கல்வியும் ஆன்மிகமும் சங்கமிக்க வேண்டும்!

எழுத்தின் அளவு :

அறிவியலில் கரை கண்டவர்கள் ஆன்மிக கருத்துக்களிலும் நாட்டம் கொண்டிருப்பது அரிது.


டாக்டர் அப்துல் கலாம் இவ்விரண்டும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை இங்கு விளக்குகிறார். இளம் நெஞ்சங்களில் எழுச்சியூட்டும் அவரது எண்ணங்கள், வருங்கால இந்தியாவை பிரகாசப்படுத்தும் வண்ணங்கள்.


இனி டாக்டர் அப்துல் கலாமின் எண்ணங்கள் எழுத்துக்களாக...


ஆன்மிகத்தையும் கல்வியையும் சங்கமிக்க செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமது உயர்ந்த சுயத்தை அறிந்து கொள்ள வேண்டும். பெருமை நிறைந்த கடந்த காலத்தையும், மகத்தான எதிர்காலத்தையும் இணைக்கும் சக்தி நாமே.


நமக்குள்ளே உறங்கிக் கிடக்கும் உள்ளார்ந்த சக்தியை கிளறிவிட்டு அது நம்மை வழிநடத்த செய்வோம். தவறுகளிலிருந்து தவறாமல் பாடம் கற்றுக் கொண்டு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை நாம் எட்டியாக வேண்டும். வளர்ச்சியடைந்த இந்திய தேசம், தோல்வி மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.


மகரிஷி பதஞ்சலியின் போதனைகளை கவனிக்க வேண்டும்: ஏதாவது உயர்ந்த குறிக்கோளால், ஏதாவது அசாதாரண திட்டத்தால் நீ ஈர்க்கப்படும் போது, உனது அனைத்து சிந்தனைகளும், அவற்றின் எல்லைகளை தகர்க்கின்றன. உனது மனம் அதன் வரையறைகளைக் கடக்கிறது. உனது சுய உணர்வு, அனைத்து திக்குகளிலும் விசாலமடைகிறது.


ஒரு புதிய உயர்ந்த அற்புத உலகத்தில் உன்னை நீயே காண்கிறாய். முடங்கிக் கிடந்த செயல்பாடுகள், திறமைகள் எல்லாம் புத்துயிர் பெற்று எழுச்சியடைகின்றன. எப்படி உயர வேண்டும் என்று உன்னைப் பற்றி இதுவரை நீ கனவு கண்டிருப்பதைக் காட்டிலும் எவ்வளவோ உயர்ந்த நபராக உன்னை நீயே கண்டறிகிறாய். இதுதான் அவர் உதிர்த்த யோக சூத்திரம்.


இது நம் அனைவருக்காகவுமே சொல்லப்பட்டுள்ள விளக்கம். ஒரு தேசத்தை உயர்த்துவது, அதன் மக்கள்தான். தங்களுடைய முயற்சிகளின் பலனாக, அந்த மக்களே தங்களுடைய உயர்ந்த தேசத்தின் முக்கியமான குடிமக்களாக வடிவெடுக்கிறார்கள். எழுச்சியடைந்த, வீறுகொண்ட மனங்கள்தான் இந்த பூமியில் மிகவும் சக்தி வாய்ந்த ஆதார வளம். நமது தேசத்தின் நூறு கோடி மக்கள் ஓர் அபார சக்தியாக மாறி, இந்தியாவை 2020க்குள் வளமான நாடாக்குவார்கள் என்பது என் முழு நம்பிக்கை.


1972ம் ஆண்டு என் குருவான பேராசிரியர் சதீஷ் தவான் ஒரு முக்கியமான திட்டத்தை வழி நடத்தி செல்லும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அந்த திட்டத்தை நிறைவேற்ற தேவையான வசதி வாய்ப்புகளையும் நிதி ஆதாரங்களையும் மனித வளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து அதோடு ஒரு அறிவுரையும் சொன்னார்.


‘கலாம், நாம் ஒரு வேலையும் செய்யாமலிருந்தால் நமக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் நாம் ஏதாவது ஒரு பெரிய காரியத்தை செய்ய முற்பட்டால், அதற்கு அவ்வப்போது பல பிரச்னைகள் உருவாகும். ஆனால் இந்த பிரச்னைகள் நமக்கு தலைமை தாங்கி நம்மை ஆக்கிரமிக்க, நாம் அனுமதிக்கக் கூடாது. மாறாக நாம் அந்த பிரச்னைக்கு தலைமை தாங்கி பிரச்னைகளை தோல்வியடைய செய்து வெற்றி பெற வேண்டும்’ என்றார்.


