சமச்சீர் கல்வி கட்டாயம் தேவையா?... அது எப்படி இருக்க வேண்டும்?..... | Kalvimalar - News

சமச்சீர் கல்வி கட்டாயம் தேவையா?... அது எப்படி இருக்க வேண்டும்?.....ஜூன் 25,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

சமச்சீர் கல்வித் திட்டம்:

ஸ்டேட் போர்டு எனப்படும் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் வாரியம், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம் மற்றும் .எஸ்.எல்.சி. வாரியம் ஆகியவற்றை இணைத்து, ஒரே வாரியமாக்கி, சமச்சீர் கல்வியை வழங்கும் திட்டத்தை முந்தைய அரசு(தி.மு.) முன்வைத்து, அதன்பொருட்டு, பாடத்திட்டங்களை தயாரிக்க ஒரு நிபுணர் குழுவையும் தமிழக அரசு அமைத்து, பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, 1 மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு கடந்த 2010-2011 ம் ஆண்டுகளில் சமச்சீர் கல்வித்திட்டம் முதல்முறையாக அமல் செய்யப்பட்டது.அதனையடுத்து, 10 ம் வகுப்புவரை உள்ள இதர வகுப்புகளுக்கும்(2,3,4,5,7,8,9,10) 2011-2012 ம் ஆண்டு முதல் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று முந்தைய அரசு அறிவித்திருந்தது.

அரசியல் மாற்றங்கள்:

ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, சமச்சீர் கல்வித் திட்டம் ஆட்டம் கண்டது. சமச்சீர் கல்வியை புதிய அரசு தற்போதைக்கு நிறுத்தி வைப்பது என்று முடிவுசெய்தவுடன், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட, சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட, அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றமோ, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 1 மற்றும் 6 ம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்றும், இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆராய, தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி, முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதனையேற்ற தமிழக அரசும், 9 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்த குழு தனது பணியை தற்போது செய்து வருகிறது.

இந்தியாவில் கல்வி:

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும், கல்வியறிவு விகிதம் என்பது குறைவாகவே உள்ளது. 2011 ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நாட்டின் கல்வியறிவு விகிதம் 74.04 சதவீதமாக உள்ளது. பல நாடுகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவுதான். இந்திய நாடாளுமன்றத்தில் கல்வி உரிமை தொடர்பாக பலவிதமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும், அனைவருக்கும் கல்வி தடையின்றி கிடைக்கிறதா? குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முடிகிறதா? என்றால், தயங்காமல் வரும் ஒரே பதில், இல்லை என்பதுதான்.

இந்த முயற்சியில், கடைசியாக சேர்ந்திருப்பது கல்வி உரிமை சட்டம். மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, வீட்டின் அருகாமையிலேயே உள்ள பள்ளிகளில்(அது தனியார் பள்ளிகளாக இருந்தாலும்கூட), கட்டாய இலவச கல்வி அளிக்க வகைசெய்கிறது. அதேசமயம், இதை பல தனியார் பள்ளிகள் எதிர்த்து வழக்கு தொடுத்தும் வருகின்றன. ஆனால், அவர்களால் நீதிமன்றங்களில் சாதகமான தீர்ப்புகளை பெற முடிவதில்லை. தனியார் பள்ளிகளில் இந்த இலவச கல்விக்கென ஒதுக்கீடு உண்டு.

நிர்வாக சீர்கேடுகளால், அனைவருக்கும் அடிப்படை கல்வியை வழங்குவதே அரசுகளுக்கு சவாலாக இருக்கும் வேளையில், இன்று நடைமுறையில் இருக்கும் கல்விமுறைகளிலும் நிறைய பாகுபாடுகள் இருப்பது வெளிப்படையாக அனைவரும் அறிந்த ஒன்றுதான். .சி.எஸ்.., சி.பி.எஸ்.., மெட்ரிக், .எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன், ஸ்டேட்போர்டு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. இவற்றில் முதல் 2 பிரிவுகள், அதிக செலவு பிடிக்கும் படிப்புகளாகவும், மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே எட்டக்கூடியவைகளாகவும் உள்ளன.

மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் மற்றும் .எஸ்.எல்.சி. படிப்புகள் நடுத்தர மக்களால் சமாளிக்கக்கூடியவைகளாக உள்ளன. சாதாரண மற்றும் அடித்தட்டு மக்களால் சமாளிக்கக்கூடிய படிப்பாக ஸ்டேட்போர்டு படிப்பு மட்டுமே உள்ளது. ஸ்டேட்போர்டு படிப்பை அரசு பள்ளிகள் தவிர்த்த, அரசு உதவிபெறும் மற்றும் உதவிபெறாத தனியார் பள்ளிகளும் நடத்துகின்றன. ஒரே பாடத்திட்டமாக இருந்தாலும், பள்ளிகளுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடுகிறது.

சமச்சீர் கல்வியின் தொடக்கம்:

முனைவர் திரு.. முத்துக்குமரன் தலைமையிலான ஒரு நபர் குழுவின் ஆய்வறிக்கை அடிப்படையிலும், கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையிலும், கடந்த 2010 ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், 'சமச்சீர் பள்ளி கல்விமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு முன்பாக, சமச்சீர் கல்வி தொடக்க செயல்பாடுகளுக்கான அனுமதி, 2009 ம் ஆண்டு வழங்கப்பட்டது.

கடந்த 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த அரசு, தனது தேர்தல் அறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வியை வழங்கிடும் வகையில், தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிபுணர் குழுக்களின் ஆய்வுகள் அடிப்படையில், பாடத்திட்டங்கள் வெகு விரைவில் தயாராகி, இணையதளத்தில் வெளியிடப்பட்டு, மக்கள் கருத்துக் கேட்பு வைபவங்களும் நிகழ்ந்தன. கடந்த 2010-2011 ம் கல்வியாண்டில் 1 மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித்திட்டம் அமல் செய்யப்பட்டது. 2011 கல்வியாண்டு முதல் 10 ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்துவது என்று இருந்தபோதுதான், சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றதாக இருக்கிறது என்று அதை புதிய அரசு நிறுத்திவைக்க முயற்சித்து, தற்போதைய சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன.

சமச்சீர் கல்வி வரைவு திட்டத்தின் குறைபாடுகளாக கல்வியாளர்கள் கூறுவது:

சமச்சீர் கல்வியை பரிந்துரைக்க, அரசு நிர்ணயித்த . முத்துக்குமரன் கமிட்டியின் பரிந்துரைகளில் எவை-எவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் எந்த முறையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டது போன்ற விவரங்கள் தெரியவில்லை. மேலும் ஏற்கனவே கூறியதைப் போல, பாடத்திட்டம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு, அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இது கடும் ஆட்சேபத்திற்குரியது. கருத்து கேட்பு வைபவங்கள் சம்பிரதாயமாகவே நடத்தப்பட்டன. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டங்கள் பற்றிய ஒப்பாய்வு அறிக்கைகள் இல்லை. மேலும், புதிய பாடத்திட்டத்தில் பாடங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தன்மை குறித்து ஒரு முகப்புரையும் எழுதப்படவில்லை.

இதைத்தவிர, இதுவரை நடைமுறையில் இருந்துவந்து, மாணவர்களுக்கு பெருமளவில் துணைபுரிந்த துணைப்பாட திட்டங்கள், இந்த புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறவில்லை. மேலும், பாடங்களை தயாரித்து, முடிவுசெய்ய எடுத்துக்கொள்ளப்பட்ட கால அளவு மிகவும் குறைவு. இவ்வளவு குறுகிய காலத்தில் சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவரும் என்று நம்பப்படும் ஒரு கல்வித்திட்டத்தை எப்படி தயாரித்தார்கள் என்பது பெரும் கேள்விக்குரிய ஒன்றாக இருக்கிறது.

