கிராமப்புற வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி!

எழுத்தின் அளவு :

கிராமப்புற மாணவர்களின் மனதுக்கு தெம்பூட்டும் விதமாக டாக்டர் அப்துல் கலாம் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் இதோ...


மன எழுச்சி அடைந்துள்ள, 54 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும்.


இதற்காக கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை உரிய வகையில் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்பு திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்த திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை பெறுவார்கள்.


இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சார்ந்து வாழ்வதால், இந்தியாவின் உண்மையான வளர்ச்சி கிராமப்புற வளங்களை மையமாக கொண்டே இருக்கிறது.


இதுவே வளமான இந்தியா 2020ன் முக்கிய அம்சமாகும். கிராமப்புறங்களில் கல்வித் தரத்தை மேம்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க முதலில் அதற்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.


கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையிலான சமூக, பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். சுத்தமான தண்ணீர், தேவையான எரிசக்தி போன்றவை எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.


விவசாயம் தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்து செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.


சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி, பண்பாடு நிறைந்த தரமான கல்வி, அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை மாற்ற வேண்டும்.


விஞ்ஞானிகளுக்கும், அறிவார்ந்த வல்லுனர்களுக்கும், தொழில் முதலீட்டாளர்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஓர் இடமாக, நாடாக இந்தியாவை மாற்றுவோம். தரமான மருத்துவ வசதி அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்றுவோம்.


ஒரு பொறுப்பான வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை அமைந்த நாடாக இந்தியாவை மாற்றுவோம்.


வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.


ஓர் இனிமையான வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க வளர்ச்சிப் பாதையை நோக்கி வீறு நடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்றுவோம்.


உலகிலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும் வளமான இந்தியாவை நோக்கி வழி நடத்தி செல்லக்கூடிய தலைவர்களைப் பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்றுவோம்.


நண்பர்களே... நாம் பேசினால் மட்டும் போதாது. ஒவ்வொருவரும் செயலில் இறங்க வேண்டும். நீங்கள் அனைவரும் இன்று ஒரு பக்கத்தில் எழுதிக் கொள்ளுங்கள். அதாவது நான் எந்த செயலுக்காக நினைக்கப்படுபவனாக இருப்பேன் என்பதை எழுதுங்கள். பறக்கும் மணித்துளிகளை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.


வாழ்க்கையில் லட்சியத்தை மேற்கொள்வோம். அந்த லட்சியத்தை அடைய தேவையான கல்வி அறிவை தேடிப் பெறுவோம். விடாமுயற்சியுடன் அந்த லட்சியம் வெற்றி பெற உழைப்போம். மிகப்பெரிய லட்சியத்தை அடைய உழைக்கும் போது தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்து வெற்றி காண்போம்.


புத்தாண்டு வாழ்த்துக்கள்.


- டாக்டர் அப்துல் கலாம்
  ***** 


திருக்குறளுக்கு அப்துல்கலாம் தெளிவுரை


 


தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு


 


நெருப்பின் சக்தியால் பல சமயங்களில் விபத்து ஏற்பட்டு உடலில் துன்பத்தை கொடுக்கும் புண் ஏற்படும். மருந்து கொடுத்தால் அந்த புண் ஆறிவிடும். ஆனாலும் அந்த புண்ணின் வடு இருந்து கொண்டே இருக்கும்.மனிதருடைய நாவு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய சக்தி வாய்ந்த உறுப்பு. நாம் ஒவ்வொருவரும் பேசும் போது எப்போதுமே அவர் - நமக்கு தீங்கிழைத்திருந்தாலுமே, கண்டிக்கும் முறையில் நல்ல வார்த்தைகளை கூறி செப்பனிட வேண்டும்.


கொடூரமான வார்த்தைகளை கூறி எவரையும் திருத்த முடியாது. மாறாக அவ்வாறு உபயோகித்த வார்த்தைகளே நமக்கே எதிரியாகி தீங்கிழைத்தவர் நமக்கு முன்னே இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, அந்த கடுஞ்சொற்கள் நம்மை கொடுமைப் படுத்தும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us