எஸ்.எல்.வி., திட்டத்தில் நான் பணி செய்து கொண்டிருக்கும் போது, 1978ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது எஸ்.எல்.வி., ராக்கெட்டை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் வேலை செய்து கொண்டிருந்தோம். திருவனந்தபுரத்தில் செய்த உதிரிப்பாகங்களை ஸ்ரீஹரிகோட்டாவில் கோர்க்கும் பணி நடந்து கொண்டிருந்தது.


அப்போது வங்கக் கடலில் தோன்றிய கடுமையான புயல் ஸ்ரீஹரிகோட்டாவை தாக்கியது. சாதாரணமான புயல் என்றால் அரை மணி நேரமோ, ஒரு மணிநேரமோ அல்லது அதிகபட்சமாக 2 மணி நேரமோ அடிக்கும். ஆனால் அந்த ஆண்டு அடித்த புயல் 28 மணி நேரம் ஸ்ரீஹரிகோட்டாவை சுற்றி சுற்றி அடித்தது. இதனால், எங்கள் வேலையில் இடையூறுகள் ஏற்பட்டன.


ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்துவிட்டன. அதே சமயம் எல்லாக் கட்டடங்களும் தப்பிவிட்டன. ஏனென்றால் எல்லா கட்டடங்களையும் 250 கி.மீ வேகத்தில் புயல் அடித்தாலும் தாங்கக் கூடிய விதத்தில் ஆர்.டி. ஜான் என்கிற தலைமை இன்ஜினியர் அருமையாக கட்டியிருந்தார். இந்த திட்டத்தின் படி, 1979ம் ஆண்டில் நாங்கள் எஸ்.எல்.வி., ராக்கெட்டை விண்ணில் செலுத்தினோம். ஆனால் சில கோளாறுகள் காரணமாக திட்டம் வெற்றி அடையவில்லை.


1980ம் ஆண்டில் மீண்டும் விடாமல் முயற்சி செய்தோம். ஜூலை 18ம் தேதி காலை மீண்டும் எஸ்.எல்.வி.,-3 ராக்கெட் ஏவப்பட இருந்தது. இது 40 கிலோ எடையுள்ள ரோகிணி செயற்கைக்கோளை முதன்முறையாக விண்ணில் கொண்டு செலுத்த வேண்டும். காலை 8.30க்கு ராக்கெட் புறப்பட வேண்டும். ராக்கெட்டின் திட்ட இயக்குனர் நான். என் அறையில் அதிகாலை 4.30க்கு நடந்த சம்பவம் இன்றும் என் மனக்கண் முன் நிற்கிறது.


என் நண்பர் தார்சேம் சிங் ரோகிணி செயற்கைக்கோளின் திட்ட இயக்குனர். அவர் குரு கிரந்த சாகிப் புனித நூலை படித்துக் கொண்டிருந்தார். ராக்கெட்டின் இயக்குனர் டாக்டர் சீனிவாசன் பகவத் கீதையிலிருந்து சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். நான் காலை நமாஸ் செய்து கொண்டிருந்தேன். பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் ஒரே பிரார்த்தனை திட்டம் வெற்றி அடைய வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன.


அறிவியல் சூழ்நிலையிலும் இந்த ஆன்மிக காட்சி இந்தியாவின் நாகரிக பாரம்பரியத்தை எடுத்துக் காட்டியது. அன்று, ரோகிணி செயற்கைக் கோளை வெற்றிகரமாக வானில் ஏவி, பூமியை சுற்றச் செய்தோம். எஸ்.எல்.வி., -3 திட்டம் இவ்வாறு சோதனைகளை தாண்டி அனைவருடைய ஒத்துழைப்பினாலும் பூரண வெற்றியடைந்தது.


இந்த நிகழ்ச்சி இந்தியா ஒரு பெரிய விண்வெளி சக்தியாக உருவாவதற்கு ஏதுவாக அமைந்தது. துன்பம் ஏற்படும் போது, நாம் துவண்டுவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து வாழ்வில் வெற்றி காண வேண்டும். நம் உள்ளத்தில் லட்சியம் இருந்தால், உறுதி இருந்தால், நமது குறிக்கோளில் நிச்சயமாக வெற்றியடையலாம்.


உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us