கடந்த அரசின் கல்வி அமைச்சர் ஒருமுறை பேசும்போது, 'சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டாலும், தற்போது நடைமுறையில் இருக்கும் மெட்ரிக் வாரியம் தொடர்ந்து இருக்கும் என்று பேசினார். இது மிகவும் ஒரு முரண்பட்ட கருத்தாகும். மெட்ரிக் வாரியங்கள் தொடர்ந்து இயங்கினால், சமச்சீர் கல்வியை எவ்வாறு செயல்படுத்துவது? என்ற கேள்வி இயற்கையாகவே எழும். மெட்ரிக் வாரியம் தொடர்ந்து இயங்கினால், கல்விக் கொள்ளையை தொடர்வதற்குத்தானே வழி ஏற்படும்.

மேலும், பாடத்திட்டங்களை மாற்றினால் மட்டுமே அனைத்தும் மாறிவிடாது. இன்றைக்கு, அவல நிலையில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது முதல் தேவையாகும். போதுமான வசதிகள் இன்றி, தரமான கல்வியை அளிப்பதென்பது வீண். அதிகளவில் தரமான ஆசிரியர்களும் இருக்க வேண்டும்.

சில வகுப்புகளுக்கான தமிழ் பாடத்திட்டங்களில், வழிபாட்டு பாடல் என்ற பிரிவு உள்ளது. மதசார்பின்மை நாட்டில் இதுபோன்ற சேர்க்கைகள் சரியா? என்ற கேள்வி எழுகிறது. சமூகவியல் பாடத்தில் சோஷலிச கருத்துக்கள் இல்லை மற்றும் பல சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளின்(உதாரணமாக, பெரியார், அம்பேத்கர், ஜோதிபா கோவிந்தபுலே) வரலாறுகள் முறையாக இடம்பெறவில்லை.

முற்போக்கு சிந்தனையாளர்களான சித்தர்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. பிரெஞ்சு புரட்சி மற்றும் சீன நாகரீகம் போன்ற முக்கிய விஷயங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. கடையேழு வள்ளல்களைப் பற்றி குறிப்பிடாமல், மூவேந்தர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. பரிணாமக் கோட்பாடு பற்றியும் பேசப்படவில்லை.

தமிழ் மொழியின் மாண்பு குறைக்கப்பட்டு, அதுவெறும் மூன்றாவது மொழி என்ற நிலையில் ஆக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி எப்படி இருக்க வேண்டும்?

சமச்சீர் கல்வி என்பது வெறும் பாடத்திட்டம் சம்பந்தப்பட்டதல்ல. அது சமூக மாற்றம் தொடர்பானது. இந்திய அரசியல் அமைப்பில் கூறப்படும் சமதர்மம் மற்றும் மதசார்பின்மையை வலியுறுத்தி, அதை சமூகத்தில் நிலைநிறுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை போக்கும் ஒரு மாபெரும் கருவியாக இருக்க வேண்டும்.

மேலும், சமச்சீர் கல்வி என்பது வெறும் பாடத்திட்டம் என்ற அளவில் புரிந்துகொள்ளப்படுவது வருத்தத்திற்கு உரியது. அது சமூக மாற்றத்திற்கான ஒரு படிக்கல். வெறும் பாடத்திட்டம் என்ற அளவில் அதை சுருக்குவதால், எந்தவித முன்னேற்றமும் சமூகத்தில் ஏற்பட்டுவிடாது.

சமச்சீர் கல்வியில் 4 வகை அம்சங்கள் இருக்க வேண்டும்...

* மாநிலத்திற்குள் சமநிலை என்பது முதல் அம்சம்.

* மாநிலங்களுக்கு இடையே சமநிலை என்பது இரண்டாவது அம்சம். அதாவது, பிற மாநிலங்களின் பொதுப்பள்ளி கல்விக்கு எந்தவகையிலும் குறைந்திடாத வண்ணம், கல்வித்திட்டம் இருக்க வேண்டும்.

