வறுமையும், வன்முறையும் நீங்க வல்லரசாக வேண்டும்...

எழுத்தின் அளவு :

ஆயிரம் புத்தகங்களை ஒன்றாக கோர்த்தது போல் தகவல்களை அள்ளி வழங்கும் டாக்டர் அப்துல்கலாம் மாணவர்களின் எழுச்சிக்காக ஏராளமான தகவல்களை வழங்கி வருகிறார்.


அவரது கருத்துக்களை படிக்கும் மாணவர்கள் பலநூறு புத்தகங்களிலிருந்து தகவல்களை தேடிப் பெற்றதற்கு இணையாக அறிவு பெறுகின்றனர். மாணவர்களுக்காக அவருடைய கருத்துக்கள்.


பாரதியார் பிறந்த இந்த நல்ல நாட்டிலே, நம்மால் முடியும் என்ற முழு நம்பிக்கையுடன் நமது இந்தியா வளமான நாடாகும் என்ற ஆக்கப்பூர்வமான எண்ணங்களோடு நாம் கடுமையாக உழைத்து வாழ்க்கையில் வெற்றி காண வேண்டும்.


நீங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைந்தால், இந்த நாடும் வெற்றி அடையும். அதற்கு நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதை பாரதியார் தனது பாடலில்
சொல்லியிருக்கிறார்...


இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
வானுõலார் இயம்புகின்றார்
இடையின்றி தொழில்புரிதல் உலகினிடை
பொருட்கலெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றி கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொணாதோ?


இந்த கவிதையை அவரது பாஞ்சாலி சபதத்தில் சரஸ்வதி வந்தனமாக பாடியிருக்கிறார். இது எவ்வளவு அறிவியல் கருத்து பொதிந்த பாடல். அணுக்களில் பரமாணுக்கள் ஒன்றையொன்று சுற்றி வருகிறது. நம் பூமி சூரியனை சுற்றி வருகிறது. இதுபோல் சூரியன், பூமி எல்லாமே சுழற்சியின் இயக்கத்தில் அண்டசராசரத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றன. இந்நிகழ்ச்சி ஓயாது, ஒழியாது நடந்து கொண்டே இருக்கிறது.


இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பது போல, கலைமகளே எனக்கும் உழைத்து உழைத்து வாழ அருள்புரிவாயாக என்று பாரதி பாடியிருக்கிறார்.


என்னை மாணவர்கள் எல்லோரும் இந்தியா  வளர்ந்த நாடாக எப்போழுது மலரும் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். நாமெல்லாம் உழைத்து நம் நாட்டை ஒரு வளமான நாடாக்குவோம். இதற்கென அயராது, தத்தமது பணியிலேயே சிறப்பிடம் பெற்றிட உழைப்போம்.


நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி செயல்திட்ட நடவடிக்கைகளின் போது எம் நெஞ்சங்களில் கனலேற்றிய அதே சுடர்ப்பொறி இன்று நம் இந்திய உள்ளங்களில் ஒளியேற்றவும் செயலாற்ற தூண்டவும் உதவும் என்றும் நம்புகிறோம். நம் நாட்டின் முன் வைத்த தொலைநோக்கும் கண்முன் தோன்றும் பணி இலக்குகளும் எங்களை இன்றைக்கும் கூட இளைஞர்களாக்கி விடுகின்றன.


கனல்விடும் இளைய நெஞ்சங்களே சக்தி வாய்ந்த ஆற்றல்வளம் என்று உணர்கின்றோம். இந்த வளம் பூமியில், ஆகாயத்தில், கடலுக்கு அடியில் உள்ள எந்த வளத்தைவிடவும், அதிக பலம் பொருந்தியது. நாம் அனைவரும் ஒன்று திரண்டு, வளர்கின்ற இந்தியாவை வளர்ந்த இந்தியாவாக உருமாற்ற வேண்டும்.


ராமேஸ்வரம் தீவிலிருந்து, ராஷ்ட்ரபதி பவன் வரையிலான, சாகசமும் கண்டுபிடிப்பும் நிறைந்த பயணத்தில் நான் மிகவும் நீண்ட தொலைவை கடந்து வந்திருக்கிறேன். இயற்பியலிலிருந்து விமான வடிவமைப்பு, ஏவுகலன்கள், வழிகாட்டிய திசையில் செலுத்தப்படுகின்ற ஏவுகலன்கள், அணு ஆயுதங்கள் என்று பயணம் தொடர்ந்தது.


கிராமங்களில் உள்ள மக்கள் தவிர்க்கப்படக்கூடிய இன்னல்களால் வாடிக் கொண்டிருக்கின்றனர். நமது முன்னேற்ற செழிப்புக்கு இடையே நகர்ப்புற குடிசைப்பகுதிகளை துயரங்களும் துன்பங்களும் பீடித்துள்ளன. வன்முறைகள் நிகழ்கின்றன. இவையெல்லாம் மாறி, அமைதியும் நல்லிணக்கமும் தவழ்கிற தங்களுடைய சூழ்நிலைக்கு பொருந்துகிற வாழ்க்கையை வாழ்வார்கள். அதற்கு நம் நாடு வல்லரசாக வேண்டும்.கிராம இளைஞர்களுக்கான உறுதி மொழி


1. குழந்தைகள் நம்முடைய விலை மதிப்பில்லாத சொத்து
2. நாம் பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் சமமாக கருதி, அவர்களின் உரிமைக்காகவும் கல்வி வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபடுவோம்.
3. சுகாதாரம் மற்றும் வளமையான நலவாழ்வுக்காக நாம் எல்லோரும் சிறு குடும்பத் திட்டத்தை கடைபிடிப்போம்.
4. கடின உழைப்பால் வருமானம் கிடைக்கிறது. அதை நாம் மதுபானம் மற்றும் சூதாட்டத்தில் வீணாக்க மாட்டோம்.
5. நம்முடைய குழந்தைகளுக்கு கல்வியறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவோம். ஏனெனில் கற்பதால் அறிவு வளரும். அறிவாற்றலால் குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம் அடைவர்.
6. நாம் எல்லோரும் மண்வளத்தையும் காடுவளத்தையும் சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க முயற்சி செய்வோம்.
7. நாம் எல்லோரும் குறைந்தபட்சம் ஐந்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம்.
8. நாம் நம்முடைய குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்போம்.- மீண்டும் சந்திப்போம்


உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...- டாக்டர் அப்துல் கலாம் -

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us