தீ விபத்துக்களிலிருந்து தடுக்கும் முறைகளை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்திடும் துறை பயர் இன்ஜினியரிங்.
தேவையற்ற தீ விபத்துக்களிலிருந்து கட்டடங்களையும் வாழ்வாதாரங்களையும் மனித உயிர்களையும் பாதுகாக்கும் கலையம்சம் கொண்ட விஞ்ஞானப் பிரிவே பயர் இன்ஜினியரிங் எனப்படுகிறது. தீ உருவாகக் காரணங்கள், தீ விபத்து ஏற்படும் போது அங்குள்ள மனிதர்களின் போக்கு, தீ விபத்தின் விளைவுகள், தீ விபத்தைத் தடுக்கும் உபகரணங்களாகிய அலாரம், ஸ்பிரிங்ளர் அமைப்புகள் போன்ற அனைத்தும் இத் துறையுடன் தொடர்புடையது தான். மனித உயிர்களையும் உடமைகளையும் காக்கும் பணியாக இருப்பதால் இத் துறை மகத்துவம் வாய்ந்த துறையாக கருதப்படுகிறது.
பயர் இன்ஜினியரிங் துறையில் அபாயகரமான சவால்கள் அதிகம் உள்ளன. தவிர பொதுச் சேவையில் தவறாத ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே இதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற முடியும். தீ விபத்துக்களைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பை வழங்குவதே இத் துறையின் தலையாய பணியாக இருக்கிறது. தீ விபத்து ஏற்பட்டுவிடும் சமயத்தில் விபத்தினால் ஏற்படும் இழப்பை முடிந்த அளவு குறைப்பவர்களும் இத் துறையினர் தான். தீ விபத்துக்களைத் தடுக்கும் உபகரணங்களில் தேவைக்கேற்ற மாறுதல்களைக் கொண்டு வருபவர்களும் இவர்கள் தான்.
பணி எப்படி? பயர் இன்ஜினியரிங் துறையில் ஷிப்ட் முறையில் பணியாற்றுவது சாதாரணமான ஒன்று. தீக்காயம், புகையை சுவாசிப்பது, தீயைத் தடுக்கும் வேதிப் பொருட்களைக் கையாளுவது போன்ற சூழ்நிலையை இவர்கள் கையாள வேண்டியுள்ளது. எனவே சமூக அக்கறை கொண்டவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள். பயர் இன்ஜினியரிங் துறையில் இணைபவர்கள் பொறுமை, தன்னம்பிக்கை, ஒழுக்கம், வேகம் மற்றும் விவேகம், நம்பிக்கை, குழுவாகப் பணியாற்றும் தன்மை ஆகியவற்றைப் பெற்றிருப்பது முக்கியம். புவியியல் ரீதியான தகவல்களை அறிந்தவராகவும் இருப்பது முக்கியம். தீயின் வகைகள், தீ அணைக்கும் முறைகள், தீயிலிருந்து பாதுகாக்கும் முறைகள் மற்றும் உபகரணங்களைப் பற்றியும் அறிந்திருப்பது அவசியம்.
துறைப் படிப்புகள் பயர் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., எம்.இ., ஆய்வுப் படிப்பு, சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு என பல்நிலைப் படிப்புகள் உள்ளன. பி.இ., பயர் இன்ஜினியரிங் படிக்க பி.எஸ்சி., வேதியியல் பட்டப் படிப்பை இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களுடன் படித்திருக்க வேண்டும். வயது 19 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
பொதுவாக இது 3 1/2 ஆண்டு காலப் படிப்பாகும். கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் படிப்பு முடித்தவர்கள் பயர் இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம். +2ல் வேதியியல், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் இத் துறையின் சான்றிதழ் படிப்பில் சேரலாம்.
உடற்தகுதி இத்துறைக்கான அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுவது நல்ல உடற்தகுதி தான். மேலும் குறைந்த பட்ச உயரமாக 160 செ.மீ., இருக்க வேண்டும். மார்பளவு 81 செ.மீ., இருப்பதுடன் குறைந்தது 5 செ.மீ., விரிவடைவதாகவும் இருக்க வேண்டும். கண்ணாடி அணியாதவராக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பணி வாய்ப்புகள் எங்கே? பயர் இன்ஜினியரிங்கில் பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களின் தீயணைப்புப் பிரிவுகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். மேலும் கல்வி நிறுவனங்கள், கன்சல்டிங் நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் பயர் இன்ஜினியரிங் படித்திருப்பவருக்கான வாய்ப்புகள் உள்ளன. மாபெரும் உற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலியக் கிணறுகள், டெக்ஸ்டைல் துறை, இயற்கை விவசாயத் துறை, வேதிப் பொருள் தயாரிப்பகங்கள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன. கட்டுமான நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், விமானத் துறை, எரிபொருள் தொடர்பான உற்பத்தித் துறை போன்றவற்றிலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இத்துறையின் தலைசிறந்த கல்வி நிறுவனமாகத் திகழ்வது நாக்பூரிலுள்ள நேஷனல் பயர் சர்வீஸ் கல்லூரி ஆகும். இதில் 3 1/2 ஆண்டு கால பி.இ., படிப்பு தரப்படுகிறது. இதன் இணைய தள முகவரி: www.nfscnagpur.nic.in