பாரம்பரியமிக்க பிரிட்டன் கல்வியில் அனுபவமே தனிதான்! | Kalvimalar - News

பாரம்பரியமிக்க பிரிட்டன் கல்வியில் அனுபவமே தனிதான்!டிசம்பர் 04,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

வெளிநாட்டுக் கல்வி என்றாலே, ஒரு காலத்தில், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள்தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்றைய நிலையில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, ஹாலந்து, சிங்கப்பூர், சீனா, ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் மாணவர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. ஆனாலும், மாணவர்களின் பழைய இலக்கான பிரிட்டன் இன்னும் தனது பெருமையை இழக்காமல், வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் முன்வரிசையிலேயே நீடிக்கிறது.

இன்று நாம் உட்பட மேற்கத்திய நாடுகள் அறிந்துள்ள நவீன கல்வி என்பது, பிரிட்டனின் கல்வி முறை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதே. பிரிட்டனிலுள்ள உலகப்புகழ் பெற்ற பல்கலைகளான ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் போன்றவை சுமார் 800 ஆண்டுகள் பழமையுடையவை. அதேசமயம், குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் பழமை கொண்ட பல கல்வி நிறுவனங்களும் அந்நாட்டில் நிறைய உள்ளன. உலகத்திலுள்ள பல பல்கலைகள், தங்களை, ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகளின் மாதிரியில் அமைத்துக் கொண்டுள்ளன.

கண்டுபிடிப்புகளின் நிகழ்விடம்

இன்றைய உலகில் வெளிவரும் பல புதிய கண்டுபிடிப்புகள், அமெரிக்காவின் பெயரிலேயே வெளிவருவதைப் பார்க்கலாம். ஆனால், உண்மையில் அந்த ஆராய்ச்சிகள், பிரட்டன் பல்கலைகளில் நடைபெறுபவையே. இத்தகைய ஆராய்ச்சிகளுக்கான நிதியுதவியை அமெரிக்க நிறுவனங்கள் செய்வதால், அவை அமெரிக்க கண்டுபிடிப்புகளாக வெளிவருகின்றன.

அணுவைப் பிளந்த ரூதர்போர்டின் ஆராய்ச்சி, கடந்த 1920களில் பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலையிலேயே நடைபெற்றது. முதல் குளோனிங் ஆடு உருவாக்கமும் பிரிட்டனிலுள்ள ரோஸ்லின் கல்வி நிறுவனத்தில்தான் நடைபெற்றது. இதுபோன்ற பல உதாரணங்களைக் கூறலாம்.

பன்மை கலாச்சாரம்

உலகின் முதல் ஜனநாயக நாடாக திகழ்கிறது பிரிட்டன். இங்கே, பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பிரிட்டனின் கலாச்சாரத்தோடு ஒத்து வாழ்ந்தாலும், தங்களின் கலாச்சார தனித்துவத்தை இழக்காமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பது ஒரு சிறப்பம்சம். எனவே, இந்நாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்கள், பலவிதமான மனிதர்களின் வாழ்க்கை முறைகளைக் கண்டு, அதன்மூலம் ஒரு சிறந்த அனுபவத்தைப் பெறலாம்.

பிரிட்டனின் பல பல்கலைகள், அரசாங்கத்தின் நிதியுதவி பெறுபவை. எனவே, இவற்றின் பாடத்திட்டம், உள்கட்டமைப்பு மற்றும் கற்பித்தல் தரம் ஆகியவற்றில் ஒரு குறைந்தபட்ச தரஅளவு பின்பற்றப்படும்.

பாடத்தையும் தாண்டி...

பிரிட்டன் கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கு பரந்தளவிலான அறிவைத்தர முயற்சிக்கின்றன. அனைத்துவிதமான விளையாட்டுக்களும் வளாகங்களில் உண்டு. இங்குள்ள மாணவர் மன்றங்கள் பலவிதமான Extra curricular activities -களில் ஈடுபடுகின்றன.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்றவை ஆங்கில நாடுகள் என்றாலும், அது ஆங்கிலேயர்களின் பூர்வீக நாடுகளல்ல. குடியேறி கைப்பற்றிய பகுதிகளே. ஆனால், பிரிட்டன் மட்டுமே அவர்களின் பூர்வீக நாடு. எனவே, அங்கே வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

வேலை வாய்ப்புகள்

படிப்பு நேரத்தில் 20 மணிநேரமும், விடுமுறை நாட்களில் முழுநேரமும் பணிபுரிய, மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். படிப்பை முடித்தப் பின்பாக, உங்களுக்கு அந்நாட்டில் எங்கும் உடனடி வேலை கிடைக்காத சூழலில், உங்கள் மாணவர் விசாவில் நீங்கள் வைத்திருக்கும் 4 மாதங்கள் மட்டுமே, அங்கு தங்கி வேலைத்தேட அனுமதிக்கப்படுவீர்கள். அந்த காலஅளவு முடிவடைந்த பின்பாக, நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்கு திரும்பியாக வேண்டும் அல்லது உலகில் வேறு எங்காவது வேலைத்தேடி செல்லலாம்.

பிரட்டனில் படித்த ஒருவருக்கு, மத்திய கிழக்கு நாடுகள், இதர ஆசிய நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் எளிதாக பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்நாடுகளில், பிரிட்டன் கல்வித்தகுதி பெரிதும் மதிக்கப்படுகிறது.

அதிகளவு இந்தியர்கள் படிக்கும் பிரிட்டன் பல்கலைகள்

கேம்ப்ரிட்ஜ் பல்கலை

லன்காஸ்டர் பல்கலை

மிடில்செக்ஸ் பல்கலை

நாட்டிங்ஹாம் பல்கலை

ஆக்ஸ்போர்டு பல்கலை

கார்டிப் பல்கலை

லீட்ஸ் பல்கலை

மான்செஸ்டர் பல்கலை

செப்பீல்டு பல்கலை

ஸ்ட்ராத்கிளைடு பல்கலை

வார்விக் பல்கலை

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us