதத்தை பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் நாம் வெற்றி அடைய வேண்டும்.


உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...


- டாக்டர் அப்துல் கலாம்

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us