அறிவு சுடர் ஏற்றிய அறிவியல் திலகங்கள்!

எழுத்தின் அளவு :

நடமாடும் பல்கலைக்கழகமாக திகழும் டாக்டர் அப்துல் கலாம், மாணவர்களிடம் அறிவுப் பசியை தூண்டி வருகிறார்.


அறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்ட அவர் பேச்சுக்கள் கேட்போரின் மனதில் ஆழமாக பதிந்து, வீட்டையும் தாய் நாட்டையும் முன்னேற்றும் உத்வேகத்தைப் பெறுகின்றனர். அவர் சிந்தனையில் இருந்து வெளிப்பட்ட கருத்துக்களை இதோ அவரே வழங்குகிறார்...


நான் விஞ்ஞானியாக பணியாற்றியவன். பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்திலும் நான் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது ஏராளமான மாணவர்களை நான் சந்தித்து பேசியிருக்கிறேன்.


ஒரு வாரத்தில் பத்து வகுப்புகள் எடுத்தேன். பின்னர் ஒரு நாள் என்னை ஜனாதிபதியாக நியமனம் செய்தார்கள். ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்கும் விழாவை ஒருங்கிணைக்க ஓர் அமைச்சரிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.


நான் சென்னையில் இருந்தபோது, அந்த அமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘கலாம்ஜி, உங்கள் விருப்பம் என்ன... எந்த நல்ல நேரத்தில் பதவியேற்க உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் ஜோதிடர் யாரையாவது தொடர்பு கொண்டீர்களா? என்று கேட்டார்.


இதற்கு பதில் அளித்த நான், ‘பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் ஆகிறது. அவ்வாறு சூரியனை சுற்றி வர அதற்கு 365 நாட்கள் ஆகின்றன. அது போல் சூரியன், பால்வீதியில் சுற்றி வருகிறது. ஆகவே நேரம் என்பது இந்த நடைமுறையை குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அவ்வாறு இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரம் எல்லாமே நல்ல நேரம்தான்.


நேரம் என்பது வானியல் நிகழ்ச்சியே தவிர ஜோதிட நிகழ்ச்சி அல்ல’ என்றேன். அந்த அமைச்சருக்கு மிக்க மகிழ்ச்சி. அதையடுத்து நான் 2002 ஜூலை 25ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டேன்.


பூமி சூரியனை சுற்றுவது போல், சூரியன் பால்வீதியை சுற்றி வருகிறது. இதற்கு 25 கோடி ஆண்டுகள் ஆகும். இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகிறது. முதலில் நியூட்டன் புவியீர்ப்பு சக்தி மற்றும் இயக்க விதி தத்துவங்களை சொன்னார்.


பிறகு வந்த மாக்ஸ்வெல் மின்காந்த தத்துவத்தை கொடுத்தார். அதன்பின்னர், சுப்ரமணியம் சந்திரசேகர், ‘சந்திரசேகர் லிமிட்’ எனும் வரையறையை அளித்தார். அவர்தான் நட்சத்திரங்களின் வாழ்நாள் எவ்வளவு என்பதை கண்டுபிடித்தார். அவர் கருத்துப்படி நமது சூரியன் ஆயிரம் கோடி ஆண்டுகள் வரை ஒளிரும்.


அவருக்கு சமகாலத்தவரான ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவத்தை அளித்தார். அதன்பிறகு ஸ்டீபன் ஹாக்கிங், காலம் ஒரு சுருக்கமான சரித்திரம் என்ற தத்துவ புத்தகத்தின் வழியாக இந்த கருத்துக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து பால்வீதிகள் இயங்குவதை விளக்கிச் சொல்ல முயன்றார்.


கடைசியாக தன்னுடைய தத்துவத்தில் இறைவனுக்கு ஓர் உருவம் கொடுத்து, ‘யூனிபைட் தியரி’ உருவாக்க முயன்றார். இது ஒரு பெரிய துறை. இதை அறிவதன் மூலம் உலகம் எப்படி உருவானது. நாம் ஏன் பிறந்தோம். எப்படி பிறந்தோம். எப்படி வாழ்ந்தோம் என்பதை அறிய வாய்ப்புள்ளது.


எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று என்னிடம் ஒரு மாணவி கேட்டாள். மாணவர் சந்திப்பு ஏற்பாடான அந்த இடம் ஒரு ‘ஓபன் ஏர் தியேட்டர்’. நான் மேலே வானத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. நான் சொன்னேன். பூமி சூரியனை சுற்றுகிறது. சூரியன் பால்வீதியை சுற்றுகிறது. நாமிருக்கும் இந்த பால்வீதி பிரபஞ்சத்தில் மிகச்சிறிய பால்வீதி.


நீங்கள் இரவில் இதைப் பார்க்கலாம். நமது பால்வீதியில் சூரியனும் ஒரு சிறிய நட்சத்திரம். இதைவிட பெரிய ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. நம்முடைய நட்சத்திரத்தில் ஏராளமான கோள்கள் உள்ளன. அதில் செவ்வாயையும், வியாழனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் வாழும் பூமி மிகச்சிறியது. மேலே தெரியும் நட்சத்திரங்களைப் பார். இவற்றையெல்லாம் ஒருவர்தான் உருவாக்க முடியும். எனவே நான் ஆண்டவனை நம்புகிறேன் என்றேன்.


சிறிய இந்த கோளிலே 600 கோடிக்கும் மேல் மக்கள் உள்ளனர். நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமானதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச்சுவடியை காண வேண்டும் என்று நண்பர்களிடம் கேட்டேன். பலர் அது சாத்தியமே இல்லை என்று கூறிவிட்டார்கள். காலவெள்ளத்தில் கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்றார்கள். அந்த ஓலை இந்தியாவில் எங்காவது கிடைக்கும் என்று நம்புகிறேன். அதை கண்டுபிடிக்க வேண்டும்.


திருக்குறளில் வள்ளுவர் தான் எந்த குலம், எந்த நாடு, எந்த மதம் என்பதை அவர் குறிப்பிடவேயில்லை. மனிதனைப் பிளவு படுத்தும் மதத்தையோ அல்லது நாட்டையோ அல்லது இனத்தையோ குறித்துப் பாடவில்லை. எல்லாக் குறளும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமாறு பாடினார்.


எந்த சூழ்நிலையில் அவர் வாழ்ந்தார். எந்த சூழ்நிலையில் குறளை எழுதினார். வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியம். இந்த ஆராய்ச்சியால் நம் நாட்டில்... ஏன், இந்த உலகில் கூட ஒற்றுமையைக் கொண்டு வர வேண்டும்.


- மீண்டும் சந்திப்போம்...


உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.


- டாக்டர் அப்துல் கலாம் -

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us