* மாநில கல்வி முறைக்கும், மத்திய கல்வி முறைக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும் என்பது மூன்றாவது அம்சம்.

* மாநிலத்திற்கும், உலகளாவிய பொதுக்கல்வி முறைக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும் என்பது நான்காவது அம்சம்.

இந்த அம்சங்களை கவனத்தில் கொண்டதாய், சமச்சீர் கல்வித்திட்டம் இருக்க வேண்டும். அதையல்லாமல், அவசரக் கோலத்தில் உருவாக்கப்பட்ட விஷயமாக இருந்தால், அது சமச்சீர் கல்வியாக இருக்காது.

கல்வி வியாபாரம்:

அதிக லாபம் தரக்கூடிய ஒரு தொழில்துறை என்ன என்று இன்றைய நிலையில் கேட்கப்பட்டால், 'கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதுதான்' என்று தயங்காமல் பதில் சொல்லலாம். அந்த அளவிற்கு, கல்வி வியாபாரமாக்கப்பட்டு, கல்விக் கொள்ளைகள் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டுள்ளன. கையில் பணம் இருப்பவர்கள் எல்லாம் இன்று சற்றும் யோசிக்காமல், தமக்கு அந்த தகுதி துளியளவேனும் இருக்கிறதா? என்று சிறிதும் கவலைப்படாமல், பள்ளிகளையும், கல்லூரிகளையும் நிர்மாணித்து நடத்துகின்றனர்.

சமூகத்தில் மிக மோசமான பின்னணிகளைக் கொண்டிருந்த மற்றும் கொண்டிருக்கும் பலர், இன்று கல்வித் தந்தைகளாக காட்சியளிக்கின்றனர். சமூகம் எங்கே போய்க்கொண்டுள்ளது! என்பதே பல சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது. இதற்கு 'உண்மையான சமச்சீர் கல்வி' மூலமாக, அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே பலரது விருப்பம்.

அரசின் நடவடிக்கை:

குறைபாடுகள் உள்ளது என்றுகூறி, சமச்சீர் கல்வியை நிறுத்திவைத்த இன்றைய அரசு, அவற்றை மீண்டும் ஆராய, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு தனது பணியை முடிக்க குறுகியகால அவகாசமே உள்ளது. ஏற்கனவே, சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள், அவசர கதியில் தயாரிக்கப்பட்டதால், தரமற்றதாக உள்ளன என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே இந்தக்குழு எவ்வாறு தனது பணியை அந்த குறுகிய காலத்திற்குள் முடிக்கும்.

சமச்சீர் கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பானது மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் எதிர்காலமே அதில் அடங்கியுள்ளது. எனவே சமூகத்தின் எதிர்பார்ப்பை குழுவால் நிவர்த்தி செய்ய முடியுமா? என்பதே அனைவரின் கவலையான உள்ளது. இந்த குழுவில் திருமதி. ஒய்.ஜி. பார்த்தசாரதி உள்ளிட்ட பெரும் கல்வி முதலாளிகள் 2 பேர் இடம்பெற்றுள்ளனர் என்ற வலுவான விமர்சனமும் உள்ளதை மறுக்க முடியாது.

எனவே, ஒரு அரசிற்கு, சமூகம், ஏற்றத் தாழ்வுகளை கடந்து முன்னேற வேண்டும் என்ற அக்கறை உண்மையிலேயே இருந்தால், சமச்சீர் கல்வியின் குறைகள் களையப்பட்டு, வெறும் பாடத்திட்ட மாற்றம் என்ற நிலை மாறி, சமூக மாற்றம் என்ற புரிதல் ஏற்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சிறந்த சமூக மேம்பாட்டிற்கு, முறையான சமச்சீர் கல்வி கட்டாயம் தேவை என்பதே சமூக ஆர்வலர்கள் அனைவரின் கருத்தாக உள்ளது!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us